காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களில் இன்று அதிமுக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அதை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகின்றது. இந்நிலையில் மத்திய அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.


சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை இந்தப் போராட்டம் நடைப்பெற்றது. அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் எஸ்.கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, தி.நகர் சத்தியா, வி.என்.ரவி, டி.ஜி.வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


மாலை 5 மணியளவில் இந்த உண்ணாவிரதப் போராட்டமானது முடிவடைந்த நிலையில் போராட்டத்தின் போது பொதுமக்களிடையே முதல்வர் எடப்பாட பழனிசாமி பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது...


"காவிரி பிரச்னையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பிலும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து வருகிறோம். காவிரி பிரச்சனையில் விவசாயிகளுக்கு திமுக அநீதி இழைத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்தபோதே திமுக அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்கலாம்; காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறுவோம் என திமுக கூறியிருந்தால் அன்றே வாரியம் அமைக்கப்பட்டிருக்கும்" என தெரிவித்தார்.