இனி மருத்துவ காப்பீடு பெறுவதற்கு ஆதார் கட்டாயமில்லை!!

தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தில் மருத்துவக் காப்பீடு பெறுவதற்கு ஆதார் கட்டாயமில்லை என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது! 

Last Updated : Jul 14, 2018, 03:24 PM IST
இனி மருத்துவ காப்பீடு பெறுவதற்கு ஆதார் கட்டாயமில்லை!! title=

தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தில் மருத்துவக் காப்பீடு பெறுவதற்கு ஆதார் கட்டாயமில்லை என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது! 

இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அது வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் அடையாள எண் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் 10 கோடி ஏழைக்குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மருத்துவக் காப்பீடு வழங்கும் தேசிய சுகாதாரப் பாதுகாப்பு திட்டம், அக்டோபர் 2 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனக் கடந்த 12 ஆம் தேதி மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா சார்பில் நேற்று செய்திக்குறிப்பு ஒன்று வெளியானது. அதில், "ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு அடையாள அட்டை வழங்கும் போது ஆதார் அட்டைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும், ஆனால் அதனை கட்டாயப்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளது. 

ஆதார் எண் இல்லை என்பதற்காக பயனாளிக்கு கிடைக்கும் காப்பீடு சலுகைகள் நிறுத்தப்படாது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருத்துவ காப்பீடு கிடைக்க பயனாளிகளின் அடையாளத்துக்கு ஆதார் அட்டை அல்லது வேறு ஏதாவது அடையாள அட்டை கொண்டு வரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

Trending News