பந்துவீச்சாளர்கள் - பேட்டர்கள் ஆகியோரின் உளவியல் ரீதியிலான போர்தான் கிரிக்கெட் என்பது வல்லுநர்களின் தீர்க்கமான முடிவாக உள்ளது. ஆனால், அதனை இப்போது உள்ள ஒருநாள் போட்டிகளிலோ, டி20 போட்டிகளிலோ பார்ப்பது அரிதாகிவிட்டது. அப்படியிருக்க, டெஸ்ட் போட்டிதான் சுவாரஸ்யமான மற்றும் தரமான கிரிக்கெட் உணர்வை வழங்கும் என எதிர்பார்ப்பு இன்னும் உள்ளது. அந்த வகையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே வரும் பிப். 9ஆம் தேதி நாக்பூரில் தொடங்கும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளது.
மேலும் படிக்க | Video: இந்திய வீரர் அடித்த ஒரே அறை... அதிர்ந்த தினேஷ் கார்த்திக்
Face Off ஜோடிகள்
எல்லா போட்டிகளை போன்றே, இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிகளிலும் காணப்படும் இந்த பந்துவீச்சாளர் - பேட்டர் Face off மிகவும் சுவாரஸ்யமானது. முன்பு, சச்சின் - மெக்ராத் - ஷேன் வார்னே - பிரட் லீ; ரிக்கி பாண்டிங் - ஹர்பஜன் என இவர்களுக்கு இடையேயான மோதலை களத்தில் காணவே, கண்கள் கோடி வேண்டும் என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும், 1998இல் ஷார்ஜா டெஸ்டில், பாண்டிங்-ஐ செட் செய்து ஹர்பஜன் விக்கெட் எடுத்ததையே தனியாக கூறலாம். அத்தகைய வரலாற்றை இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் கொண்டுள்ளன. இதில், தற்போதைய பார்டர் - கவாஸ்கர் தொடரின் ஸ்குவாட்டில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இருக்கும் Face Off ஜோடிகள் குறித்து இங்கு பார்ப்போம்.
விராட் கோலி - நாதன் லயான்
2014-15 அடிலெய்ட் டெஸ்ட். தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து திடீரென விலகி, விராட் டெஸ்ட் கேப்டனாக களமிறங்கிய போட்டி. விராட் கோலி இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்திருப்பார். அதுவும், இரண்டாவது இன்னிங்ஸில் சேஸ்ஸிங்கில் அனல் பறந்துகொண்டிருந்த நேரத்தில், விராட் விக்கெட்டை நேதன் லயான் வீழ்த்துவார். அந்த போட்டியில், லயான் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். விராட்டின் மொத்த அதிரடியையும் வீணாக்கி, ஆஸ்திரேலியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். அந்த டெஸ்ட் தொடரையும் இந்தியா 0-2 என்ற கணக்கில் இழந்துவிடும். அன்றில் இருந்து ஆரம்பித்தது விராட் - லயான் மோதல். விராட்டின் விக்கெட்டை இதுவரை ஏழு முறை லயான் கைப்பற்றியிருக்கிறார். தற்போதைய போட்டிக்கு மேலும் சுவை சேர்ப்பது என்னவென்றால், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கோஹ்லி சற்று போராடி வருவதுதான். லயான் இந்தியாவின் சுழலுக்கு ஏற்ற பிட்சை, சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்ப்பார். ஆனால் விராட், சமீபத்தில் சிறந்த பார்மில் இருப்பதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
புஜாரா - ஹேசில்வுட்
புஜாராவின் கடுமையான தடுப்பு மற்றும் எதிர்ப்பை காட்டும் விளையாட்டு, கடந்த சில தொடர்களிலேயே ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு தாக்குதலை மிகவும் சோதித்து வேதனைக்குட்படுத்தியது எனலாம். புஜாராவின் கட்டியெழுப்பும் அந்த சுவரை உடைக்க ஆஸி., பந்துவீச்சாளர்கள் கண்ணீர் போராடினார்கள். 2018/19 இந்தியா - ஆஸ்திரேலியா தொடரின்போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து தாக்குதல் செய்ய முடியாததற்கு முக்கிய காரணம் புஜாராவின் அந்த தடுப்பாட்டம்தான் என ஹேசில்வுட் அப்போது கூறியிருந்தார். அந்த தொடரில் 1258 பந்துகளை எதிர்கொண்ட புஜாரா, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை தனது அதி அற்புத பொறுமையான பேட்டிங்கால் சோர்வடையச் செய்தார். அவர் 2020/21இல் இந்தியா - ஆஸ்திரேலியா தொடரிலும், அதே சாதனையை மீண்டும் செய்தார். அதில் அவர் 928 பந்துகளை எதிர்கொண்டார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை நீண்ட ஓவர்களை போட வைத்த பெருமை புஜாராவைதான் சேரும். இரண்டு தொடர்களையும் இந்தியா 2-1 என கைப்பற்றியது நினைவுக்கூரத்தக்கது. ஆனால், ஹேசில்வுட் மட்டும் அதில் சற்று விதிவிலக்கானவர். ஹேசில்வுட், புஜாராவை கடந்த காலங்களில் ஆறு முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ஆனால், தற்போது முதல் போட்டியில் இருந்து அவர் காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முதல் போட்டியில் மட்டும் புஜாரா ஆசுவாசுமாக விளையாடலாம்.
ரவிச்சந்திரன் அஸ்வின்-டேவிட் வார்னர்
டேவிட் வார்னர் சுமார் 10 ஆண்டுகளாக ஆஸி., அணியின் முன்னணி வீரராக இருந்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் 58.39 சராசரியில் 5000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இதில் 19 சதங்களும், 14 அரைசதங்களும் அடங்கும். இருப்பினும், இந்தியாவில் அவரது சாதனை அப்படியே தலைகீழ். அவர் எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 24.25 சராசரியை மட்டுமே வைத்துள்ளார். இங்கு சதம் அடித்ததே இல்லை. அதற்கு முக்கிய காரணம், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின்தான். அவர் வார்னரை டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 10 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இதில் ஐந்து டிஸ்மிஸல்கள் இந்தியாவில் பெற்றது. இடது கை ஆட்டக்காரரான வார்னர் ஆஸ்திரேலியாவுக்காக இந்தியாவில் 388 ரன்கள் எடுத்துள்ளார். எட்டு போட்டிகள் மற்றும் 16 இன்னிங்ஸ்களில் மூன்று அரைசதங்கள் அடித்துள்ளார். வார்னரைப் போன்ற ஒரு ஆக்ரோஷமான பேட்டர், அஸ்வினின் தந்திரமான ஆஃப் ஸ்பின்னுக்கு எதிராக தாக்குதல் பாதையைதான் தேர்ந்தெடுப்பார். இந்த சுழல் போர், வார்த்தை போராகவும் மாற வாய்ப்புள்ளது.
ரோஹித் சர்மா-பாட் கம்மின்ஸ்
தற்போது இரண்டு அணிகளின் கேப்டன்களான ரோஹித் - கம்மின்ஸ் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் பலமுறை நேருக்கு நேர் சந்திக்கவில்லை. இருப்பினும், அவர்களுக்கு இடையேயான போட்டி சுவாரஸ்யமாக இருக்கும். கம்மின்ஸ் டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்தை இரண்டு முறை ஆட்டமிழக்கச் செய்திருந்தாலும், அவர்கள் இந்தியாவில் ஒருவரையொருவர் சந்தித்ததில்லை. ஓப்பனிங்கில் களமிறங்க உள்ளார் ரோஹித். எனவே, தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்த கம்மின்ஸ் ஆரம்பத்திலேயே ரோஹித்தை பெவிலியனுக்கு அனுப்ப முயற்சிப்பார். இதனால், ஆட்டத்தில் தொடக்கத்திலே இருந்த சூடு பறக்க வாய்ப்புள்ளது.
ரவீந்திர ஜடேஜா-ஸ்டீவ் ஸ்மித்
60.89 என்ற டெஸ்ட் பேட்டிங் சராசரியுடன், ஸ்டீவ் ஸ்மித் நவீன கால ஜாம்பவான்களில் ஒருவர். அனைத்து அணிகளுக்கு எதிராகவும் அவருக்கு சாதனைகள் உள்ளன. இந்தியாவுக்கு எதிராகவும் அப்படிதான். அவருக்கு இந்தியா அணிக்கு எதிராக ஒட்டுமொத்த டெஸ்ட் சராசரி 72.58 ஆகும். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில், இந்தியா மண்ணில் 60.0 சராசரியும் வைத்துள்ளார். அதே நேரத்தில், இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஒரு சில சந்தர்ப்பங்களில் ஸ்மித்தை சிறப்பாக கையாண்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் நான்கு முறை ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இது தவிர, இரு நாடுகளுக்கு இடையேயான சிட்னி டெஸ்டின் (2021) போது ஸ்மீத், துல்லியமான ரன்-அவுட் மூலமாகவும் ஜடேஜா வெளியேற்றியிருந்தார். ஜடேஜா தனது பந்துவீச்சு பாணிக்கு ஏற்ற பிட்ச்களில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு இன்னும் பெரிய சவாலை அளிப்பார்.
மேலும் படிக்க | Virat Kohli Vs Sohail Khan: விராட் கோலி குறித்து பாகிஸ்தான் வீரர் சர்ச்சை கருத்து
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ