ஜோலார்பேட்டை தண்ணீர் பெரம்பூர், அண்ணாநகரில் விநியோகம்!

சென்னை நகருக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் கொண்டுவரப்பட்ட தண்ணீர் பெரம்பூர், அண்ணாநகருக்கு விநியோகம் செய்யப்படுகிறது!

Last Updated : Jul 14, 2019, 06:03 PM IST
ஜோலார்பேட்டை தண்ணீர் பெரம்பூர், அண்ணாநகரில் விநியோகம்! title=

சென்னை நகருக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் கொண்டுவரப்பட்ட தண்ணீர் பெரம்பூர், அண்ணாநகருக்கு விநியோகம் செய்யப்படுகிறது!

சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்ட காரணத்தால் தண்ணீர் தட்டுப்பாடு சென்னை வாசிகளை வாட்டி வருகிறது. இதையடுத்து கல் குவாரிகள், விவசாய கிணறுகள் போன்றவற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. தினமும் 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னை நகருக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தண்ணீர் சென்னைவாசிகளுக்கு போதுமானதாக இல்லை.

எனவே வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள மேட்டு சக்கரக்குப்பம் நீரேற்று நிலையத்தில் இருந்து காவிரி நீரை ரெயில் மூலம் சென்னைக்கு கொண்டு வர முடிவு செய்து அதற்கான பணி மும்முரமாக நடத்தப்பட்டது.

இதனையடுத்து நேற்று முன்தினம் காலை 50 டேங்கர்களில் சுமார் 2.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டு சென்னை கொண்டு வரப்பட்டது. அந்த ரெயில் வில்லிவாக்கம் ரெயில் நிலையம் வந்து அடைந்த பிறகு அங்கு குழாய்கள் மூலம் கீழ்ப் பாக்கத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டது.

ரெயிலில் தண்ணீர் கொண்டு வந்த 50 டேங்கர்களும் இரவு ஜோலார்பேட்டைக்கு அனுப்பப்பட்டன. நேற்று காலை 8 மணிக்கு 2-வது முறையாக ரெயிலில் 2.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பெரம்பூர், அண்ணா நகர், அயனாவரம், கொளத்தூர், கொரட்டூர், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு ரெயிலில் வந்த தண்ணீர் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அரசு திட்டத்தின் படி ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 6 மாத காலம் தொடர்ந்து தண்ணீர் கொண்டு வரப்படும் செய்யப்படும். சென்னை நகருக்கு தற்போது தினமும் 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஜோலார்பேட்டையில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீரில் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 60 லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் 50 ஆயிரம் பேர் பனடைந்து வருகின்றனர். மேலும் ஒரு டெங்கர் ரெயில் தண்ணீர் பயணத்திற்கு உட்படுத்தப்பட உள்ளது. இந்த 2 ரெயில்கள் மூலம் தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

Trending News