இழக்கும் மாண்பை மீட்க ராகுலுடன் கைகோர்ப்போம் - கமல் ஹாசன் அழைப்பு

ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அழைப்பு விடுத்திருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 23, 2022, 07:50 PM IST
  • ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை நடத்திவருகிறார்
  • நாளை டெல்லியில் யாத்திரை
  • கமல் ஹாசன் பங்கேற்கிறார்
இழக்கும் மாண்பை மீட்க ராகுலுடன் கைகோர்ப்போம் - கமல் ஹாசன் அழைப்பு title=

மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இப்போதிருந்தே சூடுபிடித்துள்ளது. இருக்கும் அதிகாரத்தை தக்க வைக்க வேண்டுமென்பதில் பாஜகவும், இழந்த அதிகாரத்தை மீட்க வேண்டுமென்பதில் காங்கிரஸும் முனைப்பு காட்டிவருகின்றன. குறிப்பாக ஆட்சிக் கட்டிலை காங்கிரஸ் தொடர்ந்து இரண்டு முறை விட்டுக்கொடுத்திருக்கிறது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மிகவும் சோர்வடைந்துவிட்டதாக பலர் கூறுகின்றனர்.

எனவே காங்கிரஸ் தொண்டர்களின் சோர்வை நீக்கவும், மக்களிடம் காங்கிரஸ் கட்சியின் பலத்தையும், நோக்கத்தையும் காண்பிக்கும்வகையில் பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியிருக்கிறார். இந்த யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கிய அவர் காஷ்மீர்வரை செல்லவிருக்கிறார். 150 நாள்களில் கிட்டத்தட்ட 3,570 கிலோமீட்டர் தூரம் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார்.

இந்தப் பயணமானது தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரம், தெலங்கானா மகாராஷ்டிரா வழியாக தற்போது ராஜஸ்தானில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த யாத்திரையில் பல மாநிலங்களைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர்.

அந்தவகையில் நாளை டெல்லியில் நடக்கவிருக்கும் யாத்திரையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் கலந்துகொள்ளவிருக்கிறார். இதுதொடர்பான அறிவிப்பு சில நாள்களுக்கு முன்பு வெளியானது.

இந்நிலையில் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொள்வது தொடர்பாகவும், அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கமல் ஹாசன் பேசும் வீடியோ ஒன்றை மக்கள் நீதி மய்யம் வெளியிட்டிருக்கிறது.

அந்த வீடியோவில் கமல் ஹாசன், “பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொள்ளும்படி ராகுல் காந்தி எனக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ஒரு இந்தியனாக இழந்து கொண்டிருக்கும் மாண்பை மீட்டெடுக்கும் முயற்சியாக இதனை நான் கருதுகிறேன்.

கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இம்முயற்சியில் தலைநகரில் வாழும் தமிழர்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்பது என் ஆசை. இது தேசத்திற்கான ஒரு நடைபயணம். இது கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. டிசம்பர் 24, 2022 நான் உங்களிடத்தில் வருகிறேன். உங்கள் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன். வாருங்கள் புதிய இந்தியா படைப்போம், நாளை நமதே” என குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க | மணிப்பூர் தாங்-டா சேம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றிபெற்று புகழ் சேர்த்த தமிழக மாணவர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News