ஜெயலலிதா இருந்திருந்தால் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்காது: ஸ்டாலின் பிரசாரம்

தமிழகத்தில் நடைபெற்று வருவது அம்மாவின் ஆட்சியா? அல்லது அம்மாவை உருவாக்கிய எம்ஜிஆரின் ஆட்சியா? என ஏர்வாடியில் கேள்விகளை எழுப்பிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 9, 2019, 09:08 PM IST
ஜெயலலிதா இருந்திருந்தால் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்காது: ஸ்டாலின் பிரசாரம் title=

தமிழகத்தில் நடைபெற்று வருவது அம்மாவின் ஆட்சியா? அல்லது அம்மாவை உருவாக்கிய எம்ஜிஆரின் ஆட்சியா? என ஏர்வாடியில் கேள்விகளை எழுப்பிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட ஏர்வாடியில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்பொழுது திரளாக வந்திருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டார். பொதுமக்களை பார்த்து "உங்களை தேடி வந்திருக்கிறோம். நாடி வந்திருக்கிறோம். இந்த ஏர்வாடி மக்களுக்கும் திமு கழகத்திற்கும் ஒரு நேரடி தொடர்பு உண்டு. இந்த பகுதிக்கு அண்ணா வந்திருக்கிறார். தலைவர் கருணாநிதி வந்திருக்கிறார். அவர்களின் வழியில் நானும் வந்திருக்கிறேன். 

இப்பொழுது நாங்குநேரி தொகுதியில் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளராக ரூபி மனோகரனுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்க வந்திருக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் என எந்த தேர்தலாக இருந்தாலும் நாங்குநேரி மக்கள் தொடர்ந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். தற்போது காங்கிரஸ் சார்பில் கை சின்னத்தில் நிற்கும் ரூபி மனோகரனுக்கு ஆதரவு தரவேண்டும். இஸ்லாமிய மக்கள் அதிக அளவில் வசிக்கும் இந்த பகுதி மக்களுக்கு இன்றை சொல்லிக்கொள்ள நினைக்கிறேன். வரலாற்று சிறப்புமிக்க பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, அதனை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தது திமுக தான். அப்பொழுது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக ஆதரவு தெரிவித்தது.

ஜெயலலிதா இறந்த பிறகு பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆனார். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனார். அவர்கள் தற்போது நடப்பது அதிமுக ஆட்சி என்றும், அம்மாவின் ஆட்சி எனத் தொடர்ந்து கூறிக்கொண்டு இருக்கிறார்கள். நான் ஒன்று கேட்கிறேன், தமிழகத்தில் நடைபெற்று வருவது அம்மாவின் ஆட்சியா? அல்லது அம்மாவை உருவாக்கிய எம்ஜிஆரின் ஆட்சியா? இல்லவேயில்லை. அவர்கள் இருந்திருந்தால் மோடி கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பார்களா? நிச்சியம் வைத்திருக்கமாட்டார்கள். மத்திய அரசு கொண்டு வரும் கொடுமையான சட்டங்களை ஜெயலலிதா இருந்திருந்தால் ஏற்றுக்கொண்டு இருந்திருப்பாரா? நிச்சியம் ஏற்றுக்கொண்டு இருந்திருக்கமாட்டார். 

கலைஞர் கருணாநிதி, அம்மையார் ஜெயலலிதா இருந்தபோது நீட் தேர்வு தமிழகத்திற்குள் வரவில்லை. ஆனால் தற்போது அவர்கள் இல்லாத நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு புகுந்துள்ளது என மக்கள் மத்தியில் திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார். 

நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பாக வெ.நாராயணனும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பாக ரூபி மனோகரன் களம் காண்கிறார்கள். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24 ஆம் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

Trending News