கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணிநீக்கம் - உண்மை என்ன?

Coimbatore Woman Bus Driver Sharmila: கோவையில் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா, திமுக எம்பி கனிமொழியை சந்தித்த சில மணிநேரங்களில் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்த பின்னணியை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 23, 2023, 04:39 PM IST
  • கனிமொழியிடம் பெண் பயிற்சி நடத்துனர் டிக்கெட் கேட்டுள்ளார்.
  • இதை தொடர்ந்து, ஓட்டுநர் ஷர்மிளாவுக்கும், நடத்துனருக்கும் வாக்குவாதம் வந்துள்ளது.
  • ஷர்மிளா இதனை விளம்பரத்திற்காக செய்வதாக பேருந்து மேலாளர் குற்றஞ்சாட்டு
கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணிநீக்கம் - உண்மை என்ன? title=

Coimbatore Woman Bus Driver Sharmila: தனியார் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம்! மற்றொரு பெண் நடத்துனரை பணியில் அமர்த்தியதால் வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்கியதாக பேருந்து நிர்வாகத்தினர் ஷர்மிளா மீது குற்றச்சாட்டு!

கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. பெண் பேருந்து ஓட்டுனர் ஆன இவர் கோவை காந்திபுரம் முதல் சோமனூர் செல்லும் வி.வி என்ற தனியார் பேருந்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் சமூக வலைதளங்களில் பிரபலமான நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் பயணம் செய்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கனிமொழியிடம் டிக்கெட் கேட்ட ஓட்டுநர்

இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் இன்று காலை காந்திபுரத்தில் இருந்து ஹோப்ஸ் வரை பயணம் செய்தார். கனிமொழி பயணத்தின் போது அந்த பேருந்தில் பணியாற்றி வரும் பெண் பயிற்சி நடத்துனர் கனிமொழி எம்பி இடம் பேருந்து பயணத்திற்கான பயண சீட்டு கேட்டுள்ளார் இதைத்தொடர்ந்து கனிமொழி சிரிப்புடன் தனது உதவியாளர் மூலம் டிக்கெட் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து கனிமொழி ஹோப்ஸ் பகுதியில் இறங்கி வாழ்த்துக்களை தெரிவித்து சென்றுவிட்டார்.

வாக்குவாதம் 

அப்போது ஷர்மிளாவும் பேருந்தில் இருந்து இறங்கிவிட்டார். இந்த நிலையில், மீண்டும் பேருந்தில் ஏறிய ஷர்மிளா 'என்னை சந்திக்க வந்த கனிமொழி எம்.பியிடம் ஏன் டிக்கெட் கேட்டீர்கள்' பெண் பயிற்சி நடத்துனரிடம் கேட்டுள்ளார். இது இவர்களுக்குள் வாக்குவாதமாக மாறி உள்ளது. 

மேலும் படிக்க | போதை மாநிலமாக மாறும் தமிழ்நாடு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இதைத் தொடர்ந்து ஷர்மிளா காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு சென்று பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணு இடம் நடந்ததை தெரிவித்தார். அப்போது ஷர்மிளாவின் தந்தையும் உடன் இருந்துள்ளார். இதன்பின், ஷர்மிளா கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பணியில் இருந்து தன்னை பேருந்து உரிமையாளர் நீக்கிவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.

கனிமொழியை அவமரியாதை செய்தாரா?

இதுகுறித்து அவர் கூறும்போது,"புதிதாக நியமிக்கப்பட்ட பெண் நடத்துனர், கனிமொழியிடம் ஒரு மாதிரியாக பேசினார். இது தொடர்பாக பேருந்தை காந்திபுரத்தில் நிறுத்திவிட்டு முதலாளியிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் என்னை விளம்பரத்திற்காக இதை செய்கிறாய் என்றார். உரிமையாளர் என்னை வேலையை விட்டு நிறுத்தி விட்டார். கனிமொழியை மரியாதை குறைவாக பேசியதால், நான் அவர்களுக்காக நிர்வாக தரப்பில் பேசியதால் என்னை நிறுத்திவிட்டனர். கனிமொழி வருவது தொடர்பாக நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்திருந்தேன். ஆனால் நிர்வாகத்தினர் நான் தெரிவிக்கவில்லை என்கிறார்கள்" என்றனர்.

'திரும்பி வந்தாலும் சேர்த்துக்கொள்வோம்'

ஷர்மிளாவின் குற்றச்சாட்டு தொடர்பாக துரைக்கண்ணுவிடம் கேட்டபோது, "ஷர்மிளாவை பணியை விட்டு நான் விலக சொல்லவில்லை. இதில் குழப்பங்கள் ஒன்றுமில்லை. ஷர்மிளா என்னிடம் பெண் நடத்துனர் தொடர்பாக கனிமொழி எம்பி வந்தபோது டிக்கெட் கேட்ட விவகாரம் குறித்து புகார் அளித்தார். அப்போது நான் விசாரிக்கிறேன் என்றேன். பெண் நடத்துனரை வரச்சொல்லியிருந்தேன். ஆனால் ஷர்மிளா வேலையை விட்டு நிற்பதாக தானாக தெரிவித்து சென்றார்.

அவர் மீண்டும் பணிக்கு வந்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன். அவராகத்தான் பணிக்கு வரவில்லை என்று தெரிவிக்கிறார். மேலும் கனிமொழி எம்பி வருவது தொடர்பாக என்னிடம் ஷர்மிளா தெரிவிக்கவில்லை. முன்னமே தெரிந்திருந்தால் இது போன்ற பிரச்சனைகள் வராதவாறு ஏற்பாடு செய்திருப்பேன்" என்றார்.

பெண் நடத்துனர் கூறியது என்ன?

இந்த நிலையில், புதிதாக பணியில் சேர்ந்த பெண் நடத்துனர் அன்னத்தாய் பேசும்போது,"எனது கடமையை செய்தேன். டிக்கெட் கேட்டேன். கனிமொழி எம்.பி., சாதாரணமாக சிரித்துக் கொண்டுதான் பேசினார். நான் புதிது எனது அனுபவத்தில் எனது கடமையை செய்தேன். ஆனால் ஷர்மிளா தான் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் மன்னிப்பு கேட்டும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை. கனிமொழி அவர்களிடம் தொடர்பு எண் கேட்டேன். அவர்கள் பி.ஏ நம்பர் கொடுத்தார். ஷர்மிளா தான் கோபித்துக் கொண்டார் என் மீது தவறு இல்லை" என தெரிவித்தார்.

விளம்பரத்திற்காக இதை செய்தாரா ஷர்மிளா? 

இதைத் தொடர்ந்து பேசிய பேருந்தின் மேலாளர் ரகு,"ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் பெண் நடத்துனரை நியமித்தது அவருக்கு பிடிக்கவில்லை. தன்னோடு பெண் நடத்துனர் இருந்தால், தனக்கான விளம்பரம் குறைந்துவிடும் என என்னிடம் தெரிவித்து அவரை இந்த பேருந்தில் இருந்து நீக்க வற்புறுத்தினார். ஆனால் நாங்கள் ஷர்மிளா போல இவருக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளோம். 

ஆனால் ஷர்மிளா இந்த பெண் நடத்துனர் வந்ததால் பிடிக்காமல் ஏற்கனவே கடந்த ஒரு வாரமாக பணிக்கு வராமல் விடுப்பு எடுத்து வருகிறார். இன்று கனிமொழி வருவதால் பணிக்கு வந்தார். தற்போது வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்கி செயல்பட்டுள்ளார்" என குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க | சி.வி.சண்முகத்துக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News