அ.தி.மு.க-விற்கு என புதிய செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி துவக்கம்!!

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் 100 எம்.எல்.ஏ'கள் பங்கேற்றனர்.

Updated: Jan 3, 2018, 01:34 PM IST
அ.தி.மு.க-விற்கு என புதிய செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி துவக்கம்!!

ராயப்பேட்டையில் இன்று ஒரு மணி நேரம் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில் 100க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

சட்டபேரவையில் தினகரன் பேசினால் அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் அதனை பெரிதுபடுத்த வேண்டாம். எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய அமைச்சர்கள் பதிலளிப்பார்கள் என்று கூறினார்.

அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் சொல்லக் காரணம் என்னவென்றால், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்கும். 

எனவே, அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பேரவையில் இருந்தால்தான் தீர்மானத்தை நிறைவேற்ற முடியும் என்பதால் முதல்வர் இந்த விஷயத்தை வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, எம்எல்ஏக்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அதிமுகவுக்கு என்று பிரத்யேகமாக புதிய தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார். இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் கூறினார். 

அதிமுகவிற்காக பிரத்யேகமாக இருந்த தொலைக்காட்சி தற்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள நிலையில் அதிமுகவுக்கு என பிரத்யேகமாக தொலைக்காட்சி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close