ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: 66 பொருட்களுக்கு வரி குறைப்பு

Last Updated : Jun 12, 2017, 09:40 AM IST
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: 66 பொருட்களுக்கு வரி குறைப்பு title=

டெல்லியில் நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 66 பொருள்களுக்கான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 16-வது கூட்டம் டெல்லியில் நேற்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-

66 பொருள்களுக்கு மொத்தம் 133 பொருள்களுக்கான ஜிஎஸ்டி-யைக் குறைக்க வேண்டுமென்று பரிந்துரை வந்திருந்தது. இதில், 66 பொருள்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. லாட்டரி உள்ளிட்டவை மீதான வரி குறித்து வரும் 18-ம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார்.

ஜிஎஸ்டி எதிர்பார்ப்புகள்:-

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு தாற்காலிகமாக பணவீக்கம் அதிகரித்தாலும், அதன்பிறகு பொருள்களின் விலை குறைந்து பணவீக்கம் கட்டுக்குள் வரும் என்று கருதப்படுகிறது.

ஜிஎஸ்டி-யால் இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1 முதல் 2 சதவீதம் வரை அதிகரிக்கும். அதே நேரத்தில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் வந்து பணவீக்கம் 2 சதவீதம் அளவுக்குக் குறையும்.

திரைப்படத் துறையினரின் கோரிக்கையை ஏற்று ரூ.100 மற்றும் அதற்கு குறைவான சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி 28% இருந்து 18% குறைக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்கு கூடுதலான சினிமா டிக்கெட்டுக்கான வரி 28% தொடரும்.

கம்ப்யூட்டர் பிரிண்டர்கள், கண் மை ஆகியவற்றுக்கான வரி 28% இருந்து 18% குறைக்கப்பட்டுள்ளது.

சிறார்கள் வண்ணம் தீட்டப் பயன்படுத்தும் ஓவியப் புத்தகங்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. முன்பு இதற்கு 12% ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவ, மாணவியர் பயன்படுத்தும் பள்ளி புத்தகப் பைகளுக்கான ஜிஎஸ்டி 18% குறைக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் இன்சுலின் மருந்துக்கான வரி 5% குறைக்கப்பட்டுள்ளது. முன்பு இன்சுலினுக்கு 12% வரி அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல அகர்பத்திக்கான வரி 5% குறைக்கப்பட்டுள்ளது.

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் சிலவகைப் பழங்கள், காய்கறிகள், உணவுப் பொருள்கள், ஊறுகாய் வகைகள், கடுகில் இருந்து தயாரிக்கப்படும் சாஸ் மற்றும் ஜாம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி 18% இருந்து 12% குறைக்கப்பட்டுள்ளது. முந்திரிப் பருப்புக்கான வரி 5% குறைந்துள்ளது. முன்பு இது 12% இருந்தது.

பிளாஸ்டிக் தார்ப்பாய், டிராக்டர் உதிரி பாகங்கள், சிறிய கத்தி, ஸ்பூன் உள்ளிட்ட சமையலறைப் பொருள்கள், உடற்பயிற்சி தொடர்பான புத்தகங்கள் ஆகியவற்றுக்கும் வரி குறைக்கப்பட்டுள்ளது.

ஜவுளித் துறை, வைரம் பட்டை தீட்டுதல், தோல் பதனிடுதல், நகைத்தொழில், அச்சுத் தொழில் ஆகியவற்றில் ஒப்பந்தம் மூலம் பணிகளை (ஜாப் ஒர்க்) செய்து தருபவர்களுக்கு ஜிஎஸ்டி வரி 5% குறைக்கப்பட்டுள்ளது. முன்பு இது 18% அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சலுகை மூலம் இத்துறையில் பணி ஒப்படைப்புகள் அதிகரித்து வேலைவாய்ப்பு பெருகும்.

மாநில அரசுகளிடம் இருந்து கருத்துகளைப் பெற்ற பிறகு, பெட்ரோல் மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் ஹைபிரிட் வாகனங்களுக்கான வரியைக் குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்.

Trending News