ஆன்மிக நம்பிக்கையால் தற்கொலையா?: டெல்லி 11 பேர் மர்ம மரண விவகாரத்தில் தொடரும் மர்மம்!
நேற்று டெல்லி புராரி சாண்ட் நகரில் உள்ள பகுதியில் ஒரு பூட்டிய வீட்டில் 11 பேர் மர்மகாக இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் 10 பேர், கண் மற்றும் வாய் பகுதி துணியால் கட்டப்பட்டு தூக்கிட்டநிலையில் இருந்தனர். 77 வயது மூதாட்டி, தனி அறையில் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இது தற்கொலையா... கொலையா? என குறித்துகாவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்களது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட கடிதங்கள் குறித்து காவல்துறை தெரிவித்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கடிதத்தில், 'மனித உடல் என்பது தற்காலிகமானது. ஒருவர், கண் மற்றும் வாயை மூடிக்கொள்வதன்மூலம் பயத்தைக் கடந்துவிடலாம். இந்த 11 பேரும் இந்தச் சடங்குகளைப் பின்பற்றினால் எல்லாப் பிரச்னைகளும் எளிதாகத் தீர்ந்து, முழுமையாக ரட்சிக்கப்படலாம்' என்று உள்ளது என காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
மேலும், அவர்கள் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட அனைத்து குறிப்புகளிலும் வாழ்க்கையை முடித்து கொள்வது பற்றியும், அமைதியை அடைவது பற்றியுமே உள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. ஆன்மிகம் சார்ந்த மூட நம்பிக்கையின் காரணமாக இவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதும் காவல்துறை, அந்தக் குடும்பத்துக்கு இந்த மாதிரியான ஆன்மிக போதனைகளை வழங்கியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தவுள்ளனர்.
இது குறித்து இறந்த குடும்பத்தினரின் உறவினர், 'இந்தக் குடும்பத்துக்கு எந்த விதமான பொருளாதரப் பிரச்னைகளும் இல்லை என்று வங்கி லோன்கூட கிடையாது. அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொள்ள வேண்டும். அவர்களை, கொலை தான் செய்யப்பட்டிருக்கிறார்கள்' என்று தெரிவித்தார். டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம்குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.