புரட்டாசியில் ஆன்மீக சுற்றுலாவுக்கு வாங்க.. பக்தர்களை அழைக்கும் திமுக அரசு!

Puratasi Spiritual Tourism: எதிர்வரும் புரட்டாசி மாதத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் புகழ்பெற்ற வைணவக் கோயில்களுக்கு தமிழ்நாடு அரசு ஆன்மீக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 18, 2023, 07:27 PM IST
  • தற்போது வரை இரண்டு பயண திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • இதற்கு இணையதளத்தில் பதிவு செய்தல் வேண்டும்.
  • இதற்காக தற்போது தொடர்பு எண்ணும் கொடுக்கப்பட்டது.
புரட்டாசியில் ஆன்மீக சுற்றுலாவுக்கு வாங்க.. பக்தர்களை அழைக்கும் திமுக அரசு! title=

Puratasi Spiritual Tourism: புராட்டாசி மாதம் என்றால் அது பெருமாளுக்கான மாதம் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாகும். இந்த மாதம் முழுவதும் அசைவம் உண்ணாமல், புதன் மற்றும் சனிக்கிழமைகள் தோறும் பெருமாள்/விஷ்ணு கோயில்களுக்கு சென்று தரிசனம் மேற்கொள்வதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். 

மேலும், இதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் பக்தர் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே, அரசு தரப்பில் இருந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பக்தர்கள் எந்த தடையுமின்றி தரிசனம் மேற்கொள்ள பல்வேறு ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

ஆன்மீக பயணம்

அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி,  இந்து சமய அறநிலையத்துறை சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து புரட்டாசி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ திருக்கோயில்களுக்கு பக்தர்கள் ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடுகளை செய்துள்ளது. 

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வாய்ப்பினை ஆன்மிக அன்பர்கள், சுற்றுலா பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார். 2022-2023ஆம் ஆண்டு சட்டப்பேரவை அறிவிப்பில்,"தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கும், வைணவத் திருக்கோயில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும்" என்று  அறிவித்தது. 

மேலும் படிக்க | பொள்ளாச்சி; விநாயகர் சிலைக்கு சீர்வரிசை கொண்டுவந்த இஸ்லாமியர்கள்

புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலா

அதனை செயல்படுத்தும் வகையில், கடந்தாண்டு ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கும் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இது பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது என்பது நினைவுக்கூரத்தக்கது. மேலும், நடப்பாண்டில் சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து கடந்த மாதம் அம்மன் திருக்கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் புரட்டாசி மாதத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கு குறைந்த கட்டணத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஆன்மிகச் சுற்றுலா அழைத்து செல்லும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இரண்டு பயண திட்டங்கள்
 
சென்னையில் இப்பயணத்தின் முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், பெசன்ட் நகர், அருள்மிகு அஷ்டலெட்சுமி திருக்கோயில், திருவிடந்தை, அருள்மிகு நித்ய கல்யாண பெருமாள் திருக்கோயில், மாமல்லபுரம், அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில், சிங்கப்பெருமாள் கோயில், அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் திருக்கோயில், திருநீர்மலை, அருள்மிகு நீர்வண்ண பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. 
 
இரண்டாவது திட்டத்தில் திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருநீர்மலை, அருள்மிகு நீர்வண்ண பெருமாள் திருக்கோயில், திருமுல்லைவாயில், அருள்மிகு பொன்சாமி பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர், அருள்மிகு வைத்திய வீரராகவபெருமாள் திருக்கோயில், திருபெரும்புதூர், அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், பூந்தமல்லி, அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களுக்கும் பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். 

இந்த இரண்டு திட்டங்களிலும் பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு, திருக்கோயில் பிரசாதம், திருக்கோயில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடுடன் மதிய உணவும் வழங்கப்படுகிறது. 

தொடர்புக்கு...

இந்த ஆன்மிகச் சுற்றுலாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்ததின் www.ttdconline.com இணையதளத்தில் பதிவு செய்தல் வேண்டும். மேலும், இது தொடர்பாக விவரங்களுக்கு 044 – 25333333, 25333444 என்ற தொலைபேசி எண்களிலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4253 1111 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். ஆகவே, ஆன்மிக அன்பர்கள், சுற்றுலா பயணிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | திண்டுக்கல்; அனுமதியின்றி ஊர்வலம் சென்ற இந்து முன்னணியினர் கைது
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News