உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.தற்போது கள்ளச்சாராயத்துக்கு எதிராகவும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இது தொடர்பாக சட்டசபையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சினால் ரூ.10 லட்சம் அபராதம், ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அது மாநில கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதனை பரிசீலித்த கவர்னர் ராம்நாயக் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.
இதற்கிடையே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பதிவு செய்யப்பட்ட 20 ஆயிரம் வழக்குகளை ரத்து செய்ய வகை செய்யும் சட்ட திருத்தத்துக்கும் கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். அவற்றில் சில வழக்குகள் மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத் மீது உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
யோகி ஆதித்யநாத் மீது 22 ஆண்டுகளுக்கு முன்பு தடையை மீறியதாகவும், சட்ட விரோதமாக கூட்டங்களை கூட்டியதாகவும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இன்னமும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளும் வாபஸ் ஆகிறது.