அந்த மனசு இருக்கே... கஷ்டப்படும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ரிங்கு சிங் - எப்படி தெரியுமா?

Rinku Singh: சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய கிரிக்கெட் வீரர்கள் தங்கி பயிற்சிக்கு செல்லும் வகையிலான விடுதியை ரிங்கு சிங் கட்டிவருவதாக கூறப்படுகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Apr 19, 2023, 08:09 AM IST
  • ரிங்கு சிங்கிற்கு வயது 25.
  • ரிங்கு சிங் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்.
  • இவர் தற்போது கேகேஆர் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.
அந்த மனசு இருக்கே... கஷ்டப்படும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ரிங்கு சிங் - எப்படி தெரியுமா? title=

Rinku Singh: கொல்கத்தா அணியில் தற்போது விளையாடி வரும் ரிங்கு சிங், அந்த அணியின் நட்சத்திர வீரராக உருமாறியுள்ளார். கடந்தாண்டே கொல்கத்தா அணியில் விளையாடி கவனம் பெற்றிருந்தாலும், நடப்பு ஐபிஎல் தொடரில் அவரின் ஒவ்வொரு ஆட்டமும் ரசிகர்களையும், கிரிக்கெட் வல்லுநர்களையும் ஒரு சேர ஈர்த்தது எனலாம். 

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில், கொல்கத்தா அணி வெற்றி பெற 28 ரன்கள் தேவைபட்டது. ஆட்டம் ஏறத்தாழ கைவிட்டு போய்விட்ட நிலையில், ரிங்கு சிங்கின் அசாத்திய அதிரடியால் கொல்கத்தா அன்றைய போட்டியை வென்றது. அதாவது, 5 பந்துகளில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு ரிங்கு சிங் ஆட்டத்தை மட்டுமின்றி அனைவரின் மனதையும் வென்றுவிட்டார். 

மேலும், ரிங்கு சிங் மீது கூடுதல் மதிப்பு உண்டாக காரணம், அவரின் சமூக - பொருளாதார நிலை எனலாம். சமையல் எரிவாயு சிலிண்டரை டெலிவரி செய்யும் நபரின் மகனான ரிங்கு சிங் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து போராடி இந்த இடத்தை எட்டிப்பிடித்து உள்ளார். கிரிக்கெட் விளையாடினால், அவரது தந்தை அடிப்பார் என தெரிந்தும், அவரின் தாயார் கொடுத்த ஊக்கத்தாலும், உதவியாலும் ரிங்கு சிங் கிரிக்கெட் கனவை நனைவாக்கியுள்ளார். 

மேலும் படிக்க | CSKvsRCB: ஓவரா கொண்டாடாதீங்க விராட் கோலி - 10% பைன் போட்ட பிசிசிஐ: இதுதான் காரணம்..!!

அதுமட்டுமின்றி, அவரின்  பொருளாதாரம் மற்றும் குடும்பச்சூழல் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் பல இன்னல்களுக்கு ஆளாக்கியிருக்கிறது. வேலைக்காக ரிங்கு சிங், கோச்சிங் சென்டரில் சுத்தம் செய்யும் வேலையையும் செய்திருக்கிறார். இருப்பினும் கிரிக்கெட் மீதான ஈர்ப்பினால், அதை விட்டு ஆட்டத்தில் கவனத்தை செலுத்தியிருக்கிறார். தற்போது போதிய அளவு வெளிச்சமும், பணமும் கிடைத்த நிலையில், ரிங்கு சிங் பலரும் ஆச்சர்யப்படும் ஒரு முயற்சியில் இறங்கியுள்ளார். 

ரிங்கு சிங் இப்போது அவரைப் போன்ற மற்றவர்களும் தங்கள் கனவுகளை நனவாக்க உதவ விரும்புகிறார். 25 வயதான இவர், பின்தங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கு தங்கி பயிற்சிக்கு செல்லும் வகையிலான விடுதியை ரூ. 50 லட்சம் மதிப்பில் கட்ட செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, ரிங்கு சிங்கின்ன் சிறுவயது கிரிக்கெட் பயிற்சியாளர் மசூதுஸ்-ஜாபர் அமினி கூறியதாவது, "அவர் எப்பொழுதும் இளம் வீரர்களுக்கு தங்கும் விடுதியைக் கட்டிக்கொடுக்க வேண்டும் என சொல்வார். அவர்களின் கனவுகளைத் தொடர நிதி ஆதாரம் இருக்காது. அவர் இப்போது பொருளாதார ரீதியாக நன்றாக இருப்பதால், அதை நனவாக்க முடிவு செய்துள்ளார். 

சுமார் 90 சதவீத வேலைகள் முடிந்துவிட்டன. அடுத்த மாதத்திற்குள் அது தயாராகிவிடும். ஐபிஎல் தொடரில் இருந்து திரும்பியதும் ரிங்கு சிங் அதைத் திறந்து வைப்பார். இந்த வசதி இந்த இளைஞர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்று நம்புகிறேன்" என்றார். இந்த விடுதி, ரிங்கு சிங்கின் சொந்த ஊரான உத்தரப் பிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

ரிங்கு சிங் கட்டும் அந்த விடுதியில் 14 அறைகள் தனித்தனி கழிப்பறைகளுடன் உள்ளன, அதில் நான்கு பயிற்சியாளர்கள் தங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வளரும் கிரிக்கெட் வீரர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தங்குமிட சேவையை வழங்கும். இந்த வசதியுடன் கட்டப்பட்டுள்ள விடுதியில், கேண்டீன் மூலம் பயிற்சி பெறுபவர்களுக்கு உணவும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த விடுதியின் உதவியால், ரிங்கு சிங் போன்று பல இளைஞர்கள் வருங்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கைகளாக மாறவும் வாய்ப்புள்ளது என்பதில் சந்தேகமில்லை. 

மேலும் படிக்க | IPL 2023 MI vs KKR: மைதானத்தில் நிதிஷ் ராணா - சோகீன் வாக்குவாதம்... பிரச்னையின் பின்னணி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News