திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு!!

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது!!

Last Updated : Mar 22, 2019, 10:11 AM IST
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு!! title=

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது!!

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றிபெற்றதை எதிர்த்து, திமுக வேட்பாளர் சரவணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாலேயே தாம் தோல்வி அடைந்ததாக குறிப்பிட்டிருந்த சரவணன், அதிமுக வேட்பாளரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரினார்.

அப்போலோ மருத்துவமனையில் சுய நினைவில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா, வேட்புமனுவில் கைரேகை இட்டது தொடர்பாக சரவணன் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த வழக்கில் தேர்தல் அதிகாரிகள் பலர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்த நிலையில், கடந்த ஆண்டு அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மாரடைப்பால் காலமானார்.

அவரது இறப்புச் சான்றிதழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். இதையடுத்து, திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க உத்தரவிட கோரி திமுக சார்பில் டாக்டர் சரவணன் தரப்பில்  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன் முறையீடு செய்யப்பட்டது .நாளையே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதி வேல்முருகன், வழக்கு நிலுவையில் இருப்பதால், தேர்தல் நடத்த கூடாது என இந்த வழக்கில் இதுவரை உத்தரவிடவில்லையே என தெரிவித்தார். உடனே தேர்தல் வழக்கில் தீர்ப்பு அளிக்க முடியாது என்றும், வழக்கின் தீர்ப்பை வரும் இன்று வழங்குவதாகவும் தெரிவித்தார்.

 

Trending News