Monkeypox: மேலும் 23 நாடுகளில் பரவும் குரங்கு அம்மை; WHO விடுக்கும் முக்கிய எச்சரிக்கை

Monkeypox: குரங்கு அம்மை நோய் இப்போது உலக அளவில் ஒட்டுமொத்த பொது சுகாதாரத்திற்கு "மிதமான ஆபத்தை" உருவாக்குகிறது என்றும் WHO எச்சரித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 30, 2022, 09:00 AM IST
  • குரங்கு அம்மை என்பது பெரியம்மை போன்ற ஒரு அரிய வைரஸ் தொற்று ஆகும்.
  • குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்.
  • மருத்துவ சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இந்த நோய் பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும்.
Monkeypox: மேலும் 23 நாடுகளில் பரவும் குரங்கு அம்மை; WHO விடுக்கும் முக்கிய எச்சரிக்கை title=

உலக சுகாதார அமைப்பு (WHO) ஞாயிற்றுக்கிழமை (மே 29, 2022) குரங்கு அம்மை வைரஸ் பரவல், புதிதாக மேலும் 23  நாடுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதுவரை மொத்தம் 257 உறுதிப்படுத்தப்பட்ட  தொற்று பாதிப்புகளும், உறுதிப்படுத்தப்படாத அறிகுறிகள் காணப்படும் 120 பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறியது. 

குரங்கு அம்மை நோய் இப்போது உலக அளவில் ஒட்டுமொத்த பொது சுகாதாரத்திற்கு "மிதமான ஆபத்தை" உருவாக்குகிறது என்றும் WHO எச்சரித்துள்ளது.

"இந்த வைரஸ், இளம் குழந்தைகள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்கள் போன்ற கடுமையான நோய்கள் தாக்கக்கூடிய அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு பரவினால், பொது சுகாதார ஆபத்து அதிகமாகிவிடும்" என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மே 26 நிலவரப்படி, புதிதாக 23 நாடுகளில் இருந்து மொத்தம் 257 உறுதிப்படுத்தப்பட்ட தொற்று பாதிப்புகள் மற்றும் 120 சந்தேகத்திற்கிடமான தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. எனினும் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று WHO தெரிவித்துள்ளது. தற்போது தொற்று பரவல் உள்ள நாடுகளிலும்,  தொற்று இல்லாத நாடுகளில் மேற்கொள்ளும் சோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாலும், மேலும் தொற்று பாதிப்புகள் பதிவாகும் என்று எதிர்பார்ப்பதாகவும் உலக் சுகாதார நிறுவனம் கூறியது.

 மேலும் படிக்க | குரங்கு காய்ச்சல் தொடர்பாக இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்

குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க, பின்வருவனவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று WHO கூறியது:

1. குரங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு துல்லியமான தகவலை வழங்குதல்.

2. தொற்று ஆபத்தில் உள்ள குழுக்களிடையே மேலும் பரவுவதை தடுத்து நிறுத்துதல்.

3. முன்னணி சுகாதார பணியாளர்களை பாதுகாத்தல்.

மேலும் படிக்க | Monkeypox: குரங்கு அம்மை சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது; எச்சரிக்கும் WHO 

குரங்கு அம்மை நோய் என்றால் என்ன?

குரங்கு அம்மை என்பது பெரியம்மை போன்ற ஒரு அரிய வைரஸ் தொற்று ஆகும். இது முதன்முதலில் 1958 ஆம் ஆண்டில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்ட குரங்குகளில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 1970 ஆம் ஆண்டில் மனித குரங்கு காய்ச்சலின் முதல் தொற்று பாதிப்பு பதிவாகியது. இந்த நோய் முதன்மையாக மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல மழைக்காடு பகுதிகளில் ஏற்படுகிறது. இந்த வைரஸ் Poxviridae குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் பெரியம்மை மற்றும் கவ்பாக்ஸ் நோயை ஏற்படுத்தும் வைரஸ்களும் அடங்கும்.

குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?

காய்ச்சல், சொறி மற்றும் வீங்கிய நிணநீர் கணுக்கள் ஆகியவை பொதுவான அறிகுறிகள் ஆகும்.  பல மருத்துவ சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இந்த நோய் பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும். கடுமையான தொற்று பாதிப்பும் ஏற்படலாம். சமீபத்திய காலங்களில், தொற்றினால் ஏற்படும் இறப்பு விகிதம் சுமார் 3-6 சதவிகிதம் என்று கூறப்படுகிறது. ஆனால் 10 சதவிகிதம் வரை இருக்கலாம். எனினும்,  தற்போதைய பரவலில் இறப்புகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குரங்கு அம்மை வைரஸ் பரவும் விதம்

பாதிக்கப்பட்ட நபர் அல்லது விலங்குடன் நெருங்கிய தொடர்பில் வருதன் மூலம் அல்லது வைரஸால் தொற்று உள்ள பொருட்கள் மூலமாக குரங்கு அம்மை வைரஸ்  மனிதர்களுக்கு பரவுகிறது. இது எலிகள்,  அணில் போன்ற கொறித்துண்ணிகளால் பரவுவதாக கூறப்படுகிறது.

குரங்கு அம்மை புண்கள், உடல் திரவங்கள், சுவாசம் மூலம் வெளியேறும் நீர்த்துளிகள் மற்றும் படுக்கை போன்ற அசுத்தமான பொருட்கள் மூலம் பரவுகிறது.

இந்த நோய்த்தொற்றுகளில் சில பாலியல் தொடர்பு மூலம் பரவக்கூடும் என்றும் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஓரினச்சேர்க்கையாளர்கள் அல்லது இருபாலினராக அடையாளம் காணும் நபர்களுக்கு ஏற்படும் தொற்று பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாக WHO கூறியது.

இருப்பினும், இந்த வைரஸ் பெரியம்மை நோயை விட குறைவான தொற்று மற்றும் குறைவான கடுமையான நோயை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

குரங்கு அம்மை நோய்  சிகிச்சை 

பெரியம்மை ஒழிப்புத் திட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளும் குரங்கு காய்ச்சலுக்கு எதிரான பாதுகாப்பை அளித்தன. புதிய தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று நோயைத் தடுப்பதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பெரியம்மை சிகிச்சைக்காக உருவாக்கப்பட்ட ஒரு ஆன்டிவைரல் மருந்து குரங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க உரிமம் பெற்றுள்ளது என WHO தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய குரங்கம்மை...எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News