'கூட்டுச் சதி...' சவுக்கு சங்கர் மீது மாணவி ஸ்ரீமதி தாயார் பரபரப்பு புகார் - என்ன விஷயம்?

Savukku Shankar Latest Updates: கள்ளக்குறிச்சியில் கடந்த 2022ஆம் ஆண்டு உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி, பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கர் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 22, 2024, 03:18 PM IST
  • சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.
  • சவுக்கு சங்கர் ஏற்கெனவே பல வழக்குகளில் தற்போது கைதாகி சிறையில் உள்ளார்.
  • மே 28ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
'கூட்டுச் சதி...' சவுக்கு சங்கர் மீது மாணவி ஸ்ரீமதி தாயார் பரபரப்பு புகார் - என்ன விஷயம்? title=

Srimathi Mother Complaint On Savukku Shankar: தன்னை குறித்தும் தன்னுடைய இறந்து போன மகளான ஸ்ரீமதி குறித்தும் யூ-ட்யூப் தளத்தில் சவுக்கு சங்கர் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஸ்ரீமதியின் தாயார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை கொடுத்துள்ளார். 

ஸ்ரீமதியின் தாயார் செல்வி அளித்த புகார் மனுவில்,"என் கணவர் எங்கள் குழந்தைகளின் கல்வியின் பொருட்டு சிங்கப்பூரில் கடந்த காலங்களில் எலக்ட்ரிஷியனாகப் பணி புரிந்தார். அவர் அனுப்பும் பணத்தை நம்பித்தான் நான், என் மகன் சந்தோஷ் மற்றும் மறைந்த என் மகள் இளவர் ஸ்ரீமதி ஆகியோர் வாழ்க்கை நடத்தியதோடு, எனது பிள்ளைகளையும் சக்தி படிக்க வைக்க முடிந்தது. 

ஸ்ரீமதி மரணம்...

என் மகள் இளவர் ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி அமைந்திருக்கும் மாவட்டம் கனியாமூரில் இன்டர்னேஷனல் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரென்டாம் வகுப்பு வரை சில காலங்கள் தவிர்த்து பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தாள். கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி அன்று ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த என் மகள் ஸ்ரீமதி மர்மமான முறையில் பள்ளி நிர்வாகம் மற்றும் அதைச் சார்ந்தவர்களால் கூட்டுச்சதியின் மூலம் கொடூரமான முறையில் கொல்லப்பட்டாள்.

மேலும் படிக்க | மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளேன் - நீதிபதி முன்பு சவுக்கு சங்கர் முறையீடு!

இதன் பொருட்டு நான் கொடுத்த புகாரின் பேரில் என் மகள் மர்மக் கொலையைத் தமிழ்நாடு காவல்துறை விசாரிக்கத் தொடங்கியது. எனது இளவர் மகள் கொலை தொடர்பாக துவக்கத்தில் இருந்தே காவல் துறையினர் சரிவர விசாரித்து முறையான புலன் விசாரணை செய்யாமல் பள்ளி நிர்வாகத்திற்கு சாதகமாக நடந்து கொண்டனர். அரசியல்வாதிகளும், ஆதிக்க சக்திகளும், அதிகார வர்க்கத்தினரும் எனது மகள் இறப்புக்கு நீதி கிடைக்காமல் தடுத்து வந்தனர்.

'கொச்சைப்படுத்திய சவுக்கு சங்கர்'

இதுகுறித்து நான் பல கட்ட சட்டப்போரட்டங்களை நடத்தியதோடு, எனது மகள் இறப்புக்கு நீதி கேட்டு பெருவாரியான மக்கள் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது. இதனால் எனது மகள் இறப்பு குறித்த விசாரணை சிபிசிஐடி துறைக்கு மாற்றப்பட்டது.

விசாரணை நடைபெற்று வந்த காலகட்டத்தில் பல்வேறு யூ-ட்யூப் சேனல்களில் யூ-ட்யூபர் சவுக்கு சங்கர் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு, புனைவுகளைச் செய்திகள் என்ற பெயரில் தெரிந்தே கொடுத்து வந்தார். என்னை, என் 17 வயது மகளை இழிவுபடுத்தியும் கொச்சைப்படுத்தியும் பல பேட்டிகள் கொடுத்தார்.

சவுக்கு சங்கருக்கு உரிமையான சவுக்கு மீடியா என்னும் யூடியூப் சேனலில் 2022ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி அன்று "கள்ளக்குறிச்சி விவகாரம் : மர்மம் அவிழ்க்கும் சவுக்கு - சவுக்கு லைவ் ரிப்போர்ட், கள்ளக்குறிச்சி விசிட்" என்னும் தலைப்பில் சவுக்கு சங்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்நிகழ்ச்சியில் உண்மைகளுக்குப் புறம்பான பல விஷயங்களைப் பேசினார். என் 17 வயது இளவர் மகள் ஸ்ரீமதி மீனவச் சமூகத்தைச் சார்ந்த ஒரு மாணவனைக் காதலிப்பதாகப் பொய்யுரைத்தார். நான் அகமுடையார் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால், மீனவச் சமூக இளைஞனுடனான காதலுக்காக நான் என் மகளைக் கடிந்து கொண்டதாகச் சொல்லி, எனக்குச் சாதிய நோக்கம் கற்பித்தார். 

மேலும் படிக்க | தவறை உணர்ந்துவிட்டேன்... சவுக்கு சங்கரின் பரபரப்பு வாக்குமூலம் - முழு விவரம் இதோ!

'உண்மைக்கு புறம்பான தகவல்கள்'

மேலும் ஐ தமிழ் நியூஸ், ஆதன் தமிழ், சத்யம் தொலைக்காட்சி எனப் பல்வேறு ஊடகங்களில் பேசும் பொழுது 'நான் கிளிசரின் பயன்படுத்திக் கண்ணீர் வடிக்கிறேன்', 'ஸ்ரீமதி மரணத்துக்கு நான்தான் காரணம்', 'என்னைத்தான் கைது செய்ய வேண்டும்', 'அந்தம்மாவே சாகலை, சந்தோஷமாத்தான் இருக்கு' என்றெல்லாம் என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் மறைந்த என் 17 வயது மகளைப் பற்றியும் உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற செய்திகளைப் பரப்பி இழிவுபடுத்தியும், கொச்சைப்படுத்தியும் பேசி வந்தார்.

சமீபத்தில் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை இழிவுபடுத்திப் பேசியதாக, கஞ்சா வைத்து இருந்ததாகத் தேனியில் கைது செய்யப்பட்டு, சென்னைப் பெருநகரக் காவல் ஆணையரால், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். இத்தனை நாட்கள் சவுக்கு சங்கர் என்னை பற்றியும், எனது பதினேழு வயது இளவர் மகள் பற்றியும் பள்ளி நிர்வாகிகளான ரவிக்குமார், சாந்தி, சிவசங்கரன் ஆகியோரிடம் பணம் பெற்றுக்கொண்டு திட்டமிட்டு உள்நோக்கத்தோடு பேசி வந்தார் என்று எனக்கு நன்றாக தெரிந்த பொழுதும் என்னிடம் தக்க ஆதாரம் அப்பொழுது இல்லை. 

'பள்ளி நிர்வாகிகளுடன் கூட்டுச்சதி'

இந்தத் தருணத்தில் சவுக்கு சங்கருக்குத் தனி உதவியாளராகவும் சவுக்கு சங்கரின் இன்ஸ்டாகிராம், முகநூல் ஆகிய வலைதளக் கணக்குகளின் அட்மினாகவும் செயல்பட்டு வந்த பிரதீப் என்பவர் பேட்டி அளித்துள்ளார். சவுக்கு சங்கர் ஸ்ரீ சக்தி இன்டர்னேஷனல் பள்ளி நிர்வாகத்திடம் பெரும் தொகை பெற்றுக் கொண்டு என் 17 வயது மகள் பற்றி, என்னைப் பற்றி, என் குடும்பத்தாரைப் பற்றி இழிவுபடுத்தியும் கொச்சைப்படுத்தியும் பேசுவதற்காகப் பணிக்கப்பட்டார் என்று பிரதீப் பேட்டியளித்தார். இந்த தகவலை நான் சமூக வலைத்தளம் மூலம் அறிந்து கொண்டேன். ஊடக நெறியைக் கெடுக்கும் வண்ணம் பள்ளி நிர்வாகிகள் ரவிக்குமார், சாந்தி, சிவசங்கரன் ஆகியோருடன் சவுக்கு சங்கர் கூட்டுச் சதி செய்து, தெரிந்தே, அவதூறான செய்திகள் பரப்பி உள்ளார்.      .

இறந்து போன எனது மகள், எங்கள் குடும்பத்தினர் மீது சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பி, இழிவு படுத்தி, மன உளைச்சலை ஏற்படுத்திய சவுக்கு சங்கர் மீது  சென்னை காவவல்துறை உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே, பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் சவுக்கு சங்கருக்கு இது மேலும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது. 

மேலும் படிக்க | Savukku Shankar: மே 28 வரை கஸ்டடி நீட்டிப்பு... நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் வைத்த கோரிக்கை - முழு விவரம் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News