சென்னை: தமிழகத்தில் மே 24 முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று மருத்துவ நிபுணர்கள், அனைத்து கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் தமிழக முதல்வர் ஆலோசனையை நடத்தினார். அதன் பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 24 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழகத்தில் அமலில் இருக்கும் என தெரிவித்தார்.
தளர்வுகளற்ற இந்த முழு ஊரடங்கில், தமிழகத்தில் காய்கறி கடைகள், மளிகை கடைகள் ஆகியவையும் இயங்காது என்றும் கூறபட்டுள்ளது.
இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, தமிழகத்தில் 25.3.21 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு தற்போது 10.05.2021 காலை 04.00 மணி முதல் 24.05.2021 காலை 04.00 மணி முடிய அமல்படுத்தப்பட்டுள்ளது. பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும்.
சில மாவட்டங்களில் #COVID19 பரவல் குறைந்திருந்தாலும் பல மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரிக்கிறது.
வல்லுநர்கள் - சட்டமன்றக் கட்சிகளுடனான ஆலோசனைகளின்படி ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற #Lockdown அமல்படுத்தப்படுகிறது. #COVID19 கட்டுப்படுத்தப்பட்ட தமிழகம் அமைய மக்கள் ஒத்துழைக்க வேண்டும். pic.twitter.com/Rk9j257S5N
— M.K.Stalin (@mkstalin) May 22, 2021
இந்த முழு ஊரடங்கு 24.05.2021 காலை முதல் நடைமுறைக்கு வரும்.இந்த முழு ஊரடங்கு காலத்தில் கீழ்க்கண்ட செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும்:
- மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள்
- பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகம்
- பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து - வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்
- தலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும், அத்தியாவசியத் துறைகள் மட்டும் இயங்கும்
- தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர், வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- மின்னணு சேவை காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை இயங்கலாம்.
- உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. ஸ்விக்கி, ஜொமோட்டோ மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்
- பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும்
- ஏ.டி.எம். மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.
- வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்
- சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.
- உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்
- மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை.
- செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.
- தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை
- மால்கள் திறந்திட அனுமதி கிடையாது.
- அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படும்.
பொது மக்கள் நலன் கருதி, இன்று (22-5-2021) இரவு 9-00 மணிவரையிலும், நாளை 23.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது
வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, இன்று (22.05.2021) மற்றும் நாளை (23.05.2021) தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.
கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும்.
மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் இன்று கூறியுள்ளார்.
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்கள், சுகாதார வல்லுனர்கள் ஆகியோருடனும், அனைத்து கட்சி எம்.எல்.ஏ-க்களுடனும் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், ஊரடங்கை நீட்டிக்க சட்டமன்ற கட்சிகளின் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மருத்துவ நிபுணர்கள், சுகாதார வல்லுனர்களும் ஊரடங்கை நீட்டிப்பதுதான் தொற்று பரவலை தடுக்க முக்கியமான வழி என்ற கருத்தையே வலியுறுத்தனர்.
ALSO READ: முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை: ஊரடங்கை நீட்டிக்க கட்சிகள், நிபுணர்கள் பரிந்துரை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR