ரயில்வேயின் அலட்சியத்தால் பலி ? : ரூ. 15 ஆயிரம் நிவாரணமா... - மகனை இழந்த தந்தை ஆவேசம்!

Railway Compensation : ரயிலில் சென்றுகொண்டிருந்தபோது, கழுத்தில் இரும்பு கம்பி பாய்ந்து உயிரிழந்தவருக்கு ரயில்வே ரூ. 15 ஆயிரம் நிவாரணமாக அறிவித்தது. அதற்கு,"வேண்டுமென்றால் என்னிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொள்ளுங்கள்" என உயிரிழந்தவரின் தந்தை ஆவேசமாக தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 4, 2022, 11:16 AM IST
  • பின்னர், உயிரிழந்தவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு என ரயில்வே அமைச்சர் அறிவித்தார்.
  • இருப்பினும், தனது மருமகளுக்கு அரசு வேலை வேண்டும் என்று தந்தை தொடர் போராட்டம்.
  • உயிரிழந்தவருக்கு, சிறு வயதே ஆன இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரயில்வேயின் அலட்சியத்தால் பலி ? : ரூ. 15 ஆயிரம் நிவாரணமா... - மகனை இழந்த தந்தை ஆவேசம்!  title=

நீலாச்சல் விரைவு ரயிலில் பயணித்த டெல்லியைச் சேர்ந்த 32 வயதான ஹரிகேஷ் குமார் துபே என்ற பயணியின் கழுத்தில் 5 அடி நீளமும், 1.5 அங்குல தடிமன் கொண்ட இரும்பு கம்பி ஜன்னல் வழியாக பாய்ந்ததில், அவர் இருக்கையில் இருந்தபடியே உயிரிழந்தார். இந்த சம்பவம், நேற்று நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

ஓடும் ரயிலின் ஜன்னலை உடைத்து அந்த இரும்பு கம்பி, துபே அமர்ந்திருந்த பெட்டிக்குள் நுழைந்துள்ளது. இது ரயில்வேயின் அலட்சியத்தால் நடந்ததாகவும் கூறப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்த பயணியின் குடும்பத்திற்கு ரயில்வே 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கியது. ஆனால், தனது மகனை இழந்துவிட்ட தந்தை சாந்தாராம், அந்த இழப்பீட்டை ஏற்க மறுத்து, "வேண்டுமென்றால் என்னிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொள்ளுங்கள்" என ஆவேசமாக கூறியுள்ளார். 

உத்தரப் பிரதேசத்தில் உள்ள வட மத்திய ரயில்வேயின் பிரயாக்ராஜ் கோட்டத்தில் உள்ள தன்வார் (புலாந்த்ஷாஹர் மாவட்டம்) மற்றும் சோம்னா (அலிகார் மாவட்டம்) ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை (டிச. 2) காலை 8:45 மணியளவில் ரயில் ஓடிக்கொண்டிருந்தபோது இந்த நெஞ்சை உறையவைக்கும் விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட நேரத்தில், ரயில் சுமார் 130 கி.மீ., வேகத்தில் சென்றதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | தாய்லாந்து மாணவிக்கு ஹைதராபாத்தில் பாலியல் தொல்லை... போலீஸ் காவலில் பேராசிரியர்

உயிரிழந்த துபே, தனது மனைவி ஷாலினி துபே, ஏழு வயது மகள், நான்கு வயது மகன் ஆகியோருடன் கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக வடகிழக்கு டெல்லியின் சோனியா விஹார் புறநகரில் வசித்து வந்ததாக தெரிகிறது. கரோனா தொற்று காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக வேலையில்லாமல் இருந்த அவர், சமீபத்தில்தான் ஒரு தனியார் நிறுவனத்தில் டவர் டெக்னீஷியனாக வேலை செய்யத் தொடங்கியுள்ளார்.

துபே குறித்து அவரது சகோதரி பபிதா திரிபாதி கூறுகையில், “துபேவுக்கு நான்கு சகோதரிகள் உட்பட மொத்தம் 8 உடன்பிறப்புகள். அதில், துபே தான் இளையவர். வரும் டிசம்பர் 5ஆம் தேதி அவருடைய பிறந்தநாள், அதைக் கொண்டாட திட்டமிட்டிருந்தோம். ரயில்வேயின் அலட்சியத்தால் அவரையே இழந்துவிட்டோம்"  என்றார்.

முன்னதாக, துபேவின் உயிரிழப்பை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ. 15 ஆயிரத்தை வழங்க ரயில்வே முன்வந்தது. ஆனால், அதை துபேவின் தந்தை சாந்தாராம் ஏற்க மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக, "வேண்டுமென்றால் என்னிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொள்ளுங்கள்' என்று கூறினார். இதை தொடர்ந்து,  உயிரிழந்த துபேவின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று (டிச. 3) மாலை அறிவித்தார்.

மகனின் மரணம் குறித்து தந்தை சாந்தாராம் கூறுகையில்,''ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தால் எனது மகன் உயிரிழந்துள்ளார். தற்போது எனது மகனின் மரணத்திற்கு ரயில்வே நிர்வாகம் எனக்கு இழப்பீடாக 15,000 ரூபாய் வழங்குவது வேடிக்கையாக உள்ளது" என்றார். இதற்கிடையில், ரயில்வே அதிகாரிகள் சாந்தாராமை சமாதானப்படுத்த முயன்றனர், ஆனால் அவர் யாருடைய பேச்சையும் கேட்கவில்லை, தனது மகனின் உடலை எடுத்துக்கொண்டு அவர் புறப்பட்டுவிட்டார்.

உயிரிழந்தவரின் மனைவிக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சாந்த்ராம் கோரிக்கை விடுத்தார். உயிரிழந்த ஹரிகேஷ் துபேவுக்கு இரண்டு சிறிய குழந்தைகள் இருப்பதாகாவும், அவர்களின் வாழ்வாதாரத்தை அரசு பொருட்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார். தனக்கு நீதி கிடைக்கும்வரை போராட இருப்பதாகவும் தெரிவித்தார். 

விபத்து ஏற்பட்ட பகுதியில், ரயில்வே துறை சார்ந்த பணி நடந்துகொண்டிருந்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து, ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில்,"இரும்பு கம்பி ரயிலுக்குள் புகுந்த மர்மம் இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை. ஆனால், அப்பகுதியில் நடைபெற்றுவந்த பணியின்போது, தண்டவாளத்தை தூக்குவதற்கு பணியாளர்கள் கம்பிகளை பயன்படுத்தியுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்போதுதான் அது பணியாளரின் கைகளில் இருந்து நழுவி ரயிலுக்குள் நுழைந்து, ஹரிகேஷ் துபேவின் மரணத்திற்கு வழிவகுத்திருக்கிறது" என்றார்.

மேலும் படிக்க | டெல்லி ஷ்ரத்தா கொலை இன்ஸ்பிரேஷன்... அதே ஸ்டைலில் காதலி கொலை.. சிக்கியது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News