அண்ணாமலை ரஃபேல் வாட்ச் வாங்கவில்லை... பிரியாணிதான் வாங்கினார் - வெளியான புதிய ஆதாரம்!

Annamalai Rafael Watch Bill Controversy: தனது ரஃபேல் வாட்ச்சின் பில்-ஐ அண்ணாமலை இன்று வெளியிட்ட நிலையில், அண்ணாமலை கூறிய கருத்துகளுக்கும், அவர் வெளியிட்ட பில்லிலும் முரண்பாடுகள் உள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தற்போது அதுகுறித்த புதிய ஆதாரமும் வெளியாகியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Apr 14, 2023, 06:28 PM IST
  • தனது ரஃபேல் வாட்ச் பில்லை அண்ணாமலை இன்று வெளியிட்டார்.
  • அதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளதாக திமுகவினர் குற்றச்சாட்டு.
  • அதற்கான ஆதாரங்களையும் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.
அண்ணாமலை ரஃபேல் வாட்ச் வாங்கவில்லை... பிரியாணிதான் வாங்கினார் - வெளியான புதிய ஆதாரம்! title=

Annamalai Rafael Watch Bill Controversy: முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள் ஆகியோரின் சொத்துப் பட்டியலை தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை தி. நகரில் உள்ள கமலாயத்தில் இன்று (ஏப். 14) வெளியிட்டார். நீண்ட நாள்களாக இதுகுறித்து பேசி வந்த அண்ணாமலை, சொத்துப் பட்டியலின் முதல் பாகத்தை வெளியிட்டார். 

'பில்'-இல் பல்வேறு குழப்பங்கள்

இரண்டாம் பாகத்தில் இன்னும் பல தலைவர்கள், திமுக அல்லாத பிற கட்சியினர் ஆகியோரின் சொத்துப் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்தார். மேலும், அவரின் ரஃபேல் வாட்ச்சின் பில்லையும் அவர் வெளியிட்டார். அதாவது, தன்னை எளிமையான மனிதர் என கூறிக்கொள்ளும் ஒருவரால் எப்படி விலை மதிப்பான வாட்ச்சை வாங்க முடியும் என திமுகவினர் தொடர்ந்து எழுப்பிய கேள்விகளுக்கு அண்ணாமலை இந்த ஆதாரங்களை பொதுவெளியில் வெளியிட்டார். 

தற்போது, அண்ணாமலை வெளியிட்ட 'பில்' பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அண்ணாமலை கூறிய கருத்துகளுக்கும், அவர் வெளியிட்ட பில்லிலும் முரண்பாடுகள் உள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. 

மேலும் படிக்க | முதல் சீரிஸில் திமுக.. அடுத்த சீரிஸில் அதிமுக - அண்ணாமலை போட்ட குண்டு

சீரியல் நம்பரில் குழப்பம்

அந்த ரஃபேல் வாட்ச்சை இந்தியாவில் இரண்டு பேர் மட்டுமே வைத்துள்ளனர் என்றும் மிகப்பெரிய எம்என்சி கம்பெனியில் பணியாற்றும் நிர்வாகி ஒருவரிடமும், கோவையைச் சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணனிடம் இருந்ததாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தான் வைத்திருக்கும் இந்த வாட்ச் ரூ. 3 லட்சத்திற்கு நண்பரான கோவை சேரலாதன் ராமகிருஷ்ணனிடம் பெற்றதாக அண்ணாமலை கூறினார். அதாவது, தான் முறையாக தான் அந்த வாட்ச்சை பெற்றதாக அண்ணாமலை தெரிவித்தார். 

இந்நிலையில், இந்த வாட்ச்சின் பில் தற்போது பரபரப்பை உண்டாகியுள்ளது. கோவை சேரலாதன் பெற்றதாக கூறப்படும் வாட்ச்சின் சீரியல் நம்பர்:  BRO394EBl147, அண்ணாமலை வாங்கியதாக கூறப்படும் வாட்ச்சின் சீரியல் நம்பர்: No BRO394DAR147 என தகவல் வெளியாகியுள்ளது. இதனை திமுகவின் மாணவரணி தலைவரான ராஜீவ் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதனால், அண்ணாமலை கூறுவதில் சந்தேகம் உள்ளதாகவும் திமுகவினர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 

வங்கி பாஸ்புக்

இதுமட்டுமின்றி, இதில் மற்றொரு முக்கிய தகவலையும் ராஜீவ் காந்தி தற்போது வெளியிட்டுள்ளார். அதாவது, அண்ணாமலை அந்த வாட்ச்சை வாங்கியதாக கூறும் 2021ஆம் ஆண்டு மே 27ஆம் ஆண்டு, வாட்ச் வாங்கியதற்கான எந்த பண பரிவர்த்தனையும், அவரின் வங்கி பாஸ்புக்கில் இல்லை என ட்வீட் செய்துள்ளார். 

இதுகுறித்து அவர் பதிவிட்ட ட்வீட்டில், 'வாட்ச்சை பணம் கொடுத்து தான் வாங்கினேன், அதையும் வங்கி கணக்கு மூலம் 2021ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி கொடுத்தேன் என வங்கி பாஸ்புக்கெல்லாம் அண்ணாமலை வெளியிட்டார். ஆனால், மே 27ஆம் தேதி பெங்களூரில் அவர் சாப்பிட்ட பிரியானி தான் பாஸ்புக்கில் இருக்கிறது. எங்கே தேடியும் நிங்கள் கொடுத்த ரூ. 3 லட்சம் உங்க வங்கி கணக்கிலேயே இல்லையே' என குறிப்பிட்டுள்ளார். மேலும், அதுசார்ந்த இரண்டு பாஸ்புக் புகைப்படங்களையும், அன்றைய பண பரிவர்த்தனையையும் குறிப்பிட்டு பதிவேற்றியுள்ளார். மே 27ஆம் தேதி, ஸ்விக்கி மூலம் இரண்டு உணவு டெலிவரி பண பரிவர்த்தனை மட்டுமே உள்ளது. அதில் பிரியாணி என குறிப்பிடப்படவில்லை. 

ரூ. 3 லட்சம் ரொக்கமா?

அண்ணாமலை வெளியிட்ட இன்றைய பில்லில், மே 27ஆம் தேதி கோவை சேரலாதனிடம் ரொக்கமாக ரூ. 3 லட்சம் கொடுத்தாக குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, வழக்கறிஞரும், திமுகவின் செய்தித் தொடர்பாளருமான சரவணன் ட்விட்டரில்,"2 லட்ச ரூபாய்க்கு மேல் யாரும் ரொக்கமாக கொடுக்கக்கூடாது என்பது வருமான வரித்துறையின் சட்டம். 3 லட்ச ரூபாய் ரொக்கம் கைமாற்றல் செல்லுமா?" என கேள்வியும் எழுப்பியுள்ளார். 

மேலும், இன்றைய செய்தியாளர் சந்திப்பில், இது 147ஆவது வாட்ச் என்று அண்ணாமலை கூறியிருந்தார். ஆனால், இதற்கு முன்னர் அளித்த பேட்டியில் 149ஆவது வாட்ச் என கூறியிருந்த காணொலியையும் ஒப்பிட்டு திமுகவினர் பகிர்ந்து வருகின்றனர். அண்ணாமலை வெளியிட்டது பில் இல்லை என்றும் அது வெறும் டெலிவரி ரிசிப்ட் எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.  இதனால், அண்ணாமலை வெளியிட்டது சரியான பில் தானா என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

மேலும் படிக்க | அண்ணாமலை குற்றச்சாட்டுகளை பார்த்தால் சிரிப்புதான் வருது: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News