எண்ணூர் போராட்டம்... இன்னொரு ஸ்டெர்லைட் போராட்டமாக மாறிவிடக்கூடாது - சவுக்கு சங்கர்!

Savukku Shankar Latest News: இன்னொரு ஸ்டெர்லைட் போராட்டமாக எண்ணூர் போராட்டம் மாறிவிடகூடாது என போராட்டக்காரர்களை சந்தித்த பின் அரசியல் விமர்சகராக அறியப்படும் சவுக்கு சங்கர் பேட்டி அளித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 31, 2023, 04:56 PM IST
  • இதுபோன்ற தொழிற்சாலைகளை தயவு தாட்சணம் இல்லாமல் இழுத்து மூட வேண்டும் - சவுக்கு சங்கர்
  • கோரமண்டல் ஆலையில் இருந்து தினம் தினம் நச்சு வாயு திறக்கப்படுகிறது - சீமான்
  • இந்த தொழிற்சாலையால் அச்சுறுத்தல் உள்ளது - சிபிஎம் மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன்
எண்ணூர் போராட்டம்... இன்னொரு ஸ்டெர்லைட் போராட்டமாக மாறிவிடக்கூடாது - சவுக்கு சங்கர்! title=

Savukku Shankar Latest News: சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் கோரமண்டல் உர ஆலையில் இருந்து அமோனியா வாயு கசிந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த ஆலையின் முன்பு சுற்றுவட்டார பகுதியில் உள்ள மீனவர்கள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொழிற்சாலைக்கு அக்கறையில்லை

இந்நிலையில் அமோனியா வாயு கசிந்த பகுதியை சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சகராக அறியப்படும் சவுக்கு சங்கர் இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளரை சந்தித்த சவுக்கு சங்கர் பேசியதாவது, "சம்பவ இடத்தில் இருந்த மக்ளை மீட்கும் பணியில் தொழிற்சாலை தரப்பு ஈடுபடவில்லை.
அங்கிருந்த மக்களே ஒருவருக்கொருவர் கதவை தட்டி எழுப்பிய பின்னரே மாவட்ட நிர்வாகம் வந்தது. 

மாவட்ட நிர்வாகம் காட்டிய அக்கறையை, கோரமண்டல் தொழிற்சாலை மக்களை மீட்க முனைப்பு காட்டவில்லை. போராட்டம் நடத்தும் மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பது, பின்னர் வழக்கு பதிவு செய்வது, கோரமண்டல் நிர்வாகத்திற்கு காவல்துறை உதவுகிறது என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க | வாட்ஸ் அப் அட்மின் முகத்தில் குத்துவிட்ட திமுக பிரமுகர்! காரணம் என்ன?

இழுத்து மூட வேண்டும்

மக்களை காப்பாற்றுகிறோம் என்று கூறிவிட்டு மறுபுறம் காவல்துறை மூலமாக அரசு வழக்கு பதிவு செய்துவருகிறது. கரையில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள், தற்போது வாயு கசிவால் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க வேண்டிய சூழலில் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு சுழல் இருந்தால் எப்படி மக்கள் இங்கு வாழ்வார்கள்.

இது போன்ற தொழிற்சாலைகளை தயவு தாட்சணம் இல்லாமல் இழுத்து மூட வேண்டும். தமிழகத்தில் இருக்க கூடிய அதிகாரிகள் தொழிற்சாலைகளிடம் லஞ்சம் வாங்குவதற்காக மட்டுமே என்று உறுதியாக நம்புகிறார்கள். அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்திருந்தால் இதுபோன்று அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்காது" என பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

கடலோர மக்களுக்கு பாதிப்பு

சவுக்கு சங்கர் மட்டுமில்லாமல் பல அரசியல் தலைவர்களும் பெரிய குப்பம் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆளும் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்திது தங்களது ஆதரவையும் தெரிவித்தனர்.

இதில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசுகையில்,"தமிழ்நாட்டில் மீனவ மக்கள், எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் நச்சு தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. எண்ணூர், கடலூர், தூத்துக்குடி பகுதியில் இதுபோன்ற தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் விஷ வாயு கசிவால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் படிக்க | வட சென்னைக்கு பெரிய பாதிப்பு... அமோனியா வாயு கசிவால் கடலில் நடந்த மாற்றம் - முழு பின்னணி!

வழக்குப்போட்டு அச்சுறுத்தல்

எண்ணூர் கோரமண்டல் ஆலையில் இருந்து தினம் தினம் நச்சு வாயு திறக்கப்படுகிறது. அந்த சம்பவத்தன்று அதிகமாக திறக்கப்பட்டுள்ளது. அதனால் தான் பாதிப்பு வெளியே தெரிந்துள்ளது. விஷவாயு கசிவு ஏற்பட்ட எண்ணூர் கோரமண்டல் ஆலையை மூட வேண்டும். அது தான் நாம் தமிழர் கட்சி நிலைப்பாடு. மக்களுக்கு ஆதரவாக நினைக்காமல் நாம் தமிழர் கட்சி களத்தில் போராடுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

வாயு கசிவு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டாம். நிரந்தர தீர்வு வேண்டும். ஆலையை மூட வேண்டும். ஆலைக்கு எதிராக போராடும் மக்கள் மீது வழக்கு போட்டு அச்சுறுத்தல் நடக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு நடைபெற்ற சம்பவத்தில் இருந்த அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் தூப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆட்சிக்கு வந்தால் இரண்டே மாதத்தில் நீதி கிடைக்கும் என்று சொன்ன கட்சி (திமுக) தான் தற்போது பதவி உயர்வு வழங்கியுள்ளது" என்றார்.

போபால் போன்று அச்சுறுத்தல்...

மேலும், சிபிஎம் மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில்,"வாயு கசிவு, அமோனியா வாயு இறக்குமதி செய்யும் நிலையில் கசிவு ஏற்படவில்லை. ஒருவேளை கப்பலில் இருந்து இறக்கும் போது கசிவு ஏற்பட்டிருந்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

அதேபோன்று கோரமண்டல் ஆலையின்‌ உள்ளே இருக்கக்கூடிய மிகப்பெரிய வாயு சேமிப்பு தொட்டியில் இருந்து கசிவு ஏற்பட்டு வெடித்தால் போபால் விஷவாயு கசிவு சம்பவம் போல் எண்ணூர் பகுதியில் ஏற்பாட்டு விடும். இது எண்ணூர் மக்களை மட்டும் அல்லாமல் வடசென்னை முழுவதுமே பாதித்துவிடும். அந்த அளவுக்கு இந்த தொழிற்சாலையால் அச்சுறுத்தல் உள்ளது.

அரசு கேட்க வேண்டும்

தமிழக அரசு மக்களின் கோரிக்கையை கேட்க வேண்டும். நிரந்தரமாக மூட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அதனை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது வழக்கு போட்டது கண்டனத்துக்குரியது. வாயு கசிவு ஏற்பட்ட ஆலை மீதுதான் காவல்துறை வழக்கு போட்டிருக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு மக்கள் மீது ஏன் வழக்கு போடுகிறார்கள்.

இப்படி வழக்கு போட்டதால் தமிழக அரசு ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவு என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் காவல் துறை வழக்கு போட்டதை தமிழக அரசின் நிலைப்பாடாக கருத முடியாது. இதேபோல்தான் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட்டுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது காவல்துறை குண்டர் சட்ட வழக்கு பதிவு செய்ததை உடனே‌ தமிழக அரசு நீக்கியது" என்றார்.

மேலும் படிக்க | Ennore Gas Leak: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு... மாசு கட்டுப்பாட்டு வாரியம் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News