போர் நிறுத்தத்தை மீறி சிரியா அரசு ரசாயன தாக்குதல்: 70 பேர் பலி!!
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள கடைசி நகரமான டூமா நகரில், சந்தேகத்திற்குரிய வகையிலான ரசாயன தாக்குதலில் 70 பேர் பலியாகி உள்ளனர்.
சிரியாவில் 2012 முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இருப்பினும், இரண்டு மாதங்களாக கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் வசிக்கும் இடங்களின் மீது சிரியா மிகக் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.
இதில், அப்பாவி பொது மக்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பார்த்து உலகமே கலங்கியது. இதைத் தொடர்ந்து உலக நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாகத் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால், மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்நிலையில், சிரியாவில் அதிபர் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், சிரியாவின் கிழக்கு கவுடா பகுதியில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான டூமா நகரில், நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலில் பொது மக்கள் 70 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கு நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள், மீட்பு படையினர் கூறியுள்ளனர்.
ஹெலிகாப்டர் ஒன்றின் வழியே சரீன் என்ற நச்சு ரசாயன பொருள் அடங்கிய வெடிகுண்டு வீசப்பட்டிருக்க கூடும் என அமெரிக்க தொண்டு அமைப்பு ஒன்று குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. எனினும் பலி எண்ணிக்கை 180ஐ தொட்டிருக்கும் என்றும், ஆனால் இரவு நேரம் மற்றும் தொடர் குண்டு வீச்சு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.