மஹாராஷ்டிராவில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் உட்பட அனைத்து தியேட்டர்க்கு படம் பார்க்க வருபவர்கள் இனி வெளியில் இருந்து சாப்பிடும் உணவு பொருட்களை கொண்டு வரலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் பொழுதுபோக்குக்காக தங்கள் குடும்பத்துடன் படம் பார்க்க தியேட்டர்களுக்கு மக்கள் வருகின்றனர். ஆனால் தியேட்டர்களுக்கு வரும் மக்கள் வெளியில் இருந்து எந்தவித உணவு பொருட்களை கொண்டு வரக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த கட்டுப்பாடு குறிப்பாக குழந்தைகளுடன் செல்லும் பெற்றோர்களுக்கு பெரும் சிரமமாக இருந்தது. இந்த சிரமத்துக்கு காரணம், சாதாரணமாக வெளியில் விற்கப்படும் ரூ. 10 விற்கப்படும் பாப்கார்ன் தியேட்டரில் ரூ. 50-க்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இப்படி தியேட்டர்களில் விற்கப்படும் அனைத்து பொருட்களுக்கு அதிகப்படியான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதுக்குறித்து பலமுறை தியேட்டர் நிர்வாகத்திடமும், அரசிடமும் தியேட்டர்களில் விற்கப்படும் பொருட்களுக்கு விலை குறைக்க வேண்டும் என்றும், அல்லது வெளியில் இருந்து பொருட்களை வாங்கி செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கைகளுக்கு யாரும் செவி சாய்க்கவில்லை.
இந்நிலையில், இதுக்குறித்து பொதுநல வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது சம்பந்தமா மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து மஹாராஷ்டிரா அரசு சட்டம் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதில், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தியேட்டர்களுக்கு வரும் மக்கள் வெளியில் இருந்து உணவு பொருட்களை கொண்டு வரலாம் என அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பு அனைத்து தியேட்டர்க்கும் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநில அரசின் அறிவிப்பால் தங்கள் லாபம் பாதிப்படையும் என்றும், ஏற்கனவே நஷ்ட்டத்தில் இயங்கும் தியேட்டர் பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றும் தியேட்டர் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.