பாகிஸ்தான் ஒரு மரண தேசம்- இந்தியப்பெண் உஸ்மா பேட்டி

Last Updated : May 26, 2017, 08:38 AM IST
பாகிஸ்தான் ஒரு மரண தேசம்- இந்தியப்பெண் உஸ்மா பேட்டி title=

பாகிஸ்தான் ஒரு மரண தேசம் என்று அங்கிருந்து தாயகம் திரும்பிய இந்தியப் பெண் கண்ணீருடன் தெரிவித்தார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர், துப்பாக்கி முனையில் மிரட்டி தன்னைத் திருமணம் செய்து கொண்டதாகப் புகார் தெரிவித்த அந்தப் பெண் வியாழக்கிழமை இந்தியா வந்தடைந்தார்.

கடந்த 1-ம் தேதி டெல்லியைச் சேர்ந்த உஸ்மா என்ற இளம்பெண் பாகிஸ்தான் சென்றார். கடந்த 3-ம் தேதி அங்கு, உஸ்மாவுக்கும், அவருக்கு மலேசியாவில் முன்பு அறிமுகமான தாஹிர் அலி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. அடுத்த சில தினங்களில், இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தஞ்சம் அடைந்த அந்தப் பெண், தாஹிர் அலி துப்பாக்கி முனையில் மிரட்டி தன்னைத் திருமணம் செய்து கொண்டதாகக் குற்றம் சாட்டினார்.

இதனிடையே, தனது முதல் திருமணத்தின் மூலம் பிறந்த பெண் குழந்தை உடல் நலக்குறைவால் அவதிப்படுவதால், அவரைப் பார்ப்பதற்கு இந்தியா செல்ல அனுமதி கோரி, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் உஸ்மா மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த இஸ்லாமாபாத் ஐகோர்ட் நீதிபதி மோசின் அக்தர் கயானி, உஸ்மா இந்தியா செல்வதற்கு அனுமதித்து உத்தரவிட்டார். மேலும், உஸ்மாவுக்கு வாகா எல்லை வரை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் டெல்லி சென்ற உஸ்மா, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். பிறகு, பாகிஸ்தானின் புனேர் மாவட்டத்தில் தனக்கு நேரிட்ட கொடுமைகளை செய்தியாளர்களிடம் உஸ்மா விவரித்தார். 

அப்போது பேசிய அவர்:-

எனது மகளை சித்திரவதை செய்யப்போவதாக மிரட்டியதால், நான் திருமணத்துக்கு சம்மதித்தேன். நான் தங்கியிருந்த பகுதியில் தினமும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றன. ஒவ்வொருவருக்கும் இரண்டு மனைவிகள் உள்ளனர். அங்கேயே இன்னும் சில நாள்கள் இருந்திருந்தால் நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன். என்னை பாகிஸ்தானியர்கள் கொன்றிருப்பார்கள் அல்லது விற்பனை செய்திருப்பார்கள். எல்லா நாடுகளைச் சேர்ந்த பெண்களும் அங்கு இருக்கிறார்கள். அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். பல பெண்கள் தப்பிக்க வழியின்றி இருக்கிறார்கள்.

பாகிஸ்தானுக்குச் செல்வது எளிது; ஆனால் அங்கிருந்து வெளியேறுவது கடினம். பாகிஸ்தான் ஒரு மரண தேசம். பாகிஸ்தானில் ஆண்களுக்குக் கூட பாதுகாப்பு கிடையாது. நான் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால், இந்தியாவைப் போல் வேறு எந்த நாட்டிலும் சுதந்திரம் கிடையாது. இந்தியாவின் மகளாக இருப்பதில் பெருமையடைகிறேன். நான் இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தஞ்சம் அடைந்த பிறகு, அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தினமும் என்னைத் தொடர்பு கொண்டு எனக்கு ஊக்கம் கொடுத்தார். அவருக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் உஸ்மா

தாயகம் திரும்பிய உஸ்மாவை டெல்லியில் வரவேற்ற சுஷ்மா சுவராஜ் அவரை இந்தியாவின் மகள் என்று பாராட்டினார். 

மேலும் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உஸ்மாவை பத்திரமாக மீட்டது முற்றிலும் சவாலான விஷயம். அன்னிய மண்ணில் பெண் ஒருவர் சிக்கித் தவிக்கும்போது, அவருக்கு நம்பிக்கை கொடுத்தது இந்தியத் தூதரகம்தான். இந்தியத் தூதர் ஜே.பி.சிங் யாருடைய அறிவுரையும் இன்றி, உஸ்மாவை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதில் தாமாகவே விரைந்து நடவடிக்கை மேற்கொண்டார். அதிகாரியாக அவர் கிடைத்ததற்கு பெருமையடைகிறேன்.

உஸ்மா பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கு ஒத்துழைப்பு அளித்த பாகிஸ்தான் அரசுக்கும், அந்நாட்டு நீதித் துறைக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்மைக் காலமாக, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், உஸ்மா இந்தியா திரும்புவதற்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகமும், உள்துறை அமைச்சகமும் முக்கியப் பங்காற்றின. இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மோசின் அக்தர் கயானி, உஸ்மாவின் வழக்குரைஞர் ஷாநவாஸ் ஆகியோருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் 

சுஷ்மா சுவராஜ் கூறினார்.

Trending News