உலக தாய்மொழி நாள்: செம்மொழியான தமிழ்மொழி; உலக மொழிகளுள் தொன்மையானது!

எல்லா உயிர்களுக்கும் முதல் உறவாக இருப்பது தாய்தான். மொழியும் அங்கிருந்துதான் தொடங்குகிறது. அதனால்தான் அவற்றைத் தாய்மொழி என்கிறோம்.

Written by - Amarvannan R | Last Updated : Feb 21, 2023, 07:09 AM IST
  • இன்று உலக தாய்மொழி நாள்.
  • பிப்ரவரி 21ஆம் நாளை உலக தாய்மொழி நாளாக அறிவித்தது ஐ.நா.
  • நாடெங்கிலும் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக தாய்மொழி நாள்: செம்மொழியான தமிழ்மொழி; உலக மொழிகளுள் தொன்மையானது! title=

எல்லா உயிர்களுக்கும் முதல் உறவாக இருப்பது தாய்தான். மொழியும் அங்கிருந்துதான் தொடங்குகிறது. அதனால்தான் அவற்றைத் தாய்மொழி என்கிறோம். இது உலகிலுள்ள எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். இன்று உலக தாய்மொழி நாள் அவற்றின் சிறப்பினை காண்போம்.  1999ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாளை உலக தாய்மொழி நாளாக அறிவித்தது , ஐ.நா.  மொழிக்காகப் போராடி உயிர்நீத்த வங்காளிகளை நினைவுகூரும் வகையிலும் , மொழிரீதியான பன்மைத்துவத்தை மேம்படுத்தவும், பன்மொழி கல்வியை உலகரங்கில் வளர்த்தெடுக்கவும் உலக தாய்மொழி நாள் அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து ஆண்டுதோறும் பிப்ரவரி 21ஆம் நாள் உலக தாய்மொழி நாளாக நாடெங்கிலும் மிகச் சிறப்பாகவும் ; விமரிசையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.  மொழிப் போரானது மேற்கு பாகிஸ்தானிலும் தமிழகத்திலும் நடந்தேறியது. அதற்காக எண்ணற்ற தியாகிகள் உயிர்நீத்தது, குறிப்பிடத்தக்கதாகும்.

உலகில் 6000 மொழிகள் தோன்றின என்பதும் ; அவற்றுள் 2700 மொழிகள் இன்றும் உயிருடன் இருக்கின்றன என்பதும் வரலாற்றுச் சான்றாகும்.  தமிழ்மொழி மிகவும் தொன்மையானது என்பதை தனது படைப்புகள் மூலம் உணர்த்தியுள்ளார், மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்.  'ஒப்பியல் மொழி' எனும் நூலில் தொல்காப்பியர் கால தமிழ் நூல்களும் கலைகளும் என்ற பகுதியில் இலக்கணம் பற்றி அவர் கூறியிருப்பது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அரிய விடயமாகும். பிறமொழி இலக்கணங்களெல்லாம் எழுத்து, சொல், யாப்பு என இலக்கணத்தை மூன்றாக பகுப்பதே பண்டைய வழக்கமாகும்.

மேலும் படிக்க | Social Justice: தடைகளை சமாளித்து சமூக நீதிக்கான வாய்ப்புகளை பரவலாக உருவாக்குவோம்

யாப்பும் அணியும் ஒரு செய்யுளின் பொருளை உணர்த்தும் கருவிகள் ஆகும். அவற்றை பொருள் இலக்கணத்திலிருந்து பிரிக்கக்கூடாது என்பது தமிழ் சான்றோர்களின் கருத்தாகும். ஆகவே, மூன்றாயிருந்த தமிழ் இலக்கணப் பிரிவை நான்கு ஆக்குவது என்பது முறையல்ல  ; அது தமிழ்மொழியின் சிறப்புக்கு உகந்ததுமல்ல.  தமிழ்மொழி ஒன்று தான், வாழ்வுக்கே இலக்கணம் அமைத்து சிறந்து மிளிரும் வளமான மொழியாகும். மானிட வாழ்க்கையை அகம், புறம், என இருவகைப்படுத்தி இலக்கணங்களை கொண்ட பெருமை தமிழ்மொழி ஒன்றுக்குத்தான் உண்டு.  பண்டைத்தமிழர் மதி நுட்பமெல்லாம் பழுத்துக்கிடப்பது பொருள் இலக்கணம் ஒன்றில்தான்.  ஒரு மக்களின் நாகரிகத்தை காட்ட சிறந்த சின்னமாக இருப்பது மொழிதான்.

இலக்கியத்தினும் இலக்கணம் சிறந்தது என்பதை தமிழ்மொழியில் மட்டுமே காணமுடியும். ஆகவே உலக மொழிகள் எல்லாவற்றிலும் தமிழே மிகச் சிறந்தது என்பது பாவாணரின் ஆய்வுப்புலத்தின் வெளிப்பாடாகும்.  உலக மொழிகளுள் தொன்மையானது தமிழ் ; முதன்மையானது தமிழ் ; இந்திய மொழிகளுக்கு மூலமும் வேரும் தமிழ் ; திராவிட மொழிகளுக்குத் தாய் தமிழ். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டமே. மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம் பழந்தமிழ் நாகரிகமே என்பது பாவாணரின் ஆராய்ச்சியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான கருத்து.  உலகில் வேறேந்த மொழிகளுக்கும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு. அவை, தொன்மை ; இயன்மை ; தூய்மை ; தாய்மை ; முன்மை ; வியன்மை ; வளமை, மறைமை ; எண்மை ; இளமை ; இனிமை ; தனிமை ; ஒண்மை ; இறைமை ; அம்மை ; செம்மை ஆகியனவாகும்.

ஒரு மொழியில் இருக்கின்ற இலக்கியத்தை வெவ்வேறு மொழிகளில் உணர்ச்சி, பொருள், நயம், வடிவம் ஆகியவற்றை குன்றாமல் மொழிபெயர்த்திட இயலும். ஆனால், தமிழ் இலக்கியத்தைப் பிற மொழிகளில் மேற்கண்ட உணர்ச்சி, பொருள், நயம், வடிவம் ஆகிய நான்கையும் குன்றாமல் மொழிபெயர்க்க இயலாது. ஏனெனில், தமிழ் இலக்கியத்தின் உயிர்ப் பொருளை பிற மொழிகளில் மொழிபெயர்ப்பது என்பது இயலாத ஒன்று.  பேச்சு வழக்கில் இல்லாத மொழிகளில் எபிரேயம், கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதம் ஆகிய நான்கும் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. ஆனால், தமிழ்மொழி அப்படியல்ல, எழுத்தளவிலும், பேச்சு அளவிலும் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, புலம்பெயர்ந்த தமிழர்களால் உலகளவில் உயிர்ப்புடன் உலா வருகின்றன. மேலும் உலகிலுள்ள பிற மொழிகளெல்லாம் வாயினால் பேசப்பெற்றுச் செவிக்குக் கருத்தை உணர்த்தக் கூடியவை. ஆனால், தமிழ்மொழி மட்டும்தான் இதயத்தால் பேசப்பெற்று இதயத்தால் உணரவைக்கும்  உயிரோட்டமான மொழியாகும்.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதான மொழி உலகில் வேறேங்கும் இல்லை" என்றார் பன்மொழி கற்ற நம் பாரதி.

"தமிழுக்கும் அமுதென்று பேர். அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

அன்னை மொழியே ; செந்தமிழே ; பேரரசே ; பாண்டியன் மகளே ; திருக்குறளின் மாண்புகழே என தாய்மொழியான தமிழுக்குப் புகழாரம் சூட்டினார், பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

மேலும் படிக்க | குழந்தைகளா நான் பாஸாயிட்டேனா? ‘தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொள்ளும் அரசுப் பள்ளி ஆசிரியர்’

 

"சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் ; என்றன்
சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்" என்றார் கவிஞரும் புலவருமான சச்சிதானந்தன்.

தமிழின் சீர்மிகு சிறப்பை உணர்ந்த அயல்நாட்டு அறிஞரான பாதிரியார் ஜி.யு.போப், தமிழை நன்கு கற்றதோடு அல்லாமல், தனது இறப்புக்குப்பின் தமது கல்லறையில், "தமிழ் கற்கும் மாணவன்" என்று பொறிக்கச் செய்தார்

உலகெங்கும் வாழும் மக்கள் பல்வேறு மொழிகளை பேசி வருகின்றனர். ஆயினும் அவரவருக்கு அவர்களது தாய்மொழியே சிறந்ததாகும் ; உயர்ந்ததாகும். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

அதேவேளையில், "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி" என்று தமிழின் சிறப்பை அந்நாளில் பாவேந்தர் பாரதிதாசன் சிறப்புற பாடியுள்ளார்.

மொத்தம் 247 எழுத்துகளை கொண்டுள்ள தமிழ் மொழியில் இடம்பெற்றுள்ள எழுத்துகளில், உயிர் எழுத்துகள், வல்லினம், இடையினம், மெல்லினம் என பலவகையாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு நம் தமிழ்மொழிக்கு மட்டுமே உண்டு. மேலும் பேசுவதற்கும் படிப்பதற்கும் எளிமையானதும், இனிமையானதும் தமிழ் ஒன்றே என்பதை அகழ்வாராய்ச்சியின் கல்வெட்டுகள் உறுதிபடுத்துகின்றன. அந்தளவிற்கு தமிழின் பெருமையானது, வற்றாத நதிபோல தோன்றிக்கொண்டே இருக்கும் என்பதே நம் மொழிக்கான தனிச்சிறப்பு.

மேலும் தமிழ்மொழியானது தனித்து இயங்கும் வல்லமைபெற்றது ; பேராற்றலைக்கொண்டது என்றால் அது மிகையல்ல. ஏனெனில், பிற திராவிட மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு அகிய மொழிகளுக்கு தனித்து இயங்கும் வல்லமையோ, ஆற்றலோ கிடையாது. அம்மொழிகளில் இணைந்திருக்கும் வடமொழியினை நீக்கிவிட்டால் அம்மொழிகளுக்கான உயிரோட்டம் காணாமல் போய்விடும். அதாவது உயிரற்றதாகிவிடும்.. ஆனால், உயிரோட்டம் உள்ள மொழியாக தமிழ்மட்டுமே பிற மொழியினை சாராமல் இன்றளவும் தனித்துவத்துடன் விளங்கி வருகிறது

உலக மொழிகளுள் தமிழே மூத்தமொழி என்பதை மேலும் வலுசேர்க்கும் வகையில் ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி அகழ்வாராய்ச்சியும் மெய்ப்பித்துக்கொண்டுதான் இருக்கின்றன.  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் வாழ்ந்தான் என்பதற்கும், தமிழே மூத்தகுடி என்பதற்கும் மேற்கண்ட அகழ்வாராய்ச்சிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழியே அதற்குத் தக்கதொரு சான்றாகும்.  செம்மொழியான நம் தமிழ்மொழி என்றென்றும் இறவா வரம் பெற்றதாகும்.  "தமிழன் என்றொரு இனம் உண்டு ; தனியே அவர்க்கொரு குணம் உண்டு" என்கிற நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் எழுதிய பாடல் வரிகளுக்கேற்ப, உலக தாய்மொழி நாளில் வேறெந்த மொழிகளையும் சாராமல் தனித்து இயங்கும் நம் தாய்மொழியான தமிழுக்குத் தலைவணங்குவோம்.

எழுத்தாக்கம் :
இரா. அமர்வண்ணன்

மேலும் படிக்க | பங்காளிகளா... நம்ம மதுரைக்கு மெட்ரோ வருது - முழு விவரம் இதோ!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News