Congress Loss Sanatan Dharma Issue: சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் வாக்குப்பதிவில் இன்று ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா உள்ளிட்ட நான்கு மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. மிசோரம் மாநிலத்தில் மட்டும் நாளைக்கு (டிச. 4) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதுவரையிலான வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில் பாஜக மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைக்கும் நிலையில், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது.
ஆனால், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆறுதல் வெற்றி கிடைத்திருக்கிறது எனலாம். தென்மாநிலங்களில் அதாவது தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானாவில் காங்கிரஸ் சிறப்பான நிலையை எட்டியுள்ளது. கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் அவை எதிர்கட்சிகளாக நீடிக்கின்றன. இருப்பினும், பாஜக இப்போது அனைத்து தென்னிந்திய மாநிலங்களிலும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனால், வடமாநிலத்தில் நிலைமை தலைகீழ் எனலாம். வட இந்தியாவில் பாஜகவின் ஆதிக்கமும், தென்னிந்தியாவில் காங்கிரஸின் ஆதிக்கத்தையும் காண முடிகிறது.
உதயநிதியின் சனாதான சர்ச்சை
குறிப்பாக, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை பறிகொடுத்ததன் மூலம் மாநிலங்களவையிலும் காங்கிரஸ் பலவீனமாகி, பாஜக வலுவடைகிறது எனலாம். ராஜஸ்தானில் நிலவிய ஆட்சிக்கு எதிரான மனநிலை, கோஷ்டி பூசல் ஆகியவை தோல்விக்கு காரணம் என கூறினாலும், சத்தீஸ்கரில் பாஜகவின் முன்னிலை என்பது மிக மிக அதிர்ச்சிக்கரமானது. ஆனால், தொங்கு சட்டப்பேரவை அமையும் என கூறப்பட்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எவ்வித ஆதிக்கமும் இன்றி, பாஜகவிடம் பின்னடைவை சந்தித்துள்ளது மிகவும் கவனிக்கப்பட வேண்டியது எனலாம்.
மேலும் படிக்க | Madhya Pradesh Elections 2023: பாஜகவின் அடுத்த முதல்வர் யார்?
குறிப்பாக, காங்கிரஸ் மாநிலத் தலைவர் கமல்நாத், மென் இந்துத்துவ போக்கை கடைபிடித்ததன் மூலம் பாஜகவின் மதத்தை முன்னிலைப்படுத்தும் அணுகுமுறையை சமன் செய்யலாம் என எதிர்பார்த்தார். ஆனால் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்பதும், அந்த அணுகுமுறையை காங்கிரஸ் கையில் எடுத்தாலும் அது பாஜகவுக்குதான் சாதகமாகும் என்பதை மத்திய பிரதேச தோல்வி நிரூபித்துள்ளது. இந்த மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதான சர்ச்சையும் (Udhayanidhi Stalin Sanatan Dharma Issue) பெரும் தாக்கத்தை செலுத்தியதை குறிப்பிட்டாக வேண்டும்.
உதயநிதியால் வந்த பிரச்னை?
சனாதன தர்மம் தொடர்பான சர்ச்சை அதிகரித்ததில் இருந்தே, இந்த விவகாரத்தில் I.N.D.I.A கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியை பாஜக தலைவர்கள் தொடர்ந்து தாக்கினர். அதே நேரத்தில் அவர்களின் பொறிக்கு சிக்காமல் காங்கிரஸ் அமைதி காத்து வந்தது.
மத்திய பிரதேசத்தில் பிரபல ஆன்மீகத் தலைவர்களான பகேஷ்வர் தாமின் தலைவர் திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி மற்றும் பண்டிட் பிரதீப் மிஸ்ரா மற்றும் பலர் தங்கள் மதச் சொற்பொழிவுகளின் போது உதயநிதியின் சனாதான சர்ச்சை குறித்து பேசியதால் அவரை தேர்தல் நேரத்திலும் எதிரொலித்தது.
கமல்நாத்தின் மென் இந்துத்துவ போக்கு
பாஜகவின் இந்த அணுகுமுறையை எதிர்கொள்ள, கமல்நாத் கடந்த ஆகஸ்ட் மாதம் திரேந்திர சாஸ்திரி மற்றும் பிரதீப் மிஸ்ரா ஆகியோரின் ஆசிரமங்களுக்குச் சென்றது மட்டுமின்றி, அவரது சொந்த மாவட்டமான சிந்த்வாராவில் அவர்களின் மதச் சொற்பொழிவுகளுக்கும் ஏற்பாடு செய்தார். இருப்பினும், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா மற்றும் மாநில பாஜக தலைவர் வி.டி.சர்மா ஆகியோர் 'சனாதன தர்மம்' சர்ச்சை தொடர்பாக கமல்நாத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது வந்தனர் எனலாம்.
பிரதமர் மோடியின் தடாலடி
பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேசத்தில் ஒரு பிரச்சாரத்தின் போது பேசும்போது,'சனாதன் தர்மத்தை' அழிக்க 'கமண்டியா' கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்று கூறி, I.N.D.I.A கூட்டணியை கடுமையாக சாடினார். "இன்று அவர்கள் வெளிப்படையாக சனாதன தர்மத்தை குறிவைக்க ஆரம்பித்துவிட்டனர், வருங்காலத்தில் அவர்கள் நம் மீதான தாக்குதல்களை அதிகப்படுத்துவார்கள். நாடு முழுவதும் உள்ள அனைத்து சனாதனிகளும், நம் நாட்டை நேசிக்கும் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றது குறிப்பிடத்தக்கது.
கமாண்டியா - I.N.D.I.A
பிரதமர் மோடி பினா நகரில் ஆற்றிய அந்த உரையின் போது, எதிர்க்கட்சியான I.N.D.I.A கூட்டணியை 'கமாண்டியா' என்றும் சுமார் 10 முறைக்கும் மேல் பயன்படுத்தியிருப்பார். சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் அந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டியதும் இங்கு நினைவுக்கூரத்தக்கது.
உதயநிதி ஸ்டாலினின் சனாதான சர்ச்சை மட்டுமே மத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் தோல்விக்கு காரணம் என கூற முடியாது என்றாலும், அங்கு நிலவும் பாஜக ஆட்சிக்கு எதிரான மனநிலையை காங்கிரஸால் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போனதற்கு இந்த சனாதான சர்ச்சை முக்கிய பங்கு வகித்தது என்பதை மறுப்பது கடினம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ