Lok Sabha Election Result 2024 Live Update: 18ஆவது மக்களவை தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. மொத்தம் 543 மக்களவை தொகுதிகளில் 272 தொகுதிகளை வெல்லும் கட்சியோ அல்லது கூட்டணியோ ஆட்சியை அமைக்கும். மக்களவை தேர்தல் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகளும், 26 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகி வருகின்றன.
கடந்த 2014 மக்களவை தேர்தலில் 282 தொகுதிகளையும், 2019 தேர்தலில் 303 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றி ஆட்சியமைத்தது. அதே நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் 2014 தேர்தலில் 44 தொகுதிகளையும், 2019 தேர்தலில் 52 தொகுதிகளையும் கைப்பற்றி படுதோல்வியடைந்தது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த முறை இருந்த அதிமுக, சிரோன்மணி அகாலி தளம் ஆகியவை தற்போது இல்லை. மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி பிளவுப்பட்டுள்ளது. இப்படி பல பிரச்னைகள் இருந்தாலும் நாங்கள் 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என பாஜக தொடர்ந்து பிரச்சாரம் செய்தது. Exit Poll முடிவுகளும் பாஜக 350+ இடங்களையே பெறும் என்றே கணித்துள்ளன.
மறுபுறம், காங்கிரஸ் கட்சியோ பாஜகவின் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா கூட்டணியை உருவாக்கி அதன் பேரில் இந்த தேர்தலை சந்தித்துள்ளது. பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கம், உள்ளிட்ட மாநிலங்களில் கடும் போட்டிகள் இருந்தாலும் நிச்சயம் 295 இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றும் என ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியமைத்து நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகி, நேருவின் சாதனையை நெருங்குவாரா அல்லது நேருவின் கொள்ளு பேரன் ராகுல் காந்தி அவர்களின் வியூகத்தை முறியடித்து, இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சியமைக்க உதவுவாரா உள்ளிட்ட கேள்விக்களுக்கான பதில் இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.
இன்று காலை 8 மணிக்கு தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதன் நிலவரம் விரைவில் வெளிவரும். 2024 மக்களவை தேர்தல் முடிவுகளின் அப்டேட்களையும், வேட்பாளர்களின் வெற்றி தோல்விகளையும், பல்வேறு மாநிலங்களின் அப்டேட்களையும் இங்கு உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.