பொறியியல் விண்ணப்ப கட்டணத்தினை DD-ஆக செலுத்தலாம்!
பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பத்திற்கான கட்டணத்தை வரைவோலையாக செலுத்தலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் இன்று தெரிவித்துள்ளது.
பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பத்திற்கான கட்டணத்தை வரைவோலையாக செலுத்தலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் இன்று தெரிவித்துள்ளது.
பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பிக்கும் பணி தற்போது நடைப்பெற்று வருகிறது. முன்னதாக கடந்த மே 3 அன்று பொறியியல் பிரிவு படிப்பிற்கான ’ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் பணி துவங்கியது.
முன்னதாக பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் உள்ளிட்ட பலர் மனு தாக்கல் செய்தனர். ஆன்லைன் மட்டும அல்லாமல் ஆப்லைன் முறையிலும் விண்ணப்பங்களைப் பெற உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிறுந்தார்.
நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பொறியியல் விண்ணப்பக் கட்டணத்தை வரைவோலையாகவும் செலுத்தலாம் என்றும், அதை உதவி மையங்களில் கொடுக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
அண்ணா பல்கலைக்கழகம் பதிலைப் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யக் கூறி வழக்கைப் பிற்பகலுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இதனிடையே மாலையில் மீண்டும் ஆஜரான வழக்கறிஞர், வரைவோலையாக கட்டணத்தைப் பெறுவதில் தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் கூறப்பட்டது.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் மாணவர்கள் கஷ்டப்படக்கூடாது என்பதால் தான் மாற்று கருத்துகளை நாங்கள் தெரிவித்தோம் என்று கூறினர். பின்னர், ‘விண்ணப்பதாரர்களிடம் இருந்து கட்டணத்தை ரொக்கமாக ஏன் பெறக்கூடாது?’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதற்கு இன்று அண்ணா பல்கலைக்கழகம் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பத்திற்கான கட்டணத்தை வரைவோலையாக செலுத்தலாம் என்று உயர் நீதிமன்றத்தில் அண்ணா பல்கலக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் வரும் 18-ம் தேதிக்குள் வரைவோலையை ஏற்றுக்கொள்ளும் வகையில் மென்பொருள் மாற்றியமைக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.