கொரோனா நெருக்கடி காலத்திலும் சம்பளத்தை உயர்த்திய நிறுவனங்கள்!!

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட நிச்சயமற்ற நிலைகளுக்கு இடையில், ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க  பல நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. பணமாகவும், ஊதியமாகவும் வழங்கி  இந்த கடினமான காலங்களில் தங்கள் ஊழியர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 28, 2020, 02:50 PM IST
கொரோனா நெருக்கடி காலத்திலும் சம்பளத்தை உயர்த்திய நிறுவனங்கள்!! title=

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் வேகமாக பரவி வருவதால், நாடு தழுவிய ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இதனையடுத்து  ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களை கருத்தில் கொண்டு பல பெரிய நிறுவனங்கள் கூட, ஆட் குறைப்பு, சம்பள குறைப்பு மற்றும் தாமதமாக சம்பளத்தை தருவது போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன.

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட நிச்சயமற்ற நிலைகளுக்கு இடையில், இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (எச்.யூ.எல்), ஆசியன் பெயிண்ட்ஸ், எச்.சி.எல் டெக்னாலஜிஸ், வால்மார்ட்டின் பிளிப்கார்ட் நிறுவனம், மிந்த்ரா, ஜான்சன் & ஜான்சன், சி.எஸ்.எஸ்., கேப்ஜெமினி இந்தியா, பி.எஸ்.எச் ஹோம் அப்லையன்சஸ், எச்.சி.சி.பி, பாரத்பே போன்ற நிறுவனங்கள் சம்பளத்தை அதிகரிக்க  முடிவு செய்துள்ளன. பல்வேறு விதமான முறைகளில் பணமாகவும், ஊதியமாகவும் வழங்கி  இந்த கடினமான காலங்களில் தங்கள் ஊழியர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளன.

இந்த நிறுவனங்கள் தங்கள் வணிக தன்மையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கின்றன என்றும் நெருக்கடியின் போது நிறுவனம்காட்டும அக்கறையானது, ஊழியர்களின் நல்லெண்ணத்தில் நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

சி.எஸ்.எஸ் கார்ப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மணீஷ் டாண்டன், பத்திரிகையிடம் பேசும்போது  “இது போன்ற கடினமான காலங்களில், ஊழியர்களை அவர்களின் நிலையிலிருந்து புரிந்து கொண்ட உணர்வுடன் வழிநடத்தவும், ஊழியர்களின் ஆர்வத்தை  அதிகரிக்கவும் நிறுவனங்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. ஊதிய உயர்வு வழங்குவது இது போன்ற கடினமான காலங்களில்  அவர்களுக்கு ஒரு உத்திரவாதமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று கூறியுள்ளார். 

சுமார் 7000 ஐடி சேவை நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் ஊதிய உயர்விலோ மற்றும் ஊதியத்திலோ எந்த குறைப்பும் செய்யவில்லை. குறைந்த பட்ச ஊதியத்தில் பணிபுரியும் 70 சதவீத ஊழியர்களுக்கு முழு சம்பளம், அதாவது 100 % வழங்கப்பட்டது.

"இந்த நிச்சயமற்ற காலங்களில் ஊழியர்களின் மனஉறுதியை தக்க வைப்பதும், அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தருவதும் எங்கள் பொறுப்பு" என்று பி.எஸ்.எச் ஹோம் அப்ளையன்ஸஸ் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நீரஜ் பஹ்ல், பைனான்சியல் டெய்லி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

இருப்பினும், நிறுவனம் சந்தைப்படுத்தல் மற்றும் பயணச் செலவுகளைக் குறைத்து, புதிய பணியமர்த்தலை நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருந்தது.   அந்த முடிவின் காரணமாக பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் போன்ற நல்ல முடிவுகளை ஊழியர்களுக்கு வழங்க முடிந்தது.

மார்ச் மாதத்திலிருந்து பொருளாதார நிலைமைகள் பலவீனமாக இருப்பதால், ஊதியக் குறைப்பு மற்றும் பணிநீக்கம் போன்ற முடிவுகள் வேண்டாம் என்று நிறுவனம் முடிவு செய்துள்ளதாக இன்ஃப்ளெக்ஷன் பாயிண்ட் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினய் பன்சால்  கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்), விப்ரோ, இன்போசிஸ் போன்ற பல தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) சேவை நிறுவனங்கள் ஊதிய உயர்வுகளை ஒத்திவைத்துள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டி.வி.எஸ் மோட்டார்ஸ் மற்றும் ஓயோ ரூம்ஸ் போன்றவை சம்பளக் குறைப்பில் ஈடுபட்டுள்ளன.   ஓலா, உபெர், ஜொமாடோ, ஸ்விக்கி மற்றும் ஐ.பி.எம் ஆகிய  நிறுவனங்கள் அதிரடியாக ஆட் குறைப்பு செய்துள்ளன.

“HUL ஏப்ரல்-மார்ச்  நிதியாண்டு வட்டத்தை பின்பற்றுகிறது. முந்தைய ஆண்டிற்கான ஊதிய உயர்வு மற்றும் நடப்பு ஆண்டிற்கான அதிகரிப்புகள் ஏற்கனவே வழங்கபட்டு விட்டன” என்று HUL நிறுவன செய்தித் தொடர்பாளர் பிசினெஸ் டெய்லி நாளிதழுக்கு பேட்டியளிக்கும்போது தெரிவித்தார்.

முன்னதாக, கோவிட் -19 தொற்றுநோயால் வணிகம் பாதிக்கப்பட்ட போதிலும், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று ஆசிய பெயிண்ட்ஸ் நிறுவனம் கூறியிருந்தது.

(மொழியாக்கம் - வானதி கிரிராஜ்)

Trending News