CM Stalin Challenging Amit Shah: சேலத்திற்கு மூன்று நாள் பயணமாக சேலம் வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சேலம் ஐந்து ரோடு பகுதியில் நடைபெற்ற சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் இன்று பங்கேற்றார். அமைச்சர் கே.என் நேரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது,"இரண்டாண்டு காலத்தில் ரூ.3500 கோடி மதிப்பிலான திட்டங்கள் சேலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் என்று இபிஎஸ் விமர்சிக்கிறார். கோயம்பேடு பேருந்து நிலையம், ராஜூவ்காந்தி பேருந்து நிலையம் யார் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது? யார் திறந்து வைத்தது?. மக்கள் பணம் வீணாக கூடாது என்பதற்காக ஜெயலலிதா படம் ஒட்டப்பட்ட பைகளை கூட மக்களுக்கு வழங்கியவர் ஸ்டாலின்" என பேசினார்.
திமுகவிற்கு இது ஒரு பொற்காலம்
இதையடுத்து கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன்,"சேலம் திமுகவிற்கு மகத்தான தொண்டாற்றிய பூமி. ஜஸ்டிஸ் கட்சியை திராவிடர் கழகமாக மாற்றிய ஊர் சேலம். ஒரு கொள்கை, ஒரு லட்சியத்திற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் திமுக. பல காலகட்டங்களில் பல தடைகளையும் தாண்டி அசைக்க முடியாத இயக்கமாக திமுக திகழ்வதற்க்கு தொண்டர்களே காரணம். மன்னாதி மன்னனையெல்லாம் பார்த்தவன் திமுககாரன். மற்றவர்களை பார்த்தா அஞ்சப்போகிறோம்.
அகில இந்தியாவிலேயே காங்கிரஸ்க்கு ஆதரவாக இருப்பவர் ஸ்டாலின். எங்களை அசைத்து பார்க்கவா பாஜகவினர் கணக்கு போடுகிறார்கள். எங்களுக்கு விளையாடவும் தெரியம், தெம்மாங்கு பாடவும் தெரியும். திமுகவிற்கு இது ஒரு பொற்காலம். இளைய சமுதாயத்திற்கு எதிர்காலம் உண்டென்று கற்பிக்கின்ற காலம் இது" என்று தெரிவித்தார்.
கருணாநிதி நூற்றாண்டு விழாவுக்கு இடையே...
இதையடுத்து கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது,"சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் இணைத்து திராவிடர் கழகம் உருவானது சேலத்தில்தான். அண்ணாதுரை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் சேலம் மண்ணில்தான். தி.க.வின் சீர்திருத்த எண்ணங்களை சட்டபூர்வமாக நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்டதுதான் திமுக என்றார். சேலத்தில் 1996ஆம் ஆண்டு நடத்த இளைஞரணி மாநாட்டிற்கு தலைமையேற்க வாய்ப்பு கிடைத்ததை நினைத்து பெருமை கொள்கிறேன்.
கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடும் இத்தருணத்தில் கட்சியே குடும்பம் என்ற தலைப்பில் திமுகவினர் குடும்பங்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கருணாநிதி நூற்றாண்டு விழாவிற்கு இடையேதான் நாடாளுமன்ற தேர்தலையும் சந்திக்க உள்ளோம்.
திமுக - காங்கிரஸ் சாதனைகள்
நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவதற்கு அச்சாரம் இடும் கூட்டம்தான் இது. முக்கியமாக சேலத்தில் வெற்றி பெற வேண்டும். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது இந்திய அரசு செலவு செய்த மதிப்பில் 11 விழுக்காடு தமிழகத்திற்கு கொண்டு வந்தோம். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்த்து வழங்கப்பட்டது. திமுக - காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் தாம்பரத்தில் சித்த மருத்துவ ஆய்வு மையம், ரூ.1500 கோடி மதிப்பில் சேலம் உருக்காலை விரிவாக்கம்; ரூ. 2400 கோடி மதிப்பில் சேது சமுத்திர திட்டம் ; சேலம் ரயில்வே கோட்டம்; சேலத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை ; ஒகேனக்கல் கூட்டுகுடிநீர்த்திட்டம் என பல திட்டங்களை நிறைவேற்றப்பட்டுள்ளன.
அமித்ஷா பதில் சொல்ல வேண்டும்
இதுபோன்ற ஒரு பட்டியலை சொல்லக்கூடிய ஆற்றல் அமித்ஷாவிற்கு இருக்கிறதா?. தமிழகம் வரும் அமித்ஷா ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள் என்ற பட்டியலை வெளியிட அமித்ஷா தயாரா? என கேள்வி எழுப்பினார்.
பாஜகவின் செல்வாக்கு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. தோல்வி மேல் தோல்வி அடைந்த கட்சி அதிமுக. சசிகலாவின் காலில் விழுந்து, பாஜகவிற்கு பல்லக்கு தூக்கி நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. நாடு முழுவதும் பாஜகவிற்கு சரிவு ஏற்பட்டு வருவதால் எந்த முடிவையும் எடுக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். கர்நாடகாவில் ஏற்பட்ட தோல்வியை போன்று அனைத்து பகுதிகளிலும் தோல்வி ஏற்படும் என்று நினைத்தால் தேர்தலை முன்கூட்டியே நடத்த அவர்கள் திட்டமிடுவார்கள்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று அறிவித்து 8 வருடம் ஆகிறது. தமிழகத்திற்கு 1000 கோடி செலவிட மனம் இல்லாத அரசாக உள்ளது. தமிழகம் வரும் அமித்ஷா இதற்கு பதில் கூற வேண்டும். மாநில வளர்ச்சி நிதி, பேரிடர் கால உதவி நிதி என எதையும் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கவில்லை. மாறாக அவர்கள் ஹிந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பு தான் அவர்கள் வழங்கி உள்ளார்கள். கொத்தடிமை கூட்டமான அதிமுகவை நம்பி பாஜக தேர்தலை சந்திக்கிறது. காட்டாற்று வெள்ளத்தில் உருண்டு வந்த கரடியை பிடித்தவன் விட நினைத்தான் ஒருவன் ; அவனை விடாமல் பிடித்துக் கொண்டது கரடி. இந்த கதை போலத்தான் அதிமுக - பாஜக கூட்டணி.
தெற்கில் இருந்து ஒலிக்கும் குரல்
மேலும் சமூக வலைதளங்களில் கணக்குகள் இல்லாதவர்கள் உடனடியாக தொடங்குங்கள். காலத்தின் சூழல் மாறிவிட்டது ; சமூக வலைதளங்கள் வாயிலாக செய்திகளை மக்களிடம் சேர்க்க வேண்டும். எதிர் முகாமில் திமுக ஆட்சி குறித்து பரப்பி வரும் பொய்யான தகவல்களை முடக்க வேண்டும்.
வரும் செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாளன்று மகளிருக்கான உரிமை தொகை வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்படும். அமைச்சர்கள் நிர்வாகிகள், கட்சியினரை சந்தோசமாக வைத்திருக்க வேண்டும். கட்சியினரின் பிரச்னைகளை தீர்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை ; காது கொடுத்தாவது கேளுங்கள். தெற்கிலிருத்து ஒலிக்கும் இந்த திராவிட குரலை வடக்கில் சிலரால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை" என்று பேசினார்.
மேலும் படிக்க | செந்தில் பாலாஜி ஐம்பதாயிரம் கோடி ரூபாய் ஊழல்? கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ