தங்க நகைக்கடன் வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய 9 முக்கிய விஷயங்கள்

நகைக்கடன் வாங்குபவர்கள் விதிமுறைகள் மற்றும்  திரும்பிச் செலுத்தும் முறை குறித்த விவரங்களையெல்லாம் கேட்டு தெரிந்துகொள்வது அவசியம்.

 

1 /9

தங்க நகைகள் இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், எதிர்பாராத நிதித் தேவைகளுக்கு கைகொடுக்கும் சொத்தாக உள்ளது. குடும்பத்தினரின் மருத்துவச் செலவு, குழந்தைகளின் கல்விச் செலவு, வர்த்தக முதலீட்டுச் செலவு, எதுவாக இருந்தாலும், நமக்கு முதலில் நினைவுக்கு வருவது தங்க நகைகள்தான். இந்த மாதிரியான நெருக்கடி சூழ்நிலைகளில் தங்க நகைகளை விற்று பணம் பெறுவதைவிட, அவற்றை அடமானம் வைத்து கடன் வாங்குவது புத்திசாலித்தனம்.  

2 /9

தங்க நகைக் கடனுதவியை எவ்வளவு சுலபமாக வாங்க முடிகிறதோ, அதைப் போலவே வாங்கிய கடனை அடைக்க சுலபமான வழிமுறைகளை வங்கிகள் நிதி நிறுவனங்கள் அளித்து வருகின்றன. கடனைத் திருப்பி அடைப்பதற்கு நாம் கட்டும் தொகையில், பல விருப்பத்தேர்வுகளை வழங்குவதால், நமக்கு செளகரியமான ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். உதாரணத்துக்கு நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஆண்டுக் காலத்துக்கு  தங்க நகைக் கடன் வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்தக் குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் வாங்கிய கடன் தொகைக்கான வட்டியை மட்டும் கட்டினால் போதும் என்ற ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.  

3 /9

இதனால் நம்முடைய அன்றாட, மாதாந்தர செலவுகளில் சிக்கல் இல்லாமல் குறிப்பிட்ட வட்டியை மட்டும் கட்டினாலே போதுமானது. மேலும், கடனுதவி முடியும் காலத்தில் வாங்கிய கடன் தொகையை மொத்தமாகக் கட்டிவிடலாம். மற்றுமொரு செளகரியம் என்னவென்றால், திடீரென உங்களுக்கு எதிர்பாராத வகையில் அலுவலகத்தில் போனஸ் கொடுக்கிறார்கள். அல்லது உங்களது வணிகத்தில் வியாபாரம் சூடுபிடித்து லாபம் அதிகம் கிடைத்திருக்கிறது என்றால் நீங்கள் அப்போதே கடன் தொகை மொத்தத்தையும் கட்டிவிடலாம். கடனை அடைத்துவிடலாம்.  

4 /9

பொதுவாக, தங்க நகைக் கடன் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் வரையிலான காலத்துக்கு வழங்கப்படுகிறது. தங்க நகைக் கடனை வாங்குவதற்கு, உங்களிடம் வருமான ஆவணம் இருக்கிறதா, சொத்து ஆவணம் இருக்கிறதா, யார் உங்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கே இடமில்லை. குறைந்தப்பட்ச ஆவணங்கள் இருந்தாலே போதுமானது.  

5 /9

கடன் வாங்குபவர்கள், தாங்கள் வாங்க இருக்கும் கடனுதவிக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பொறுமையாகப் படித்துத் தெரிந்துகொள்வது அவசியம். மேலும், நாம் வாங்கும் கடன் தொகைக்காகக் குறிப்பிடப்படும் வட்டி விகிதங்களை சரிப்பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்குப் பிறகு, குறிப்பிட்ட காலத்துக்குள் நம்முடைய தங்கத்தை வைத்து வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத சூழல் உண்டானால், அதற்குப் பின் ஏற்படும் விளைவுகள் என்னென்ன  என்பதைப் பற்றித் தெளிந்துகொள்ள வேண்டியது முக்கியம்.  

6 /9

அதேபோல் கடன் மதிப்பு, உங்களுடைய தங்கத்தின் மதிப்புக்கு ஏற்றதாக இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதை லோன் – டு – வேல்யூ  [Loan-to-Value (LTV) ratio] என்பார்கள். அடுத்து வாங்கிய கடனில், வட்டியை மட்டும் கட்டுவது அல்லது கடன் தொகையைக் கட்டுவது  இந்த இரண்டு வாய்ப்புகளில் உங்களுடைய மாத வருமானத்துக்கு எது பொருத்தமாக இருக்குமோ அதைத் தேர்வு செய்யுங்கள். எந்த வாய்ப்பு மாத செலவுகளைத் தாண்டி கட்டுவதற்கு சரியாக இருக்குமோ அதைத் தேர்ந்தெடுங்கள்.  

7 /9

தங்க நகைக் கடன் வாங்கும்போது, உங்களுடைய வாரிசுதாரர் யார் என்பதையும் குறிப்பிடும் வசதி இருக்கிறதா என்பதையும் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். சில சமயங்களில் உங்களுடைய கடன் தொகை முழுவதும் கட்டி முடிக்கப்பட்டால், உங்களது வாரிசுதாரர் அந்த நகையை மீட்டெடுக்க  முடியும்.  

8 /9

உங்களுடைய தங்கத்தின் மதிப்புக்கு அதிக கடனுதவி அளிக்க நிறுவனங்கள் தயாராக இருந்தாலும், நீங்கள்தான் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால், வாங்கிய கடனை திரும்பி அடைக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்குதான் இருக்கிறது. அதனால் உங்களுடைய தேவைக்கு அதிகமாக, கடனுதவி வேண்டுமென விண்ணப்பிக்காதீர்கள். இதனால் ஒவ்வொரு மாதமும் டென்ஷன் இல்லாமல் கடனை திருப்பி செலுத்த முடியும். தேவையில்லாத பணச்சிக்கல் வராமல் தவிர்க்க முடியும்.  

9 /9

 நீங்கள் பெற்ற கடனுதவி திட்டத்தில் ஏதேனும் புதிய மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளுங்கள். வட்டி விகிதத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால், அது உங்களுடைய கடனில் பெரும் தாக்கத்தை உருவாக்க வாய்ப்பிருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.