சென்னை: தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிப்படி தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் பதிவு செய்துள்ளார்.
இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் 400-க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளும், தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 40-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் பெரும்பாலானவை 1992-ம் ஆண்டில் அமைக்கப்பட்டவை. மீதமுள்ள சுங்கச்சாவடிகள் 2008-ம் ஆண்டில் கட்டப்பட்டவை.
மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் ஒப்பந்தப்படி வருடத்துக்கு ஒருமுறை சுங்கச்சாவடியில் பயனாளர் கட்டணத்தை அதிகபட்சமாக 10% உயர்த்திக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் படி 1992-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் மாதத்திலும், 2008-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் உயர்த்தி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் 1992-ம் ஆண்டை சேர்ந்த சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் அடங்கின. இந்நிலையில் தற்போது செப்டம்பர் மாதம் தொடங்கி உள்ளதால், 2008-ம் ஆண்டை சேர்ந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிப்படி தமிழகத்தில் உள்ள 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது.
இதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். அதுக்குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நடுத்தர வர்க்கத்தினரையும், வணிகர்களையும் பெரிதும் பாதிக்கும் சுங்கச் சாவடிகளில் திடீர் கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது. அடிப்படை பராமரிப்பு வசதிகளை மேம்படுத்தாமல் கட்டணத்தை ரகசியமாக உயர்த்துவது அரசின் பகல் கொள்ளை. சுங்கச் சாவடிகள் மக்களின் நலனை சாகடிப்பதாக இருக்கக் கூடாது எனக் கூறியுள்ளார்.