விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கே.கே.நகர் காலனி அமீர்பாளையம் பகுதியை சேர்ந்த அஜித்குமார்(25)- கார்த்திகா(23) தம்பதியினர். இவர்களுக்கு 2018ஆம் ஆண்டு திருமணமாகிய நிலையில் அதே பகுதியில் வசித்துவந்துள்ளனர். இந்நிலையில் அஜித்தின் மனைவி கார்த்திகாவிற்கு கடந்தாண்டு அக்டோபர் 30ஆம் தேதியன்று சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அப்போது அந்த குழந்தைக்கு நாக்கு சரிவர வளராமல் இருந்த நிலையில் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் அதே நாளில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதனையடுத்து, 3 நாட்களுக்கு பின்னர் குழந்தைக்கு நாக்கில் அறுவை சிகிச்சை செய்து பின்னர் ஒரு ஆண்டு கழித்த பின் இரண்டாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க | நடுக்கடலில் இலங்கை தீவிர ரோந்து, ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
இதனையடுத்து ஓராண்டு ஆன நிலையில், கடந்த வாரம் குழந்தையை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துவந்து பல்வேறு பரிசோதனைகளை செய்துள்ளனர். பின்னர் நேற்று முன்தினம் (நவ. 22) காலை நாக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்காக குழந்தையை மருத்துவர்கள் அழைத்துசென்றுவிட்டு திரும்ப கொண்டுவந்துள்ளனர்.
இதனையடுத்து, நாக்கிற்கு பதிலாக குழந்தையின் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருத்துவர்களிடம் கூறியபோது அவசர அவசரமாக குழந்தையை மீண்டும் அறுவைசிகிச்சை அறைக்கு அழைத்துசென்று மீண்டும் நாக்கில் அறுவைசிகிச்சை செய்துள்ளனர்.
இதனையடுத்து மருத்துவர்களிடம் ஏன் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்தீர்கள் என கேட்டபோது அவசர சிகிச்சை என்பதால் கேட்காமல் ஆப்ரேஷன் செய்துவிட்டோம் என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தந்தை அஜித் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை காவல்நிலையத்தில் விசாரணை நடத்தகோரி புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து, குழந்தையின் தந்தை விளக்கம் கேட்டபோது மருத்துவமனை முதல்வரும், குழந்தையின் உடல்நலன் கருதி அவசரத்திற்காக கேட்காமல் அறுவைசிகிச்சை செய்துவிட்டதாக விளக்கமளித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக சைல்டு லைன் (Child Line) அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,"அந்த குழந்தை பிறந்து நான்கு நாட்களில் வாயில் கட்டி இருப்பது தெரிய வந்ததால், மதுரை அரசு மருத்துவமனையில் தான் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, குழந்தைக்கு ஓராண்டாகியுள்ள நிலையில் வாயில் மற்றொரு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சை அரங்கில் குழந்தையை பரிசோதித்த போது குழந்தையின் பிறப்புறுப்பில் பிரச்சனை இருப்பது தெரியவந்தது. இதை எடுத்து பிறப்புறுப்பில் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மற்றொரு அறுவை சிகிச்சையில் மும்முரமாக இருந்ததால் குழந்தையுடன் தந்தையிடம் இது தொடர்பாக தெரிவிக்கவில்லை. இதனால், தந்தை ஆத்திரம் அடைந்து புகார் அளித்துள்ளார். தவறான சிகிச்சை எதுவும் நடைபெறவில்லை, குழந்தைக்கு நல்லது தான் செய்யப்பட்டுள்ளது தற்போது குழந்தை எந்த பிரச்சனைகளும் இன்று நலமாக உள்ளது" என்றார்.
மேலும் படிக்க | ஈஷாவால் யானைகளுக்கும் ஆபத்து, ஊருக்கும் ஆபத்து - உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ