ICC Fielder Impact Rating Points: நடந்து முடிந்த உலகக் கோப்பை 2023 தொடரில் சிறப்பாக செயல்பட்ட டாப் 10 பீல்டர்களின் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு போட்டியில் தாக்கம் ஏற்படுத்திய வீரர்களை புள்ளிகள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா மிடில் ஆர்டர் பேட்டர் லபுஷேன் இந்த பட்டியில் 82.55 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அதே ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனர் டேவிட் வார்னரும் 82.55 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்தார்.
தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி பேட்டர் டேவிட் மில்லர் 79.48 புள்ளிகளுடன் இப்பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தார். மேலும், அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்டர் எய்டன் மார்க்ரம் 50.85 புள்ளிகளுடன் இப்பட்டியலில் 7ஆவது இடத்தை பிடித்தார். தென்னாப்பிரிக்க அணியில் இருந்து இருவர்தான் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணியின் (Team India) ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா (Jadeja) 72.72 புள்ளுகளுடன் இப்பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்தார். மேலும் தொடர் நாயகன் விருதை வென்ற விராட் கோலி (Virat Kohli) 56.79 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தை பிடித்தார்.
நெதர்லாந்து வீரர் சீபிரேன்ட் எங்கெல்பிரெக்ட் 58.72 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்தார். நெதர்லாந்து இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இருப்பினும் கடைசி இடத்தில்தான் நிறைவு செய்தது.
நியூசிலாந்தின் மிட்செல் சான்டர் 46.25 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தையும், கிளென் பிலிப்ஸ் 42.76 புள்ளிகளுடன் 10ஆவது இடத்தை பிடித்தனர்.
உலகக் கோப்பையை வென்ற மேக்ஸ்வெல்லும் இந்த பட்டியில் 9ஆவது இடத்தில் உள்ளார். அவர் 45.07 புள்ளிகளை பெற்றார். இந்த தொடரில் 201* ரன்கள் என்ற தனிநபர் அதிகபட்ச ஸ்கோரை மேக்ஸ்வெல் அடித்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணியின் லபுஷேன், வார்னர், மேக்ஸ்வெல் ஆகிய மூன்று பேர் இந்த டாப் 10 லிஸ்டில் உள்ளனர். இறுதிப்போட்டி உள்பட அனைத்து போட்டிகளிலும் இவர்கள் தங்களின் சிறப்பான பீல்டிங் திறனை வெளிப்படுத்தியதை தொடர்ந்துதான், உலகக் கோப்பையும் அவர்களின் கைகளுக்கு எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.