திமுக கூட்டணியில் இணைந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி - ஒரு தொகுதி ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 22, 2019, 09:21 PM IST
திமுக கூட்டணியில் இணைந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி - ஒரு தொகுதி ஒதுக்கீடு title=

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழக தேர்தல் களம் பரபரப்பாகி வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவும் பாமகவும் இணைந்த நிலையில் தேமுதிக இணைவது குறித்து இன்னும் முடிவாகவில்லை. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும் பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டு அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக கடந்த 20 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. காங்கிரசுக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு குறித்து மற்ற தோழமைக் கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தநிலையில், இன்று திமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு வெளியாகி உள்ளது. இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தொகுதி பங்கீடு பேச்சுவாரத்தை நடத்தினர். இறுதியில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

அதுக்குறித்து திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், நடைபெறவுள்ள 17வது நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் - தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் அவர்களும், இன்று (22-2-2019) தொகுதி உடன்பாடு குறித்து கலந்து பேசி, 1 (ஒன்று) தொகுதியை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி பங்கிட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது.

இப்பேச்சு வார்த்தையின்போது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த மாநில பொதுச்செயலாளர் கே.எ.எம்.முஹம்மது அபூபக்கர், எம்.எல்.ஏ., மாநில பொருளாளர் எம்.எஸ்.எ. ஷாஜகான் - கழகப் பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, கழக துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு, விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் க.பொன்முடி, திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் எ.வ.வேலு மற்றும் இந்திய முஸ்லீம் லீக் முன்னணித் தலைவர்கள் உடனிருந்தனர். 

இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Trending News