நாடாளுமன்ற தேர்தலில் சேலத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வகணபதி உள்ளிட்டோரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி தோல்வி பயத்தில் இருக்கிறார், அதனால் தூக்கத்தை தொலைத்துவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் பதட்டத்தில் இருக்கிறார் என விமர்சித்தார். மத்திய உளவுத்துறை கொடுத்த ரிப்போர்டின்படி தென் மாநிலங்களில் பாஜக வெற்றி பெறாது என தெரிவித்திருந்த நிலையில் இப்போது வட மாநிலங்களிலும் வெற்றி பெறாது என தெரிவிக்கப்பட்டிருப்பதால் மோடிக்கு இன்னும் பதற்றம் அதிகரித்துவிட்டது என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஜார்க்கண்ட் மாநிலத்தின் பழங்குடியின முதலமைச்சர் ஹேமந்த் சோரன், டெல்லியில் மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை E.D.யை விட்டு கைது செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறையை ஏவி விட்டு, நோட்டீஸ் விடுகிறார். எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்த்துப் பேசினால், சி.பி.ஐ ரெய்டு விடுகிறார். ஒருசில பத்திரிகைகள் இதைப் பற்றி விமர்சிக்கிறார்கள். ஆனால் எதற்கும் பதில் இல்லை. தேர்தல் நேரத்தில், பா.ஜ.க.வுக்கு இப்படி கூட்டணி கட்சிகளைப் போல், E.D. – C.B.I. – I.T. ஆகியவற்றைப் பிரதமர் பயன்படுத்துகிறார் என்றால், உச்சக்கட்ட தோல்வி பயத்தில் இருக்கிறார் என்று அர்த்தம்.
எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்ற வெறியில், பல தியாகங்களால் உருவான இந்திய ஜனநாயகத்தையே சீரழித்துவிட்டு இருக்கிறார். இதனால் ஒட்டுமொத்த இந்திய மக்களும் பா.ஜ.க.வின் சர்வாதிகாரப் போக்கின் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் இந்த நாட்டின் நிதியமைச்சர் உட்பட முன்னணி பா.ஜ.க.வினரும் தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்குகிறார்கள். இங்கு தமிழ்நாட்டில் அதைவிடப் பரிதாபமாக இருக்கிறது பா.ஜ.க… ஒரு காமெடி வரும் ஞாபகம் இருக்கிறதா! “பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு” என்று… அதுபோல, தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர் கிடைக்காமல் - கவர்னர் – சிட்டிங் எம்.எல்.ஏ. என்று அழைத்து நிறுத்தி, செய்தியில் இருக்க வேண்டும் என்று பார்க்கிறார்கள்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? பா.ஜ.க.வுக்கு இருக்கும் பயமெல்லாம், நோட்டாவைவிடக் கீழே சென்றுவிடாமல் டெபாசிட்டாவது வாங்க வேண்டும் என்ற முயற்சிதான் நன்றாகத் தெரிகிறது. அதனால்தான், மோடி அவர்கள், இப்போது திடீர் என்று எம்.ஜி.ஆரையும் – ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசுகிறார். திடீர் என்று ஜெயலலிதா மேல் ஏன் மோடிக்கு பாசம் பொங்குகிறது?. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, அவரைப் பாராட்டியது உண்டா?, இந்தியாவிலேயே அதிகமாக ஊழல் நடைபெறும் ஆட்சி ஜெயலலிதா ஆட்சிதான்” என்று மோடி சொல்லியது இப்போது ஞாபகமில்லையா?.
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய்விட்டது என்று புதிய அவதூறு பிரச்சாரத்தைக் கிளப்பியிருக்கிறார். அதற்கு ஏதாவது தரவுகளை ஆதாரமாகச் சொல்கிறாரா? இல்லையே. பா.ஜ.க. ஆளும் மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்தது. அப்போது நீங்கள் எங்குச் சென்றீர்கள்? அந்த மாநில முதலமைச்சரைக் குறைந்தபட்சம் பதவி விலக வைக்க முடிந்ததா? இதுவரை நடக்காத கொடூரமாக, பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றார்களே, அப்போது சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்ததே… அப்போது ஒரு நாட்டின் பிரதமராக நீங்கள் என்ன செய்தீர்கள்? வாயே திறக்கவில்லையே!
பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் போன்று, சட்டம்-ஒழுங்கு சீர்குலையாமல் சமூக நல்லிணக்கத்துடன் மக்கள் வாழும் அமைதியான தமிழ்நாட்டை உங்களுக்குப் பிடிக்கவில்லையா?. என் கையில் ஒரு பட்டியல் இருக்கிறது. இதில் இருக்கும் பெயர் பட்டியல் ஏதோ தேசத் தலைவர்களோ… சமூகச் சேவகர்களோ இல்லை… எல்லோரும் சட்டம்–ஒழுங்கைக் கெடுக்கும் ரவுடிகள்! சரித்திரப் பதிவேடு (History Sheet) குற்றவாளிகள். ஆனால் இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் எல்லாம், இப்போது எங்கு இருக்கிறார்கள் தெரியுமா? அத்தனை பேரும் பா.ஜ.க.வில்தான் இருக்கிறார்கள். வழக்கமாக இந்த பட்டியல் காவல் நிலையத்தில்தான் ஒட்டப்பட்டிருக்கும்…
32 பக்கங்கள் கொண்ட இந்தப் பட்டியலில், 1977 வழக்குகள் இருக்கும் 261 ரவுடிகள் இருக்கிறார்கள். இவர்களின் பெயர் என்ன? பா.ஜ.க.வில் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள்? இவர்கள் மேல் என்ன என்ன பிரிவுகளில் வழக்குகள் இருக்கிறது? என்று இந்தப் பட்டியலில் இருக்கிறது. எல்லா ரவுடிகளையும் உங்கள் கட்சியில் வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கைப் பற்றி நீங்கள் பேசலாமா? உங்களிடம் இருக்கும் உளவுத்துறை மூலமாக அந்தப் புத்தகத்தை வாங்கிச் சரிபார்த்துவிட்டு (”கிராஸ் வெரிஃபை” செய்துவிட்டு,) அதற்குப் பிறகு எங்களைப் பற்றி பேசுங்கள் பிரதமர் மோடி அவர்களே…
அடுத்து, போதைப் பொருட்கள் பற்றியும் பேசியிருக்கிறார். தி.மு.க.வில் இருந்த ஒருவர் மேல் இது தொடர்பாகக் குற்றச்சாட்டு எழுந்ததுமே, அந்த நபர அடுத்த விநாடியே கட்சியை விட்டு நீக்கிவிட்டோம். அவர் மீதான விசாரணைக்கு நாங்கள் தடையாக இல்லை… இந்த வழக்கை வைத்து, தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பது போன்று அவதூறு பரப்புரை செய்கிறார். இது, அவர் இப்போது வகிக்கும் பிரதமர் பதவிக்கு அழகல்ல. இந்தியாவிற்கே போதைப் பொருள் குஜராத் துறைமுகத்தில் இருந்துதான் வருகிறது என்று பிடிக்கிறார்கள்… ஒரு காலத்தில் குஜராத் முதலமைச்சராக இருந்ததே நீங்கள்தானே? இப்போதும் உங்கள் கட்சிதானே அங்கு ஆட்சியில் இருக்கிறது?… இது பற்றியாவது வாய் திறப்பீர்களா?
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் நாட்டிலேயே போதைப் பொருள் அதிகம் விற்பனையாகிறது என்று ஒரு புள்ளிவிவரம் வந்திருக்கிறது… அது எதுவும் நாங்கள் சொன்னது இல்லை… மாநிலங்களவையில் கடந்த டிசம்பர் மாதம் உங்கள் ஆட்சி சார்பில் ஒன்றிய அரசு வைத்த அறிக்கையில் இருக்கிறது. அதுமட்டுமில்ல, போதைப் பொருள் அதிகமாக கைப்பற்றப்பட்ட ‘டாப் 10’ மாநிலங்களில் ஏழு மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சிதான் நடக்கிறது! இந்தப் பத்து மாநிலங்களில் ‘தமிழ்நாடு’ என்ற பெயரே இல்லை! அந்தளவுக்குக் கடுமையான நடவடிக்கைகளை திராவிட மாடல் திமுக அரசு எடுத்து வருகிறது." என பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மேலும் படிக்க | VCK: விசிக கேட்ட சின்னத்தை கொடுத்த தேர்தல் ஆணையம்... அதுவும் 2 தொகுதிகளுக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ