மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் சென்னை கொளத்தூரிலும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சார்பில் பரமத்திவேலூரிலும், பழனி தண்டாயுதபாணி கோவில் சார்பில் தொப்பம்பட்டியிலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் விளாத்திகுளத்திலும் என, நான்கு இடங்களில் கல்லூரிகள் துவங்க அனுமதி அளித்து தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி அரசாணை பிறப்பித்தார்.
இந்து சமய அறநிலைய துறை சட்டப்படி கல்லூரிகள் அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிட மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் கோவில் அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும் குறிப்பிட்டு இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும் ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த்துள்ளார்.
ALSO READ | கோவில் நகைகளை உருக்க தடைக்கோரி நீதிமன்றத்தில் மனு
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கல்லூரிகளை துவங்குவது தொடர்பாக விளம்பரம் வெளியிட்டு ஆட்சேபங்களை பெற்ற பிறகே அனுமதி வழங்க வேண்டும் எனவும், கோவில் நிர்வாகத்தில் இருந்து எந்த விண்ணப்பமும் அளிக்கப்படாமல் கல்லூரிகள் துவங்க அனுமதி வழங்கபட்டுள்ளது, கோவில்களின் உபரி நிதியை, போதிய நிதி இல்லாத பிற கோவில்கள் சீரமைப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இது அரசின் கொள்கை முடிவு என்றும், இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தை பின்பற்றியே துவங்கப்படுவதாகவும், இன்னும் 3 வாரங்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் எனத் தெரிவித்த தலைமை வழக்கறிஞர், கடந்த 11 ஆண்டுகளாக அறங்காவலர்கள் இல்லை எனவும் வழக்கு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கோவில் நிதியை பயன்படுத்துவதால் சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும், சட்டப்படி தான் கல்லூரிகள் துவங்க வேண்டும் எனவும், அடிப்படை நடைமுறைகள் பின்பற்றாமல் துவங்கப்பட்டுள்ள நான்கு கல்லூரிகளின் செயல்பாடு இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் உத்தரவிட்டனர்.
நான்கு கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளை அறங்காவலர்களை நியமிக்காமலும், நீதிமன்ற அனுமதியின்றியும் துவங்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், நான்கு கல்லூரிகளில் இந்து மத வகுப்புகள் துவங்க வேண்டும் எனவும், கல்லூரி துவங்கிய ஒரு மாதத்துக்குள் மத வகுப்புகள் நடத்தாவில்லை என்றால் கல்லூரிகளை தொடர்ந்து நடத்த முடியாது எனவும் உத்தரவிட்டனர். மனுவுக்கு 3 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 5 வாரங்கள் தள்ளிவைத்தனர்.
ALSO READ | கோவிலை விட்டுட்டு கல்வியை பாருங்க: கண்டித்த உயர்நீதிமன்றம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR