இந்தியா பைனலுக்கு போக... இந்த அணி செமி-பைனலுக்கு வரணும் - இன்னும் வாய்ப்பு இருக்கு!

Afghanistan National Cricket Team: உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியுடன் ஆப்கானிஸ்தான் அணிகள் மோத இன்னும் வாய்ப்புள்ளது. அதுகுறித்து இதில் காண்போம்.

Written by - Sudharsan G | Last Updated : Nov 8, 2023, 08:16 PM IST
  • இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி
  • முதல் அரையிறுதி போட்டி நவ.15ஆம் தேதி நடக்கிறது.
  • தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா வரும் நவ.16ஆம் தேதி அரையிறுதியில் மோதல்
இந்தியா பைனலுக்கு போக... இந்த அணி செமி-பைனலுக்கு வரணும் - இன்னும் வாய்ப்பு இருக்கு! title=

Afghanistan National Cricket Team: நடப்பு ஐசிசி உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) என்பது கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற ஐசிசி தொடர்களிலேயே மிக சுவாரஸ்யமான தொடராக மாறி உள்ளது. ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளின் எழுச்சி, நடப்பு இங்கிலாந்தின் வீழ்ச்சி, தொடரை நடத்தும் இந்திய அணியின் (Team India) தொடர் வெற்றிகள், ஆஸ்திரேலியாவின் வழக்கமான அதிரடி என சொல்லிக்கொண்டே போகலாம். பல போட்டிகள் மிக மிக விறுவிறுப்பாக சென்றதையும் நாம் பார்த்திருப்போம். 

உதாரணத்திற்கு, நேற்றைய ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் (AUS vs AFG) போட்டியை விட சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் கொண்ட ஒருநாள் போட்டி இல்லை எனலாம். மேக்ஸ்வெல் என்ற ஒற்றை மனிதனின் விடாப்பிடியான நம்பிக்கை ஆப்கானிஸ்தானின் ஒட்டுமொத்த கனவையே தகர்த்துவிட்டது எனலாம். சேஸிங்கில் முதல் முறையாக 200 ரன்களை அடித்தது மட்டுமின்றி ஒருநாள் அரங்கில் 200 ரன்களை அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். ஆனால், ஆஸ்திரேலியாவிடம் அடங்கிய இதே ஆப்கானிஸ்தான் அணிதான் இங்கிலாந்தை, பாகிஸ்தானை, இலங்கையை வாரிச்சுருட்டியது எனலாம்.

ஆப்கானிஸ்தான் இந்த தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 4இல் வென்று நான்கில் தோற்றது. வங்கதேசம், இந்தியா என அடுத்தடுத்த தோல்விக்கு பின் இங்கிலாந்தை வீழ்த்தி பெரும் நம்பிக்கையை பெற்றது. தொடர்ந்து, நியூசிலாந்திடம் தோல்வியடைந்தாலும் பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து என ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. நேற்று ஆஸ்திரேலிய பந்துவீச்சையும் அந்த அணி பேட்டர்கள் சமாளித்து 292 ரன்களை இலக்காக நிர்ணயித்தனர். இப்ராஹிம் சத்ரான் நேற்று சதம் அடித்து உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் ஆப்கன் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

மேலும் படிக்க | தரவரிசையில் கலக்கும் இந்தியர்கள்... கில், சிராஜ் முதலிடம் - பெரிய ஜம்ப் அடித்த மேக்ஸ்வெல்

இப்படி ஆப்கன் அணி இந்த தொடரில் பல விஷயங்களை சாதித்தாலும் அதன் அரையிறுதி கனவை முன்பு கூறியது போல மேக்ஸ்வெல் (Maxwell) நேற்று தகர்த்துவிட்டார் என்றே பலரும் கூறினர். இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுடன் நேற்று ஆஸ்திரேலியாவும் தனது அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்துகொண்ட நிலையில், அந்த நான்காவது இடத்திற்கான போட்டி மட்டும் இன்னும் உள்ளது. நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அந்த இடத்தை பிடிக்க வாய்ப்பு இருந்தாலும், ஆப்கானிஸ்தானுக்கு அந்த வாய்ப்பு இன்னும் இருக்கிறது. 

நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் தலா 8 புள்ளிகளுடன் முறையே 4ஆவது, 5ஆவது, 6ஆவது இடத்தில் உள்ளன. இந்த மூன்று அணிகளுக்கும் தலா 1 போட்டிதான் உள்ளது. இதில், நியூசிலாந்து அணி இலங்கையுடனும், பாகிஸ்தான் அணி இங்கிலாந்துடனும், ஆப்கானிஸ்தான் அணியின் தென்னாப்பிரிக்காவுடனும் மோத உள்ளன. 

இதில், நெட் ரன்ரேட்டில் நியூசிலாந்துதான் முன்னணியில் உள்ளது. பாகிஸ்தானுக்கு நல்ல ரன்ரேட் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் ரன்ரேட் தான் மோசமானதாக உள்ளது. எனவே, அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் தகுதி பெற வேண்டும் என்றால் ஆப்கானிஸ்தான் தென்னாப்பிரிக்கா உடனான போட்டியை பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். குறிப்பாக, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணி தங்களின் அடுத்த போட்டியில் தோற்றுவிட்டால், ஆப்கானிஸ்தான் அந்த வெற்றியை பெற்றாலே அரையிறுதிக்கு முன்னேறிவிடும். 

ஒருவேளை நியூசிலாந்து தோற்று பாகிஸ்தான் வெற்றி பெற்றால், ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானின் நெட் ரன்ரேட்டை தாண்ட வேண்டும். இதில் நியூசிலாந்து - இலங்கை போட்டி நாளையும், ஆப்கன் - தென்னாப்பிரிக்கா - போட்டி நாளை மறுநாளும் உள்ளது. எனவே, நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுவிட்டால் ஆப்கன் அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கிவிடும். பாகிஸ்தான் - இங்கிலாந்து போட்டி நவ. 11ஆம் தேதி நடைபெற உள்ளதால் ஆப்கான் அந்த போட்டியையும் எதிர்நோக்கி காத்திருக்க வேண்டும். அதிர்ஷ்ட காற்று யார் பக்கம் வீசும் என்பதை காத்திருந்து பார்ப்போம். 

மேலும் படிக்க | அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான்? உலக கோப்பையில் புதிய ட்விஸ்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News