பாஜகவில் பிடிஆர்? 'நாங்கள் அழைக்க மாட்டோம், ஆனால்...' - அண்ணமாலை

Annamalai On TN Cabinet Reshuffle: பாஜகவை பொருத்தவரை நாங்களாக யாரையும் எங்கள் கட்சிக்கு வருமாறு அழைக்க மாட்டோம் என்றும் ஆனால் கமலாலயத்தின் கதவு எப்போதும் திறந்தே உள்ளது என்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : May 12, 2023, 04:49 PM IST
  • DMK Files இரண்டாம் பாகம் ஜூலை மாதத்தில் வெளியாகும் - அண்ணாமலை.
  • திராவிட மாடல் அரசின் தூதராக இருந்த பிடிஆர்-ஐ மாற்ற காரணம் என்ன? - அண்ணாமலை.

    20க்கும் மேலான தொழில் நிறுவனங்களை டிஆர்பி ராஜா குடும்பத்தினர் வைத்துள்ளனர் - அண்ணாமலை.
பாஜகவில் பிடிஆர்? 'நாங்கள் அழைக்க மாட்டோம், ஆனால்...' - அண்ணமாலை title=

Annamalai On TN Cabinet Reshuffle: சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அதில் பேசிய அவர்,"தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ஆவடி நாசரின் துறை குறித்து பல குற்றச்சாட்டை கூறினோம். ஆவின் பால் விலை ஒரே ஆண்டில் மூன்று முறை உயர்த்தப்பட்டது. 

பிப்ரவரியில் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டின் கொழுப்பு தன்மை 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஐனவரி மாதம் தொண்டர் மீது கல் வீசினார். ஆவடி நாசர் அமைச்சரவையில் இருந்து  விடுவிக்கப்பட்டதற்கு எங்களது பாராட்டை தெரிவித்து, வரவேற்கிறோம். 

டிஆர்பி ராஜாவின் தகுதி?

புதிய பால்வளத்துறை அமைச்சர் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதிக தொழில்நிறுவனங்களை வைத்திருக்கும் குடும்பத்துக்கு தொழில்துறையை ஒதுக்கீடு செய்வது பொருந்துமென்றால் அது டிஆர்பி ராஜாவுக்கு பொருந்தும். 20க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களை டிஆர்பி ராஜா குடும்பத்தினர் வைத்துள்ளனர். 

டிஆர்பி ராஜா குடும்பத்தினர் சாராய ஆலை வைத்துள்ளனர். அவரால் தொழில்துறையில் திறம்பட பணியாற்ற முடியுமா?, சாராய உற்பத்தி , சாராய விற்பனை அனைத்தையும் தங்கள் கையில் வைத்திருக்க வேண்டுமென திமுகவினர் நினைக்கின்றனர். 

பிடிஆர்-ஐ மாற்றியதை ஏன்?

டிஆர் பாலு என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது நகைப்பிற்குரியது. அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியவர் அவர். பல ஊழல்களை செய்தவர் டிஆர் பாலு, மேலும் அதிகமாக அவர் மீது குற்றச்சாட்டுகளை முன் வைப்பேன். வடசேரி பகுதியில் புதிதாக சாராய ஆலை திறக்க முயற்சித்தவர் டிஆர் பாலு.

பழனிவேல் தியாகராஜன் குறித்து 2023ஆம் ஆண்டு ஐனவரியில் பேசிய முதலமைச்சர், மூன்று தலைமுறையாக தமிழக வளர்ச்சிக்கு தங்களை அர்ப்பணித்த குடும்பம் அவர்கள், தனது மொத்த திறமையையும் நிதித்துறைக்கு பயன்படுத்தி வருகிறார் என கூறினார். பிடிஆர் திராவிட மாடல் அரசின் பிராண்ட் அம்பாசடராக இருந்த நிலையில் அவரை மாற்ற காரணம் என்ன? 

ரூ. 1,461 கோடி இழப்பீடா?

முதலமைச்சர் குடும்பம் குறித்த ஆடியோ பிரச்சனைக்காக அவரை மாற்றியதை ஏற்க முடியாது.  முதலமைச்சர் என் மீது இன்னொரு அவதூறு வழக்கு தொடர வேண்டும், அதன் மூலம் அந்த ஆடியோ நீதிமன்றம் செல்லும். 1 மணி நேர முழு ஆடியோவையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். பிடிஆரை பகடைக்காயாக முதலமைச்சர் பயன்படுத்தக் கூடாது. 

பிடிஆர் குறித்து பாராட்டி பேசிய முதலமைச்சருக்கு 2 மாதத்தில் ஏன் மனமாற்றம் ஏற்பட்டது? சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடுமா..? பிடிஆர் ஆடியோ பதிவை வெளியிட்டதும் முதல்வர் பார்வையில் குற்றம்தான். எனவே இரண்டாவது வழக்கை என் மீது முதலமைச்சர் தொடர வேண்டும். என் மீது மொத்தமாக ரூ. 1,461 கோடி இழப்பீடு கேட்டு திமுகவினர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்தியாவில் யார் மீதும் இந்த அளவு இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தது இல்லை. 

DMK Files Part-2

பார்ட் 2 திமுக பைல்ஸ்  ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியாகும். திமுக நிர்வாகிகள் 21 நபர்கள் அதில்  இடம்பெறுவர். சேகர்பாபு மகள் தனது குடும்ப பிரச்சனைக்காக என்னிடம்தான் முதலில் வந்தார். ஆனால் குடும்ப பிரச்சனை என்பதால் நீதிமன்றம் செல்ல சொன்னேன். தமிழ்நாடு காவல்துறையை அணுக முடியாவிட்டால், கர்நாடக காவல்துறையை அணுக சொன்னேன். குடும்ப பிரச்சனையில் பாஜக தலையிட விரும்புவதில்லை. 

மேலும் படிக்க | பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் 24 போலிஸார் பணியிட மாற்றம்!

ஆனால் அரசு எந்திரம், தமிழக காவல்துறையை பயன்படுத்தி அந்த சகோதரிக்கு மனச்சுமையை ஏற்படுத்தி உள்ளனர். அவரது கணவர் ஒரு சாமானிய மனிதர், அவர்  மீது தொடர்ந்து வழக்கு போடுவது தவறு.  முதலமைச்சர் டிஜிபிக்கு இதுகுறித்து உத்தரவிட வேண்டும். அரசு தவறு செய்யவில்லை என்றால் வழக்கு ஏன் தொடரப்பட்டது என முதலமைச்சர் வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். 

ஆருத்ராவுக்கும் அமைச்சருக்கும் தொடர்பு?

ஆர்.எஸ்.பாரதி என்னை கைது செய்ய காவல்துறை வரவுள்ளதாக 6 மாதமாக சொல்லி வருகிறார். என்னை கைது செய்யுமாறு மீண்டும் ஒருமுறை ஆர்.எஸ்.பாரதிக்கு சவால் விடுகிறேன். ஆருத்ரா மோசடி பணம் திமுகவில் உள்ள எந்த அமைச்சருக்கு சென்றது என DMK பைல்ஸ் 2ஆவது பாகத்தில் உண்மை வெளியாகும். ஆருத்ரா மோசடி குறித்த தரவுகள் என்னிடம் வந்த பிறகு, அது குறித்து பேசுவதை திமுகவினர் கைவிட்டுவிட்டனர். 

ஓபிஎஸ் - டிடிவி

ஓ.பன்னீர் செல்வம் ,டிடிவி இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா என கேட்கின்றீர்கள், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர வேண்டும் என விருப்பம் தெரிவித்திருப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் , அவை ஒரு கூட்டணியாக இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம் என கேட்பதற்கு உரிமை உண்டு , ஆனால் அவர்களை சேர்த்துக் கொள்வது குறித்து  பிரதமரும், அமித்ஷாவும்தான் முடிவு எடுப்பார்கள். 

கர்நாடக தேர்தல்

கர்நாடக தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மைக்கு தேவையான 113-ஐ தாண்டும் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையில் தலையிடுவது எங்கள் வேலை இல்லை. அதிமுக பொதுக்குழுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட பிறகுதான் பாஜக தேசிய தலைமை எடப்பாடி பழனிசாமியை அழைத்து பேசினர். அதுவரை நாங்கள் நடுவுநிலையுடன் அமைதி காத்தோம்.  

ஓபிஎஸ் - டிடிவி ஏன் சத்தித்தனர் என நான் கூறுவது சரியாக இருக்காது.  ஓ.பன்னீர்செல்வம் மீது தனிப்பட்ட முறையில் மோடி, அமித்ஷா, ஜெ.பி. நட்டா உள்ளிட்ட பாஜகவின் அனைத்து தலைவர்களுக்கும் நன்மதிப்பு உள்ளது. 

முதல்வரின் வெளிநாடு பயணம்

திமுகவினரின் வேட்பு மனுவில் நாங்கள் வெளியிட்ட சொத்து பட்டியலில் உள்ள 80 சதவீத விஷயங்கள் இல்லை. தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் வெளிநாடு செல்வது அவசியம். முதலமைச்சர் துபாய் சென்றதை குறை கூறவில்லை, அங்கு நடந்த சந்திப்புகளைத்தான் குற்றம் கூறினோம். 

மேலும் படிக்க | TN Cabinet: அமைச்சரவையில் அதிரடி மாற்றம் - நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து பிடிஆர் விடுவிப்பு!

எனது நடைபயணத்தை ஜூலை மாதத்தில் தொடங்குவேன். ஆளுநருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்டி ராமாராவ், அரவிந்த் கெஜ்ரிவால், 1977இல் எம்ஜிஅர் உள்ளிட்டோர் ஆட்சியை பிடித்தபோது பூத் கமிட்டி அமைத்து ஆட்சியை பிடிக்கவில்லை. திமுகவின் பூத் கமிட்டியை தேர்தல் அல்லாத காலத்தில் பார்க்க முடியுமா, ஒவ்வொரு செல்போனும் பூத் கமிட்டிதான். பாஜக மக்கள் விரும்பும் கட்சியாக இருந்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும். 

மேகதாது அணைக்கு திமுக ஆதரவா?

மேகதாது அணை கட்டுவோம் என கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. பாஜக அவ்வாறு கூறவில்லை. காரணம் நீதிமன்ற வழக்கு காரணமாக நாங்கள் அவ்வாறு கூற முடியாது. திமுக இதுகுறித்து ஏன் கண்டன அறிக்கை கொடுக்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு மாதிரி பாஜக பேசாது. அது குறித்து தமிழக காங்கிரஸ் வாய் திறக்காதது அபத்தமானது. 

மாநில கல்விக்கொள்கை குழு வீண்

உதயசந்திரன் பலருக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகிறார். மாநில கல்விக் கொள்கை குழு ஒருங்கிணைப்பாளர் ஐவகர் நேசனை அவர் அச்சுறுத்தியிருந்தால் அது தவறு. மாநில கல்விக் கொள்கையை தனியாக உருவாக்கினாலும் அது 99 சதவீதம் தேசிய கல்விக் கொள்கையுடன் ஒத்துத்தான் போகும். விதண்டா வாதமாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க முயல்கின்றனர். 

காமராசர் காலத்திலேயே தமிழகத்தில் பல கல்லூரிகள் இருந்தன. திண்டுக்கல் மாணவி நந்தினி 600க்கு 600 எடுத்து  பெருமைப்படுத்தியுள்ளார். ஐஏஎஸ் உள்ளிட்ட பதவிகளில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 

சினிமா சூட்டிங்கில் அமைச்சர்?

ஆளுநர் உண்மையைத்தான் பேசி வருகிறார். இந்தியாவின் பழைமையான கட்சியான திமுக , ஆளுநர் குறித்து குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது. ஆளுநர் கருத்துக்கு எதர்கருத்து கூறலாம் , ஆனால் அதற்காக ஆளுநரை தவறு என கூறுவதை ஏற்க முடியாது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சினிமா சூட்டிங், ரசிகர் மன்ற வேலையை குறைத்து கொள்ள வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோரின் போராட்டங்களுக்கு எங்களது ஆதரவை தெரிவித்துள்ளோம். 

பாஜகவில் பிடிஆர்?

கேரளா ஸ்டோரி படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை, ஆனால்  படத்தின் மையக்கதை சரியானதுதான் , அதில் சொல்லப்படும் எண்ணிக்கை 32 ஆயிரம் என்பது சரியா என எனக்கு தெரியாது. கேரளா ஸ்டோரி படம் தவறு என்றால் அதை ரெட்ஜெயண்ட் நிறுவனம் ஏன் வாங்கியது?.

அமைச்சர் பிடிஆர், முன்னாள் அமைச்சர் நாசர் உள்ளிட்டோர் பாஜகவிற்கு வந்தால் ஏற்று கொள்வீர்களா என கேட்கிறீர்கள், பாஜகவை பொருத்தவரை நாங்களாக யாரையும் எங்கள் கட்சிக்கு வருமாறு அழைக்க மாட்டோம். ஆனால் கமலாலயத்தின் கதவு எப்போதும்  திறந்தே உள்ளது. நாங்கள் தாழ்ப்பாள் போடவில்லை ,  எப்போதும் கதவு திறந்தே இருக்கிறது" என்று கூறினார். 

மேலும் படிக்க | அதிமுகவில் பிடிஆர்? ஜெயக்குமாரின் தடாலடி பதில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News