யார் வசம் வயநாடு? தொடருமா ராகுல் மேஜிக்? நாளை வாக்குப்பதிவு!!

Lok Sabha Elections: வயநாட்டில் இம்முறை நிலவும் மும்முனைப் போட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போதைய எம்பி ராகுல் காந்திக்கு இந்த தேர்தலில் கடுமையான போட்டி உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 25, 2024, 04:58 PM IST
  • வயநாட்டில் மும்முனைப் போட்டி.
  • அமேதியின் தாக்கம் வயநாட்டு வாக்குப்பதிவில் தெரியுமா?
  • எல்டிஎஃப்-காங்கிரஸ் போட்டி.
யார் வசம் வயநாடு? தொடருமா ராகுல் மேஜிக்? நாளை வாக்குப்பதிவு!! title=

Lok Sabha Elections: 2024 மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை, அதாவது ஏப்ரல் 26 ஆம் தேதி  நடக்கவுள்ளது. கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களின் பல தொகுதிகளில் வெள்ளிக்கிழமை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த இடங்களில் வாக்குப்பதிவுக்கான ஆயத்தப்பணிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் சூடு பிடித்துள்ளன. 

கேரளாவின் 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும். கேரளத்தின் மிக பிரபலமான தொகுதிகளில் வயநாடும் ஒன்று. இதை ஒரு விஐபி தொகுதி என்றே கூறலாம். இந்த தொகுதியை எப்போதும் நாடே கவனிப்பது வழக்கம். இதில் இம்முறை காங்கிரஸ்  (Congress) கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India) சார்பில் அன்னி ராஜாவும், பா.ஜ.க. (BJP) சார்பில் மாநில தலைவர் கே. சுரேந்திரனும் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ் கட்சி ஆகிய இரண்டுமே இந்தியா கூட்டணியின் அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 

மும்முனைப் போட்டி

வயநாட்டில் இம்முறை நிலவும் மும்முனைப் போட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போதைய எம்பி ராகுல் காந்திக்கு இம்முறை கடுமையான போட்டி உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.  2019 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராகுல் காந்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுனீரை 4,31,770 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 7,06,367.   2019 மக்களவைத் தேர்தல் புள்ளிவிவரங்களின்படி வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் என்ணிக்கை 1359679 ஆக உள்ளது.

அமேதியின் தாக்கம் வயநாட்டு வாக்குப்பதிவில் தெரியுமா? 

காங்கிரசின் கோட்டையாக இருந்த உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் தற்போது அக்கட்சியின் பிடி தளர்ந்துவிட்டது. இங்கு ராகுல் காந்தி 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். இந்த முறை அவர் உத்தரபிரதேசத்தில் அவரது முந்தைய தொகுதியான அமேதியில் போட்டியிடுவாரா என்பது குறித்த நிச்சயமற்ற நிலை இருந்து வருகிறது. உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ், அமேதி மற்றும் ராய் பரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்னும் அறிவிக்கவில்லை. அமேதி மக்களை கைவிட்டது போல ராகுல் காந்தி வயநாட்டு மக்களையும் கைவிடுவார் என பாஜக தனது பிரச்சாரத்தில் பல முறை எச்சரித்துள்ளது. வயநாட்டு வாக்குப்பதிவில் அமேதி அம்சமும் ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படும். வயநாட்டில் தேர்தல் முடிந்த பின்னர் அமேதியில் தனது வேட்பாளர் பெயரை காங்கிரஸ் வெளியிடக்கூடும் என்றும், ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா ஆகிய இருவரில் ஒருவர் இங்கு போட்டியிடக்கூடும் என்றும் கூறப்படுகின்றது.  2019 ஆம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்ற ராகுலின் தாயார் சோனியா காந்தி தற்போது ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார்.

மேலும் படிக்க | மோடி vs ராகுல்: வெறுப்பு பேச்சு.. பாஜக மற்றும் காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

எல்டிஎஃப்-காங்கிரஸ் போட்டி 

மூன்றாவது வேட்பாளர் ஆனி ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி. அவர் கட்சியின் தேசிய இந்திய பெண்கள் கூட்டமைப்பில் பொதுச் செயலாளராகவும் உள்ளார். CPI கேரளாவில் ஆளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியின் பங்காளியாகும். கடந்த சில வாரங்களாக, கேரள முதல்வரும், சிபிஐ தலைவருமான பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் விமர்சித்து வருகிறார். இந்த வார தொடக்கத்தில் விஜயன், ராகுல் காந்தியை தீவிரம் இல்லாத, முதிர்ச்சியற்ற அரசியல்வாதி என்று கூறினார். 

2019 ஆம் ஆண்டில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) கேரளாவில் உள்ள 20 இடங்களில் 19 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியே 15 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இரண்டு இடங்களையும், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஒரு இடத்தையும், கேரள காங்கிரஸ் (எம்) ஒரு இடத்தையும் வென்றன. ஆலப்புழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.

இம்முறையும் வயநாட்டு மக்கள் காங்கிரசுக்கு அதே அளவு அதரவை அளிப்பார்களா? ராகுல் மந்திரம் இன்னும் முழு வீச்சில் வேலை செய்கிறதா? அல்லது மாற்றதுக்கான எதிர்பார்ப்பு உள்ளதா? இதற்கான பதிலை மக்கள் நாளை அளிப்பார்கள். ஜூன் 4 அன்று நாமும் அதை தெரிந்துகொள்ளலாம்.    

மேலும் படிக்க | ஓபிசி இடஒதுக்கீட்டை பறிக்க காங்கிரஸ் நாற்காலிக்காக துடிக்கிறது -பிரதமர் மோடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News