புவனேஷ்வர் குமார் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியிலும் தேர்வு செய்யப்படவில்லை.
வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் நீண்ட நாட்களாக இந்திய அணியில் இருந்து விலகி உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் புவிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த தொடரில் இந்தியா 4-1 என வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான பிசிசிஐ சமீபத்தில் அறிவித்த இந்திய அணியிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அவர் தனது கடைசி சர்வதேச போட்டியை நவம்பர் 2022-ல் விளையாடினார். இது டி20 ஆகும்.
இவ்வாறான நிலையில் 33 வயது பந்துவீச்சாளரின் சர்வதேச வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதா என்ற விவாதம் தொடங்கியுள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பிரபல வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, புவனேஷ்வர் குமாரின் கேரியரில் தற்போது ஒரு பெரிய தடை இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர் சிறப்பாக செயல்பட்டாலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றார். சோப்ரா தனது யூடியூப் சேனலில் பேசும்போது, புவனேஷ்வர் குமாருக்கு சர்வதேச கிரிக்கெட் அணியில் விளையாட தொடர்ச்சியாக வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.
இத்தனைக்கும் சையது முஷ்டாக் அலி தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டிருந்தார். இருப்பினும் புவனேஷ்வர் குமாரை தேர்வாளர்கள் கண்டுகொள்ளவில்லை.
ஒருநாள் போட்டியில் நீண்ட நாட்களாக வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த அவருக்கு இப்போது 20 ஓவர் போட்டிகளிலும் இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அவருக்கு அடுத்தபடியாக வேறு வீரர்களை தேர்வாளர்கள் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர் என்பது தெரிகிறது.
தேர்வாளர்களைப் பொறுத்தவரையில் இந்திய அணிக்கு தரமான பந்துவீச்சாளர்களை தேர்வு செய்வதற்கு பல வீரர்கள் இருக்கின்றனர். பட்டியலை பார்த்தால் முகேஷ் குமார், அவேஷ் கான், தீபக் சாஹர், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் என நீள்கிறது. ஒருவகையில் இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது என தெரிவித்துள்ளார்.