Southern Railway Announced Special Trains: பண்டிகை என்றாலே பலருக்கும் சொந்த ஊர் பயணம்தான் ஒரே குறிக்கோளாக இருக்கும். சென்னை, கோவை, மதுரை என முக்கிய நகரங்களில் பணி நிமித்தமாகவோ அல்லது படிப்பு காரணமாகவோ தங்கியிருப்பவர்கள் பண்டிகை காலங்களில் தங்களின் உற்றார் உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்களுடன் இணைந்து கொண்டாட சொந்த ஊர் செல்வார்கள் என்பதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், அதற்காக அவர்கள் ரயிலிலோ அல்லது பேருந்திலோ செல்லும் பயணம் என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
பட்ஜெட்டில் பயணிப்பது கடினம்
அரசு தரப்பில் பல ஏற்பாடுகளும், முன்னெடுப்புகளும் எடுக்கப்பட்டாலும் தனிநபரோ அல்லது குடும்பத்துடனோ பட்ஜெட் விலையில் பயணிப்பது என்பது மிக கடினமான ஒன்றுதான். குறிப்பாக, கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களுக்கு தலைநகர் சென்னையில் இருந்து செல்வது பண்டிகை காலங்களில் எவ்வளவு கடினமாக இருக்குமோ அந்தளவிற்கு திரும்பி வருவதும் மிக மிக கடினம்தான்.
அந்த வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டும் சுற்றுலா உள்பட பல்வேறு காரணங்களுக்கு மக்கள் அதிக தூரம் பயணம் செய்திருப்பார்கள். இன்றுடன் விடுமுறை தினம் நிறைவடையும் சூழலில், பலரும் இன்றே ஊர் திரும்புவார்கள்.
ரயில் டிக்கெட்...?
அந்த வகையில், நாளை காலை சென்னை புறநகர் பகுதி என்பது மிகவும் போக்குவரத்து நெருக்கடியுடன் காணப்படலாம். நாளை பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் அதிகாலையிலேயே ஊருக்குள் நுழைய முயல்வதால் கடும் நெருக்கடி வரும் என்பது யதார்த்தம்தான்.
மேலும் படிக்க | மாட்டுப் பொங்கல் தினத்தன்று விவசாயிக்கு அதிர்ச்சி! சிறுத்தை செய்த சம்பவம்..
எனவே, பலரும் பேருந்து போன்ற தரைவழி பயணங்களை தவிர்த்து ரயில் பயணங்களை மேற்கொள்ளவே பலரும் திட்டமிடுவார்கள். ஆனால், ரயிலில் டிக்கெட் கிடைப்பதோ அல்லது தட்கல் மூலமோ டிக்கெட் கிடைப்பதோ குதிரை கொம்பாகும். யாராலும் அவ்வளவு எளிதாக ஐஆர்சிடிசி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய இயலாது எனலாம். இருப்பினும், அதற்கென ரயில்வேயும் பொங்கல் பண்டிகை காலத்தில் அதிக கூட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு சிறப்பு ரயில்களை தற்போது அறிவித்துள்ளது.
இரண்டு ரயில்கள் அறிவிப்பு
அதாவது, தென் மாவட்ட மக்கள் பலனடையும் வகையில் சிறப்பு ரயில்கள் ஜன. 17 (இன்று) மற்றும் ஜன. 18ஆம் தேதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று நாகர்கோவிலில் இருந்து மாலை 4 மணிக்கு தொடங்கும் சிறப்பு ரயில் அடுத்த நாளை (ஜன. 18) அதிகாலை 4.10 மணிக்கு சென்னை தாம்பரம் வந்தடையும்.
எந்தெந்த இடங்களில் நிற்கும்?
நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு ரயில் (ரயில் எண் 06128) வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்பரம், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இதனால் இன்று சென்னை திரும்புவதற்கு டிக்கெட் இல்லாமல் திணறி வரும் தென் மாவட்ட மக்கள் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்திக்கொள்ளலாம்.
எத்தனை பெட்டிகள்?
இந்த ரயில் ஒருமுறை மட்டுமே பயணிக்கும் சிறப்பு ரயிலாகும். இதில் 2 இரண்டு அடுக்கு ஏசி பெட்டிகள், 9 மூன்று அடுக்கு எகானமி ஏசி பெட்டிகள், ஐந்து படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் (முன்பதிவில்லாதது), மாற்றுத்திறனாளிக்கான இரண்டாம் வகுப்பு பெட்டி ஒன்று மற்றும் லக்கேஜ் பெட்டி ஒன்று ஆகியவை இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு சிறப்பு ரயில்
இதேபோல், நாளை காலை 8.05 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் மற்றொரு சிறப்பு ரயில், கேரள மாநிலம் கொச்சுவேலி வரை செல்கிறது. தாம்பரம் - கொச்சுவேலி அதிவிரைவு சிறப்பு ரயில் (ரயில் எண் 06127) செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில், நாகர்கோவில் டவுண், குளித்துறை, திருவனந்தபுரம் ஆகிய வழித்தடங்களில் செல்லும். இது நாளை இரவு 10 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | காவி உடையில் திருவள்ளூர்... ஆளுநருக்கு முதல்வர் கொடுத்த அதிரடி பதிலடி - முழு பின்னணி
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ