Video: போட்டியில் இல்லை... களத்திற்கு திடீரென ஓடி வந்த விராட் கோலி... ஆர்பரித்த ரசிகர்கள்!

Virat Kohli Viral Video: வங்கதேச அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ஓய்வில் உள்ள விராட் கோலி, களத்தில் வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்த வேடிக்கையான வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 16, 2023, 01:17 AM IST
  • இன்றைய பிளேயிங் லெவனில் 5 மாற்றங்கள்.
  • திலக் வர்மா தனது அறிமுக போட்டியில் விளையாடுகிறார்.
  • இறுதிப்போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது.
Video: போட்டியில் இல்லை... களத்திற்கு திடீரென ஓடி வந்த விராட் கோலி... ஆர்பரித்த ரசிகர்கள்! title=

IND vs BAN, Virat Kohli Viral Video: இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய அணி விளையாடும் போது அதில் விராட் கோலி விளையாட வேண்டும். அப்படி, இந்திய அணி ஒரு போட்டியில் விளையாடும் போது, விராட் கோலி பிளேயிங் லெவனில் இல்லை என்றால் பெரிதும் ஏமாற்றம் அடைவார்கள். அந்த அளவிற்கு அவர் கடந்த 15 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி பெரும் பங்காற்றி உள்ளார் எனலாம். 

அதுமட்டுமின்றி விராட் கோலியின் ஆக்ரோஷமும், முதிர்ச்சியும் இந்திய அணிக்கு தொடர்ந்து தேவைப்படும் ஒன்றாகவே உள்ளது என ரசிகர்கள் நினைக்கின்றனர். அந்த வகையில், ஆசிய கோப்பையின் சூப்பர்-4 சுற்றில் சம்பிரதாயமாக இன்று நடைபெறும் வங்கதேச அணியுடனான போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஏற்கெனவே, இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், நேற்று வலிமையான பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை 11ஆவது முறையாக ஆசிய கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

பிளேயிங் லெவனில் இந்தியா 5 மாற்றங்கள்

எனவே, இன்றைய போட்டியின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத ஒன்றாகும். வங்கதேச அணி இந்த சுற்றின் முதலிரண்டு போட்டிகளில் தோல்வியுற்று சொதப்பிவிட்டன. இன்றைய போட்டி அவர்களுக்கும், இந்திய அணிக்கும் உலகக் கோப்பை தொடருக்கு முந்தைய பயிற்சிப் போட்டியாகவே இருக்கும். அந்த வகையில், இன்றைய போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவனில் 5 மாற்றங்களை செய்துள்ளது. குறிப்பாக, விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஆசியக் கோப்பையை வென்று தரவரிசையில் முதலிடம் பிடிக்குமா இந்திய அணி? சாத்தியக்கூறுகள்

இந்திய அணியில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா என ஐந்து நட்சத்திர வீரர்கள் இன்றைய போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டும், மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் இந்திய அணி இன்றைய போட்டியை பயன்படுத்தியுள்ளது எனலாம். அதன் படி, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா (அறிமுகம்), ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி ஆகியோரை பிளேயிங் லெவனில் சேர்த்துள்ளது. 

வைரலாகும் விராட் கோலி

இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசி வருகிறது. இந்நிலையில், போட்டியில் Drinks இடைவேளையின் போது, களத்தில் உள்ள வீரர்களுக்கு விராட் கோலியும், சிராஜும் நீர் கொண்டு வந்தனர். அப்போது, தண்ணீர் பாட்டில்களை சுமந்து வந்த விராட், விளையாட்டுத் தனமாக ஓடி வந்து வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்தார்.

இதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிராஜ் பின்னாடி அமைதியாக நடந்து வர, விராட் கோலி வேடிக்கையாக ஓடி வரும் வீடியோ ரசிகர்களையும், மைதானத்தில் பார்வையாளர்களையும் மிகவும் கவர்ந்தது. அதேபோல், மீண்டும் பெவிலியனுக்கு திரும்பும்போதும், வேடிக்கையாக மற்ற வீரர்களுக்கு சிரிப்பூட்டும் வகையில் ஓடிச்சென்றதையும் மற்றொரு வீடியோவில் காண முடிகிறது. 

விராட் கோலியின் Vibe

விராட் கோலி விளையாடாவிட்டால் கூட, களத்திற்கு அந்த உற்சாகத்தையும், மகிழ்வையும் கொண்டு வந்துவிடுகிறார் என கிரிக்கெட் ரசிகர்கள் அந்த வீடியோவில் கருத்து தெரிவித்து வருகின்றனர். விராட்டிடம் காணப்படும் அந்த ஃபிட்னஸ் மற்றும் உற்சாகம் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் தேவையான அடிப்படை விஷயங்களில் ஒன்று எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த போட்டியில் ஒரு சில ஓவர்களுக்கு விராட் கோலி மாற்று வீரராக வந்து ஃபீல்டிங் செய்தார். 

ஆசிய கோப்பை சாம்பியனாகுமா இந்தியா...?

ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரும் செப். 17ஆம் தேதி இதே கொழும்பு பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணியும், இலங்கை அணியும் சாம்பியன் பட்டத்தை வெல்ல கடுமையான மோதலை வெளிப்படுத்துவார்கள். கடந்த செப். 12ஆம் தேதி இரு அணிகளும் மோதியதில், இந்திய 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்திய அணி ஆசிய கோப்பைக்கு பின் உள்நாட்டில் ஆஸ்திரேலியாவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அதன்பின், வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் 50 ஓவர்களுக்கான ஐசிசி உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 'லவ் யூ விராட் கோலி' பாகிஸ்தான் ரசிகர்கள் காட்டும் எல்லை கடந்த அன்பு
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News