IPL 2023: கேப்டனாக களமிறங்கிய கோலி... பந்துவீச்சில் மிரட்டும் ஆர்சிபி - கரையேறுமா பஞ்சாப்?

IPL 2023 PBKS vs RCB: பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில், பெங்களூரு அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. கோலி, டூ பிளேசிஸ் தவிர அனைத்து பேட்டர்களும் சொதப்பலாக விளையாடினர். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 20, 2023, 06:00 PM IST
  • பஞ்சாப் அணிக்கு சாம் கரன் கேப்டனாக செயல்படுகிறார்.
  • டூ பிளேசிஸ் இம்பாக்ட் சப் வீரராக பேட்டிங் மட்டும் ஆடினார்.
IPL 2023: கேப்டனாக களமிறங்கிய கோலி... பந்துவீச்சில் மிரட்டும் ஆர்சிபி - கரையேறுமா பஞ்சாப்? title=

IPL 2023 PBKS vs RCB: நடப்பு ஐபிஎல் தொடரின் 27 ஆவது லீக் போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதில், பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை செய்தது. 

கடந்த போட்டியை போலவே, பஞ்சாப் அணியில் ஷிகர் தவாணுக்கு பதிலாக சாம் கரன் கேப்டனாக செயல்பாட்டார். தவாணுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.  அதேபோல, பெங்களூரு அணியின் கேப்டனான டூ பிளேசிஸிற்கு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக, இன்றைய போட்டியில் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டார். இருப்பினும், இம்பாக்ட் சப் வீரராக டூ பிளேசிஸ் பேட்டிங் மட்டும் விளையாடினார். 

மேலும் படிக்க | IPL 2023: ’சேஸிங் மட்டும் எங்க கிட்ட மறந்துடுங்க’ ராஜபாட்டை நடத்தும் கேஎல் ராகுல் டீம்

விராட் கோலி, ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் இருந்தே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வந்தாலும், அவர் 2013ஆம் ஆண்டில்தான் அணியின் தலைமைப் பொறுப்பை அலங்கரித்தார். இவரின் கேப்டன்ஸியில் பெங்களூரு அணி 2016ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறியது. 2015, 2020, 2021 என மூன்று சீசன்களில் பிளே ஆஃப் வரை முன்னேறியிருந்தது.

இதையடுத்து, 2022ஆம் ஆண்டு தொடருக்கு முன் அவர் ஆர்சிபியின் கேப்டன் பொறுப்பை துறந்தார். அவர் 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கு பின் டி20 கேப்டன்ஸியில் இருந்து விலகியதை அடுத்து, ஒருநாள் போட்டிகளின் கேப்டன்ஸியில் இருந்து பிசிசிஐ அவரை விலக்கியது. இதையடுத்து, கடந்தாண்டு ஜன.15ஆம் தேதி டெஸ்ட் கேப்டன்ஸியில் இருந்தும் விலகுவதாக கோலி அறிவித்தார். 

அதன்பின், அவர் எந்த போட்டியிலும் கேப்டனாக செயல்படாத நிலையில், சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து கோலி கேப்டனாக களமிறங்கியுள்ளார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 175 ரன்களை பஞ்சாப் அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. 

இதில், டூ பிளேசிஸ் 84(56), கோலி 59(47) ஆகியோர் மட்டுமே சொல்லிக்கொள்ளும்படி விளையாடினர். 16 ஓவர் வரை இந்த ஜோடி பிரியாமல் நன்றாக விளையாடி வந்த நிலையில், கோலி 17ஆவது ஓவரின் முதல் பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் டக் அவுட்டாக, அடுத்த ஓவரில் டூ பிளேசிஸ் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்தவர்களும் பெரிதாக ரன்களை எடுக்கவில்லை.

கோலி, டூ பிளேசிஸ் களத்தில் இருக்கும்போது, ஸ்கோர் 200 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆர்சிபி அணி வெறும் 174 ரன்களை மட்டும் எடுத்தது. பஞ்சாப் பந்துவீச்சில் ஹர்பிரீத் பிரர் 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லீஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இருப்பினும், ஆர்சிபி அணி பந்துவீச்சில் மிரட்டி வருகிறது. பஞ்சாப் அணி 6 ஓவர்களில் 49 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ஹசரங்கா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 

மேலும் படிக்க | Arjun Tendulkar: ஆர்சர், பும்ரா இடத்தை நிரப்பிய அர்ஜுன்... மும்பையின் எதிர்காலம் இவர் தானா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News