IPL 2021: 14-வது IPL கிரிக்கெட் தொடரில், இன்றைய லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இன்றைய 8வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற சென்னை அணி (Chennai Super Kings) , முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.
பஞ்சாப் அணியில் (Punjab Kings) மிக சிறப்பாக விளையாடிய ஷாருக்கான், திறமையாக சென்னை அணியின் அபாரமான பந்துவீச்சை சமாளித்தார். தீபக் சஹார் அருமையாக பந்து வீசி, 4 விக்கெடுக்களை வீழ்த்தியதோடு, 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இன்றைய போட்டியில், முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக டூப்பிளிஸிஸ், ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். ஆனால், ருதுராஜ் சரியாக ஆடாமல் தடுமாறியதோடு, 5 ரன்களில் தீபக் ஹூடா வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனையடுத்து களத்திற்கு வந்த மொயின் அலி அதிரடியாக ஆடினார். ஆனால், அவர் 46 ரன்கள் எடுத்த நிலையில், பஞ்சாப் பந்துவீச்சாளர் முருகன் அஸ்வின் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய ரெய்னாவும் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஆடிய அம்பத்தி ராயுடு முதல் பந்திலே டக் அவுட் ஆனார். பிறகு, சாம் கரண் களமிறங்கினார். இறுதியில், 15.3 ஓவர்களில் சென்னை அணி 107 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இது இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் பெறும் முதல் வெற்றியாகும்.
IPL 2021 துவங்கி சில போட்டிகள் நடந்துள்ள நிலையில், சென்னை அணி தனது முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில், சென்னை டெல்லி அணியிடம் தோற்றுப்போனது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR