வெளியாட்கள் நுழைந்துள்ளனர்; 750 போலி ஐகார்டுகள் கண்டுபிடிப்பு: Jamia பல்கலைக்கழகம்

பல்கலைக்கழகத்திற்குள் வெளியாட்கள் நுழைவதாகவும், 750 போலி ஐகார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஜாமியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 16, 2019, 04:48 PM IST
வெளியாட்கள் நுழைந்துள்ளனர்; 750 போலி ஐகார்டுகள் கண்டுபிடிப்பு: Jamia பல்கலைக்கழகம் title=

புதுடெல்லி: அனுமதி இல்லாமல் டெல்லி காவல்துறையினர் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக வளாகத்தில் (Jamia Millia Islamia University) நுழைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. டெல்லி போலீசாருக்கு (Delhi Police) எதிராக எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்வோம் என பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நஜ்மா அக்தர் (Najma Akhtar) கூறியதை அடுத்து, ஜாமியா நிர்வாகம் வெளியாட்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதாகவும் 750 போலி ஐகார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் நஜ்மா அக்தர் பேட்டி, அனுமதி இல்லாமல் போலீசார் ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் மாணவர்களுடைய நூலகத்தை சேதப்படுத்தியுள்ளனர். மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்ய முடியாது. போலீசார் மீது விசாரணை வேண்டும் என்று அரசிடம் முறையிடுவோம். இந்த சம்பவம் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பேசிய அவர், "எந்தவிதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன். இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரவியுள்ளது. நாங்கள் அதை முழுமையாக நிராகரிக்கிறோம். எந்த மாணவரும் இறக்கவில்லை. பல மாணவர்கள் உட்பட 200 பேர் காயமடைந்துள்ளனர். ஜாமியா மாணவர்கள் எந்தவிதமான வன்முறையிலும் ஈடுபடவில்லை என்று துணைவேந்தர் நஜ்மா அக்தர் கூறினார்.

 

பல்கலைக் கழக வளாகத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய கேள்விக்கு பதில் அளித்த ஜாமியா மில்லியா பல்கலைக்கழக பதிவாளர் ஏ.பி. சித்திக்கி, "நாங்கள் போலீஸ் இணை ஆணையர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் பேசினோம். அவர்கள் இந்த சம்பவத்தை முற்றிலுமாக நிராகரித்தனர்" என்றார்.

வளாகத்தில் உள்ள மசூதிக்கு போலீசார் நுழைந்ததும், சிறுமிகளை அநாகரீகமாக நடத்தப்பட்டனரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த சித்திகி, "சமூக ஊடகங்களில் ஏராளமான வதந்திகள் பரவியுள்ளன. அவற்றை நாம் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ முடியாது எனவும் கூறினார்.

இன்று ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாக நாளை விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, டெல்லியின் ஜாமியா நகர் அருகே ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) குடியுரிமை எதிர்ப்பு போராட்டக்காரர்களால் மூன்று பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. தீயைக் கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு விரைந்த நான்கு தீயணைப்பு டெண்டர்களும் எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டன. இந்த தாக்குதலில் இரண்டு தீயணைப்பு படையினர் காயமடைந்துள்ளதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

எனினும் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் மாணவர்கள் வன்முறையிலிருந்து தங்களை ஒதுக்கி வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையில்., "எந்தவொரு வன்முறை போராட்டத்திற்கும் தாங்கள் ஆதரவளிக்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் "டெல்லியின் தெருக்களில் நடக்கும் வன்முறைகளில் எந்த ஜாமியா மாணவரும் ஈடுபடவில்லை. இவை ஜாமியா மாணவர்களின் உடையில் வன்முறையைத் தூண்டும் நோக்கத்தில் அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது" என்று ஜாமியா மாணவர் சங்கமும் நிர்வாகமும் தெரிவித்துள்ளன.

இதனிடையே ஞாயிறு அன்று ஜாமியா பல்கலைக்கழகம் பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைத்த பின்னர் குளிர்கால விடுமுறையை அறிவித்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் பாரிய போராட்டத்தின் மத்தியில் குளிர்கால விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. கால அட்டவணையின்படி, பல்கலைக்கழகம் டிசம்பர் 16 முதல் - ஜனவரி 6, 2020 வரை அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடெங்கிலும் பரவி வரும் போராட்டங்களுக்கு மத்தியில் போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற உதவியினை நாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News