நாங்குநேரி சாதிய தாக்குதல்: மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை என்ன தெரியுமா?

CM Stalin In Nanguneri Issue: நாங்குநேரி அருகே பள்ளி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட சாதிய தாக்குதல் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Aug 11, 2023, 10:04 PM IST
  • மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பது கடமை - முதலமைச்சர்
  • சட்டம் அதன் கடமையை சரியாக செய்யும் - முதலமைச்சர்
  • இதுவரை 6 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாங்குநேரி சாதிய தாக்குதல்: மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை என்ன தெரியுமா? title=

CM Stalin In Nanguneri Issue: திருநெல்வேலியின் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி முனியாண்டி அம்பிகாபதி தம்பதியரின் மகன் சின்னதுரை மற்றும் மகள் ஆகியோர் வள்ளியூர் தனியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்தனர். அதில் பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த சின்ன துரைக்கும், நாங்குநேரியை சேர்ந்த அதே பள்ளியில் படித்த சில பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் இடையே ஜாதி ரீதியான மோதல் ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

கடந்த ஆக. 9ஆம் தேதி இரவு வீடு புகுந்து ஒரு கும்பல் சின்னத்துரையை அரிவாளால் வெட்டியது. அப்போது அதை தடுக்க சென்ற அவரது தங்கைக்கும் கையில் விட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அதிர்ச்சியில் சின்னத்துரையின் தாத்தா கிருஷ்ணன் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

அதனை தொடர்ந்து அவரது உடல் அடக்கம் நேற்று (ஆக. 10) நாங்குநேரியில்  நடந்தது. அப்போது போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி கிருஷ்ணனின் உடலை சாலையில் வைத்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து நாங்குநேரி டிஎஸ்பி ராஜு தலைமையில் போலீசார் பொதுமக்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து குற்றவாளிகளை கைது செய்து விடுவோம் என உறுதி அளித்ததை ஏற்று கிருஷ்ணனின் உடல் அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க | நெல்லையில் சாதிய கொடூரம்! பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு-6 சிறார்கள் கைது!

தொடர்ந்து, நாங்குநேரி டிஎஸ்பி ராஜு விசாரணை நடத்தி சின்னத்துரையுடன் பள்ளியில் படித்து வந்த 17 வயதுடைய 12ஆம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர் மற்றும் இரண்டு சிறார் உட்பட ஆறு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து நெல்லை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். அதில் ஒரு சிறுவன் நாங்குநேரி திமுக ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணுவின் உடன் பிறந்த சகோதரரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும், மாணவன் சின்னதுரையின் உயர்கல்வி செலவை ஒரு அண்ணனாக தானே ஏற்றுக்கொள்வதாகவும் அவர் அதில் கூறியுள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இதுதொடர்பாக அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

அதில்,"நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது. 

இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார். குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையை சரியாக செய்யும்.

அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாக கொள்வோம். குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இதுபோன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள், நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க | பாசக்கார மனைவி... குடிகார கணவன் - விபரீத செயலால் இருவரும் உயிரிழந்த சோகம்!'

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News