Coimbatore Lok Sabha Election News 2024: கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று (மார்ச் 23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, "எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பதவியேற்ற பின்னர் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும். நீலகிரி வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், கோவை வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், பொள்ளாச்சி வேட்பாளர் கார்த்திக் அப்புசாமி ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
'திமுக வேட்பாளர் யார்...?'
களத்தில் யார் இருந்தாலும், நாம் தான் வெற்றி பெறுவார். 3 வேட்பாளர்களும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். நமது வேட்பாளர்கள் 3 பேருக்கும் எம்ஜிஆர், ஜெயலதிதா ஆசி உள்ளது. இந்த கட்சியை நிறைய பேர் அழிக்க நினைத்தாலும், அழிக்க முடியவில்லை. வெற்றி பெறுவது நாம்தான். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.
மற்ற வேட்பாளர்கள் எல்லாம் தூசு. அதிமுக பக்கத்தில் கூட வர முடியாது. சமூக வலைதளத்தில் பதிவு போட்டுக்கொண்டிருந்தால், பெரிய ஆளாக முடியாது. அதிமுக வலுவான கட்சி. அதிமுக வெற்றி பெறுவது உறுதி. கணபதி ராஜ்குமார் யார்? அம்மா அவருக்கு மேயர், மாவட்ட செயலாளராக வாய்ப்பு தந்தார். இந்த கட்சிக்கு துரோகம் செய்து விட்டு திமுகவில் இணைந்து விட்டார். திமுகவில் ஆளே இல்லையா?. திமுகவில் வேட்பாளராக தகுதி யாருக்கும் இல்லை.
'பாஜக மீது பிம்பமே உள்ளது'
திமுக அதிமுக இடையேதான் போட்டி. ஆனால் திமுக வேட்பாளர் டம்மி. கரூரில் நிற்காமல் அண்ணாமலை கோவையில் நிற்கிறார். பாஜகவிற்கு 4 சதவீத ஓட்டு உள்ளது. கூட்டணியில் உள்ள பாமக, தமாகா கட்சிகளுக்கு ஓட்டு உள்ளதா? அவர்கள் பயங்கரமாக வேலை செய்து 10 சதவீத ஓட்டு வாங்கினால் ஜெயிக்க முடியுமா? அதிமுக உலகத்திலேயே 7ஆவது பெரிய கட்சி. இந்தியாவில் பெரிய கட்சி. 34 சதவீத வாக்குகள் உள்ள கட்சி. அப்புறம் தான் திமுக எல்லாம். பாமக, பாஜக கட்சிகள் அதிமுக உடன் கூட்டணி வைத்துதான் வளர்ந்தார்கள்.
அதிமுக தொண்டர்கள் தர்மப்படி, நியாயப்படி நடப்பார்கள். கருத்து கணிப்பு என கருத்து திணிப்பு செய்கிறார்கள். அதிமுகவை விட பாஜக அதிக இடங்களை பெறும் என்ற பிம்பத்தை உருவாக்க பார்க்கிறார்கள். அது எல்லாம் நடக்காது.
மேலும் படிக்க | பாமக வேட்பாளர்களில் 30% மகளிர்; 20% பட்டியலினம்... இது தான் சமூகநீதி!
நமக்கு எதிரி திமுகதான்...
3 வருட திமுக ஆட்சியும், 10 ஆண்டு கால பாஜக ஆட்சியும் கோவைக்கு என்ன செய்தது? கோவைக்கு அதிக திட்டங்கள் தந்தது அதிமுகதான். மக்களுக்கு எதுவும் செய்யாமல் எப்படி ஓட்டு கேட்க வர முடியும்? நமக்கு மட்டுமே காலரை தூக்கிவிட்டு ஓட்டு கேட்டுச் செல்ல தகுதி உள்ளது. மற்றவர்களுக்கு ஓட்டு கேட்டு வர தகுதியே இல்லை. திமுகவினரே திமுகவிற்கு ஓட்டு போட தயாராக இல்லை.
அதிமுக வெற்றி உறுதி. ஆனாலும் எதிரியை குறைவாக மதிப்பிட்டு விடக்கூடாது. கூட்டணி கட்சியினரை அரவணைத்து செல்ல வேண்டும். நமக்கு எதிரி திமுகதான். மற்றவர்கள் எல்லாம் மூன்றாவதுதான். நிறைய கட்சிகள் நம்மிடம் பேசிக்கொண்டே துரோகம் செய்துவிட்டு சென்றுள்ளார்கள். அவர்களுக்கு நாம் யார் என காட்ட வேண்டும்.
கட்சிக்கு விசுவாசமாக இருந்து வேலை செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரான பின்னர் நடக்கும் முதல் தேர்தல் இது. இரட்டை இலையை காப்பாற்ற வேண்டும். திமுக, பாஜக வேட்பாளர்கள் அதிமுக வேட்பாளர்களுக்கு இணை இல்லை" எனத் தெரிவித்தார்.
அண்ணாமலைக்கு பயமா?
இந்த நிகழ்ச்சியில்பேசிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், "கரூரில் இருந்து ஒருவர் கோவைக்கு வந்து போட்டியிடுகிறார். அவர் திமுக மற்றும் திமுக வேட்பாளர் பெயரை சொல்கிறார். ஆனால் எனது பெயரை சொல்ல மறுக்கிறார். புரட்சி தலைவி வைத்த புரட்சி தலைவரின் பெயர் என்பதால் எனது பெயரை சொல்ல பயமா? அண்ணாமலை கரூரில் நின்றால், டெபாசிட் கிடைக்காது என்பதால் கோவையில் வந்து நிற்கிறார்.
ஒரு கரூர்காரர் ஜெயிலில் இருக்கிறார். அவர் வெளியே வர இன்னொரு கரூர்காரரை ஜெயிக்க வைக்க டம்மி வேட்பாளரை நிறுத்தியுள்ளார்கள் என வாட்ஸ்அப்பில் வந்தது. அது உண்மையா எனத் தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என எந்த மொழியிலும் பேச தயார். அண்ணாமலை பயப்படுகிறார். என்னை பயப்படுவதாக நினைத்து விடக்கூடாது. அவருக்கு சவால் விடுகிறேன். என்னுடன் கோவையின் வளர்ச்சி குறித்து பேச தயாரா? நேரம், இடத்தை குறித்து வாருங்கள். விவாதிக்க நான் தயார். அதிமுக தொண்டர்களின் உணர்வை புண்படுத்திய அண்ணாமலை, வேலுமணி கோட்டையில் வந்து நின்றால் ஜெயிக்க விட்டு விடுவோமா?" எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க | தமிழகத்திற்கு மோடி 100 முறை வந்தாலும் பாஜக மண்ணை தான் கவ்வும் - திமுக
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ