ATM-ல் பணம் எடுக்க புதிய விதிமுறை; 6 மணி நேரம் காத்திருக்க வேண்டும்

இரண்டு ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு இடையில் 6 முதல் 12 மணி நேரம் வரை இடைவெளி இருக்க வேண்டும் என்று எஸ்எல்பிசி குழு பரிந்துரை செய்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 28, 2019, 01:15 PM IST
ATM-ல் பணம் எடுக்க புதிய விதிமுறை; 6 மணி நேரம் காத்திருக்க வேண்டும் title=

புதுடெல்லி: மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் மிகுந்த கவனத்துடனும், வங்கிகளிடமிருந்து பலமுறை எச்சரிக்கைகள் தந்தபோதிலும் ஏடிஎம் (ATM) மூலம் நடந்து வரும் மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அண்மையில், அதிகரித்து வரும் ஏடிஎம் மோசடிக்கு வங்கிகளை கண்டித்தன நீதிமன்றங்கள். டெல்லி மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு (SLBC) ஏடிஎம் மோசடியைத் தடுக்க சில நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது. அதன்மூலம் ஏடிஎம் மோசடி சம்பவங்கள் குறையலாம் என்று குழு நம்புகிறது. அதில் முக்கியமாக இரண்டு ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு இடையில் 6 முதல் 12 மணி நேரம் வரை இடைவெளி இருக்க வேண்டும் என்று குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டால், காலை 10 மணிக்கு உங்கள் கணக்கிலிருந்து 20 ஆயிரம் ரூபாயை நீங்கள் எடுத்தால், அதன் பிறகு குறைந்தது 6 மணி நேரத்திற்குப் பிறகு, அதாவது பிற்பகல் இரண்டு மணிக்கு பிறகு தான் அடுத்த பரிவர்த்தனையை நீங்கள் செய்ய முடியும். 

ஏடிஎம்களில் பெரும்பாலான மோசடிகள் இரவில் நடப்பதாக குழு ஒப்புக்கொண்டது. இவற்றில் பெரும்பாலான வழக்குகள் நள்ளிரவு முதல் அதிகாலை வரை பதிவாகியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், மோசடியைத் தடுக்க கடந்த வாரம் 18 வங்கிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் விவாதங்கள் நடத்தப்பட்டன.

ஏடிஎம் மூலம் நடைபெறும் மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2018-19 ஆம் ஆண்டில் டெல்லியில் 179 ஏடிஎம் மோசடி வழக்குகள் இருந்தன. நாடு முழுவதும் மொத்தம் 980 ஏடிஎம் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் பெரும்பாலானவை ஏடிஎம் மோசடி மற்றும் ஏடிஎம் அட்டைகளின் குளோனிங் தொடர்பானவை. முன்னதாக 2017-18 ஆம் ஆண்டில் மொத்தம் 911 ஏடிஎம் மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன.

வங்கி பிரதிநிதிகளின் கூட்டத்தில், ஏடிஎம்மில் இருந்து 10000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை வாடிக்கையாளர்கள் பெற விரும்பினால் ஓடிபி (OTP) முறையை கனரா வங்கி கட்டாயமாக்கியுள்ளது.

Trending News