தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஏன் சிபிஐ-க்கு மாற்றக்கூடாது - நீதிபதி கேள்வி

ஏன் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கூடாது என கேள்வி எழுப்பியது உயர் நீதிமன்றம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 9, 2018, 06:48 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஏன் சிபிஐ-க்கு மாற்றக்கூடாது - நீதிபதி கேள்வி title=

கடந்த 1996-ம் ஆண்டு தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதனால் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள். இந்த தொடர் போராட்டத்தின் 100_வது நாள் கடந்த 22-ம் தேதி அன்றும், அமைதியான முறையில் தங்கள் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க போராட்டக்காரர்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணி சென்றனர். அப்பொழுது போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இச்சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தூத்துக்குடி சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் துப்பாக்கிச் சூடட்டில் இறந்த குடும்பத்திற்கு நிவாரண தொகையும் அரசு வழங்கியது.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஏற்ப்பட்ட இழப்புக்கு நிவாரண உதவியை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இன்று நடைபெற்றது. அப்பொழுது இருதரப்பு வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும், அப்போதுதான் நீதி மீதி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் எனக் கூறிய நீதிபதிகள், ஏன் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கூடாது என கேள்வி எழுப்பியது. மேலும் துப்பாக்கிச் சூடு தொடர்பான வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். 

இந்த வழக்கு விசாரணையை வரும் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது தலைமை நீதிபதி அமர்வு.

Trending News