சிக்கலில் சிக்க விரும்பவில்லை; குடியுரிமைச் சட்டம் குறித்து தெரியாது: விராட் கோலி

CAA சட்டம் குறித்து முழுமையாக தெரிந்துக்கொள்ளாமல் கருத்து தெரிவிக்க மாட்டேன். இதுபோன்ற எந்தவொரு விஷயத்திலும் என்னை நுழைக்க விரும்பவில்லை என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 4, 2020, 07:42 PM IST
சிக்கலில் சிக்க விரும்பவில்லை; குடியுரிமைச் சட்டம் குறித்து தெரியாது: விராட் கோலி title=

குவாஹாட்டி: ஜனவரி 5 ஆம் தேதி இலங்கையுடன் முதல் டி 20 போட்டியை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று (சனிக்கிழமை) ஊடகங்களை சந்தித்தார். அப்பொழுது பத்திரிகையாளர்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கேள்விகள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், CAA சட்டம் குறித்து முழுமையாக தெரிந்துக்கொள்ளாமல் கருத்து தெரிவிக்க மாட்டேன் என்று கூறினார். குவாஹாட்டிக்கு வருவதில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறினார். குடியுரிமைச் சட்டம் தொடர்பாக குவஹாத்தியில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேசிய கோஹ்லி, "இந்த நகரம் நிச்சயமாக பாதுகாப்பானது. இங்கு வருவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. குடியுரிமைச் சட்டத்தை (CAA) பொருத்தவரை நான் பொறுப்பற்ற முறையில் எந்தக் கருத்தையும் தெரிவிக்க மாட்டேன். எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கும் முன், உங்களிடம் முழுமையான தகவல்கள் இருக்க வேண்டும். இதுபோன்ற எந்தவொரு விஷயத்திலும் என்னைச் சேர்க்க நான் விரும்பவில்லை. CAA சட்டம் குறித்து முழுமையாக எனக்கு தெரியாது" என்றார்.

குடியுரிமைச் சட்டம் தொடர்பாக நாட்டின் பல பகுதிகளிலும் இன்னும் எதிர்ப்புக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில், பாஜக CAA-வுக்கு ஆதரவாக நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. ஜனவரி 5 முதல் ஜனவரி 15 வரை, குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்த "மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை" மேற்கொள்வதன் மூலம் மக்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காண மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

ஐ.சி.சி.யின் நான்கு நாள் டெஸ்ட் போட்டி திட்டம் குறித்து பேசிய விராட், நான்கு நாள் டெஸ்ட் போட்டி என்பதில் எனக்கு விருப்பம் இல்லை. ஏனெனில் இது விளையாட்டின் உண்மையான வடிவமாக இருக்காது என்று நான் நம்புகிறேன் என்றார். "இது மாறக்கூடாது என்று நான் நினைக்கிறேன், நான் சொன்னது போல், டெஸ்ட் கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்ல பகல்-இரவு ஆட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது, இது உற்சாகத்தை தந்துள்ளது. வேறு திட்டத்தில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, பகல்-இரவு ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துங்கள் என்றார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது

Trending News